Wednesday, December 23, 2009




சிக்கிமுக்கி.காம்
சமூக கலை இலக்கிய இதழ்
டிஸம்பர் 2009 – இதழ் 2



கவிதைகள்



சிறு கதைகள்


அஜயன் பாலா
உமா சக்தி
லட்சுமி சரவணகுமார்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்
தாரா கணேசன்
பெருந்தேவி
கட்டுரைகள்
சாந்தாராம் [ஆந்தெரே ப்ரேடன் - ஆக்டேவியா பாஸ்]
இன்பா சுப்ரமணியம்


தொடர்கதை


கரிகாலன் - நிர்மலாவைக் கடப்பது

கலை

தேனுகா – பியட் மோந்திரியான்

ஓவியம்
ஓவியக்கண்காட்சி

[Light Cascading Woods]

(காந்திராஜன், மணிவண்ணன், புருஷோத்தமன், நடராஜன்

புத்தக விமர்சனம்
ராணி திலக்
[க. மோகனரங்கன் கவிதைகள்]


Friday, November 20, 2009


சிக்கிமுக்கி.காம்



நவம்பர் 2009 - இதழ் 1




I. கவிதைகள்


ஞானக்கூத்தன்
எஸ். வைத்தீஸ்வரன்
கலாப்பிரியா
அய்யப்பமாதவன்
ரவிசுப்ரமணியன்
சுதீர் செந்தில்
வா மணிகண்டன்
சக்தி ஜோதி
ழீலாட்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அசதா

(ரஷ்ய மூலம்: வெலரி நுகாதவ்)

கட்டுரை
பீர் முகம்மது , துபாய்
(எண்ணெயும் போரும் - தாரிக் அலியின் கோட்பாடுகள் குறித்து)


மொழிபெயர்ப்புக் கட்டுரை

தாரா கணேசன்
(நோபல் கவிஞன் ஷெமஸ் ஹீனி)

சிறுகதை

பிரபஞ்சன்

வண்ணதாசன்


தொடர்கதை

கரிகாலன்

நேர்காணல்

யவனிகா ஸ்ரீராம்
நேர்காணல் : தாரா கணேசன்

நூல் விமர்சனம்

இசை
(அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’ விமர்சனம்)

கலை - ஓவியம்
சிறப்புக்கட்டுரை

தேனுகா

சிக்கிமுக்கி.காம் - அறிமுகம்

சிக்கிமுக்கி.காம்


வணக்கம்!

தற்போது உலகம் முழுவதும் இணைய தளங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நமது தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் அதைச் சார்ந்த கட்டுரைகள் அனைத்தையுமே உலகமெங்கும் வசிக்கக் கூடிய நமது தமிழர்கள் இணையதளங்களின் மூலமாகவே வாசிக்கிறார்கள். சில சமயங்களில் புத்தகங்கள் அல்லது மாத இதழ்கள் அவர்களுக்குச் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாத போதும் கூட விரைவாக இணைய தளம் அத்தேவையைப் பூர்த்தி செய்கின்றது.

அதன் அடிப்படையில், தொடர்ச்சியாக வரும் இணையதளங்கள் யாவற்றையும் நாம் உற்று நோக்கும் போது அவை இலக்கியப் படைப்பிற்கான ஒரு பரந்த வெளியாக இருந்த போதிலும், உலகளாவிய இலக்கிய அறிமுகங்கள், நவீன உள்ளூர் படைப்புகள், முக்கிய படைப்பாளிகளின் நேர்முகங்கள், துணிச்சலான விமர்சனங்கள், மாற்றுக்கருத்து மிக்க படைப்புகள் என பல்வேறு தளங்களில் இன்னும் தீவிரமாய் இயங்க வேண்டிய கட்டாயத்தையும் நம்மால் உணர முடிகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழில் இருந்தும் பிறமொழிகளுக்கும் பரிவர்த்தனை நடந்துகொண்டிருக்கிறது. இவற்றில் சமகாலத்திற்கான படைப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டமைக்கு சான்றுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.. தமிழின் பல படைப்புகள் இன்று உலகப் இலக்கியங்களுக்கு இணையாக மொழித்திறனும் விரிந்த உலகளாவிய தளத்தில் இயங்கக்கூடிய வீரியம் மிக்கவையாகவும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தகுந்தவையாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

இவை மட்டுமின்றி, தமிழில் புதிய படைப்பாளிகள் மற்றும் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகிய யாவரையும் மொழிவழியே ஒருங்கிணைத்து இலக்கியக் கலாசாரம் எவ்வாறு தமிழில் கடந்த ஐம்பது வருடங்களாக இயங்கி வருகிறது என்பது குறித்தும் அதன் தொடர்ச்சியாக உருமாறிவரும் பல்வேறு புதிய போக்குகளைக் குறித்தும் ஒரு ஆய்வு ரீதியான பார்வையை வழங்க வேண்டிய அவசியத்தையும் நம்மால் உணர முடிகிறது.

எனவே மேற்சொன்ன கருத்துகளை முழுவதுமாய் உள்வாங்கி, தமிழில் புதிய முயற்சியாக “சிக்கிமுக்கி” என்ற இணைய இதழை தமிழ் இலக்கிய உலகத்திற்கும், அதன் படைப்பாக்கத்திற்கும் ஒரு புதிய வெளியாக உருவாக்கி நவம்பர் 2009ல் அதனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம்.

”சிக்கிமுக்கி” என்ற இந்த இணைய இதழ் தனது செயல்திட்டமாக, உலக செவ்வியல் பண்புமிகுந்த இலக்கியங்கள் தொட்டு தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளைத் தூண்டும் வண்ணமும், தத்துவார்த்தக் கோட்பாட்டு உருவாக்கங்களை மையமாக்கி ஒரு புதிய இலக்கை நோக்கி இலக்கியத்தை நகர்த்தும் வண்ணமுமாக தனக்குள் உறுதி கொண்டிருக்கிறது.

ஆகவே உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளும், வாசகர்களும் இந்த இணைய இதழில் பங்கேற்றும் புதிய மாற்றுக்கருத்துள்ள தங்களுடைய படைப்புகளை அனுப்பியும் எமது இலக்கிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
”சிக்கிமுக்கி” தாரா கணேசன்

Monday, October 26, 2009


கடவுளின் மறுவுரு

எதையும் எழுதாமலேயே நேரம் கடந்துவிட்டது
கடந்தது குறித்து வருந்துவதிலேயே
இன்றும் கழிந்துவிடும்
கடந்தது இறந்தது.
இறந்தது கடந்தது.

நேரத்தின் கலத்தைச் செலுத்துபவன் எவன்.
யமன் ஒன்றும் நமது நேரக்காப்பாளன் இல்லை
மரணம் கூடக் கடைசி மணி அல்ல,
இருப்பினும் வாழ்வு
மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது

பசியெடுக்கும் போது விழுங்கும்
அந்த விநோத விலங்கைப் பார்திருக்கிறாயா நீ

வாழ்வின் சகல துடிப்புகளுடனும் உடல்
தலை புழுத்த மண்டையோடு
வலக்கையில் சாத்தானின் வால் போன்றொரு தூண்டில்
இடக்கையின் மணிக்கட்டில் கிண்கிணித் தொட்டில்
கண்களின் பொந்துகளில் ஒளிந்திருக்கும் முற்றுபெறா இரவு
மூன்றாம் கை வலியற்றுத் உயிர் துண்டிக்கும் கோடாரி
மூன்று கைகளும் மூன்று காலங்குறிக்க
தோளில் காகத்துடன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்திருந்த அதனை
ஒரு புராதனத்தின் அகழ்வில் சந்தித்ததாகக் கனவில் வந்தது

உரையாடிப் பிரிந்த போது கரப்பன்கள் ஊர்ந்த வாயுடன் முத்தமிட்டது
நிலம் நடுங்கிப் பிளந்த பின்னும் உயிரோடிருந்தேன்

ஆயினும் அக்கணத்தில்
வாழ்வின் தத்துவக் குழப்பங்கள் அனைத்தையும் முடித்து வைக்கும்மரணத்தைக் கடவுளென்று அறிந்துகொண்டேன்

(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

வெள்ளை ஒயின்

புயல் நாளொன்றில்
சீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்
கண்களுக்குப் புலப்படா நட்சத்திரங்களென
கரைமீதிருந்தோம்

என் மீதான கவிதையொன்றை
அவன் சொல்லத் தொடங்கிய போது
கண்ணாமூச்சியாடிக் களைத்த நண்டுகள்
வளைகளை மறந்து அவன் காலருகே
கொடுக்குகள் தூக்கி நின்றன

கரங்களிலிருந்த கோப்பையின்
வெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி
கலந்து அருந்தினோம்

அவன் நுனி நாக்கு சர்ப்பமென
மேலன்னம் துழாவியதில்
மூக்கின் மீதோடி உதட்டில் இறங்கிய

மழைத்துளியில்
ஆதிரத்தத்தின் வாசனை

காற்றும் மழையும் கடலும் மதுவும்
எதிரெதிரே மோதிய அலைகளில்
இனமழிந்த விலங்குளின் பெருயுத்தம்

யாரோ பெரிய பெரிய பாறைகளை
கடலின் ஊடே எறிய நடுங்கின சொற்கள்

மெல்லிய உள்ளங்கைப் பற்றுதலில்
திடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு

கரை சூழ்ந்த கடலில் கரங்கள் பிணைத்து
உயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்
நீந்தினோம் புயலின் பயமற்று

பதற்றமுடன் நண்டுகள்
வளையில் இறங்கிக்கொண்டிருந்தன
(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

ஓவியத்தில் உறைந்தவள்

ஏதேனின் விழுதுகள்
நம்மை பிணைத்திருந்தன
ஆன்மாவின் ஓவியக்கித்தானில்
உன்னுள் நுழைந்து ஆக்கிரமிக்கிறேன்
எனதிந்த வார்த்தைகளின் வழியே
கடந்து போன காலம் மறுபடியும்
நம்மை ஏந்திச் செல்கிறது பின்னோக்கி
மீண்டும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட
பூர்ணசந்த்ரோதயப் பொழுதில்
நமது முதல் சந்திப்பு
முதல் ஸ்பரிஸம், முதல் முத்தம்
எல்லையற்று விரியும் தொடுவானில்
உனது திளைப்பின் பார்வையில் அலை
இருவரும் இடையறா முத்தங்கள் பகிரும்
ராஃபலின்
[1] கியூபிட்[2]களாய் இருந்தோம்
மாலையின் மஞ்சள் தூரிகை
உன் அருகாமையின்
கதகதப்பை தீட்டிய போது
என்னில் உருக்கிய பொன்னின்
மினுமினுப்பு கூடியது
பூங்காற்றை வீsசி படபடத்தன
இளவேனில் இரப்பைகள்
உதிர்ந்த பன்னீர் பூக்களின் முன்னிரவில்
தழுவிப்பிணைந்த நம் உடல்வழியே
இசை நதியாகியது
மிதந்தபடியே நாம்
இரவை நெய்து முடித்திருந்தோம்
ஏதேன் தன் முத்தங்களை
இன்னும் விதைத்தபடியே இருக்கிறது

(நன்றி: பவளக்கொடி, அக்டோபர், 2009)

[1] ராஃபல் ஒரு மறுமலர்ச்சிக்கால ஓவியன்,
[2] கியூபிட் ஒரு தேவ குழந்தை

Tuesday, October 6, 2009


கடற்கரையில் நேற்று மாலை கடவுளைச் சந்தித்தேன்
அலைகளின் நுரைபோலத்தான் அவரும் இருந்தார்
உரையாடிக்கொண்டே கரையோரம் நடந்த போது
வரமொன்று தரச்சொல்லிக் கேட்டேன்
கேட்கலாமெனக் கரம் பிடித்தார்
உலோகத்தின் குளிர்ச்சியுடனிருந்தது அவரது கரம்
நிமிர்ந்து விழிகளுக்குள் பார்வையைச் செலுத்தினேன்
நெருப்பின் வெப்பம் என் நாளங்களில் நகர்ந்து பரவியது
சில நட்சத்திர மீன்கள் கரையேகி வந்து எங்கள் காலருகில் வீழ்ந்தன
கடற்பறவைகள் எங்களது பேச்சைக் கேட்கும் விழைவில் தாழப் பறந்தன
அந்த உயர அலைகளையும் கரை பரந்த மணலையும்
மீன்களையும் பறவைகளையும் சாட்சியாய் வைத்து
என் தோழமை அனைத்தும் எப்போதும் நலம் வாழக் கேட்டேன்
நான்கு நாட்களுக்கு மட்டுமே வரம் பலிக்கும் என்றார் புதிர்ப் புன்னகையுடன்
எனில் ஒரு வசந்தம், ஒரு கோடை, ஒரு இலையுதிர், ஒரு பனி
என பருவத்திற்கொன்றாய் நான்கு நாட்கள் கேட்டேன்
மறுத்தவர் நான்கல்ல மூன்று கேள் என்றார்
எனில், நேற்றும் இன்றும் நாளையும் என தயக்கமின்றிச் சொன்னேன்
இல்லை, இரண்டு நாட்கள் எனக்கூறி விலகி நின்றார் கடவுள்
சரி ஒரு வெளிச்சப் பகல் நாளும் ஒரு இருள் நிறைந்த இரவு நாளும் என்றேன்
இன்னும் சற்று விலகியவர்
இல்லை, ஒர் நாள் மட்டுமே என்றார் புன்னகையற்று
வருத்தமேதுமின்றித் தலையசைத்தேன்
கேள்வியாய்ப் புருவம் உயர்த்தி அந்நாள் எந்நாள் என்றார்


கடலில் மூழ்கும் சூரியனைப் பார்த்தவாறே
‘ஒவ்வோர் நாளும்’ என அழுத்தமாய் உரைத்தேன்
வாய்விட்டுச் சிரித்த கடவுள்
அப்படியே ஆகட்டுமென ஆசீர்வதித்து மறைந்தார்.
ஆரத் தழுவிய் ஸீகல் பறவைகள்
உச்சந்தலையில் முத்தமிட்டுப் போயின

Sunday, October 4, 2009



கவிதைக்கான மனநிலையை
பருவங்கள் கொண்டுவருகின்றன
என்பதை மறுப்பதற்கில்லை
துரிதமாய் ஒலிக்கும் துக்கத்தின் தொனியுடன்
உனது சன்னமான சொற்களை கேட்டு
குளிர் விரைத்த எனதுடல் சூடுணர்கிறது
பனிமூட்டம் போன்று கவிந்திருக்கும்
புத்தகங்களும் இசையும் கவிதையுமான
இப்பருவகாலத்தில்

கவிதையோர் அடிமையாக்கும்
துர்ப்பழக்கமென்றே நினைக்கிறேன்
தீவிர சிந்தனையின் பிடியிலுள்ளோர்
அனைவருமே வாழ்க்கைக்கும் கவிதைக்கும்
அடிமைகளாயிருக்க
இரண்டுமே கைவிட இயலா
துர்ப்பழக்கமாயிருக்கின்றன

இன்னும் வலிமையோடிருப்பதற்க்கான
ஆற்றலிருக்கிறது என்னிடம்.
அர்த்தமற்ற அவசரங்களில்
என்னை தொலைத்துவிட்டுப் புலம்புகிறேன்
நேரம் ஒன்றும் ஓடிப்போகப் போவதில்லை
காலம் சுழன்று மறுபடி கொண்டுவரும்
இதே பருவங்களை என்னிடத்து

என்னுடைய மற்றெல்லா அலுவல்களையும்
முடித்துக் காத்திருக்கலாம் நம்பிக்கையுடன்
சொல்லாது விடப்பட்டவையே அதீத இசைமிகு
சொற்களாயிருக்கும் எப்போதும்

வாழ்வின் நாராசங்களுடன் இசையைக் கலப்பதும்
ஓர் இனிய பாடலாகவே இருக்கும்

Wednesday, September 9, 2009



உறக்கமற்ற இரவுகளில்
நான் கவிதை எழுதுவதில்லை
தொடர் புகைப்பதில்லை
மது மிடறுகளும் கிடைப்பதில்லை
என் கழுமரத்தைச் சுற்றும்
பருந்துகளின் நிழல்களை
விரட்டுவதற்குள்ளேயே
விடிந்துவிடுகின்றது
மற்றொரு பகலின் வதைமுகம்

Tuesday, September 8, 2009


பதறி விலகியோடும்படிக்கு என்ன நேர்ந்து விட்டது
சிலுவையில் நம்மை நாமே அறையும்படிக்கு தவறென்ன செய்தோம்
ஒரு வகையில் உனதிந்த மௌனம் தண்டனையல்ல, பரிசு
கேட்காத இசையெல்லாம் இனிதென்றான் கீட்ஸ்
பேசாத வார்த்தைகளால் ஆன மௌனம் எத்தனை கசப்பாய் இருக்கிறது
இருவரும் குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தியிருக்கலாம்
அல்லது பேருந்து நிலைய நிழற்குடை கீழ் சற்று உரையாடியிருக்கலாம்
நிர்பந்தகளின் நங்கூரமற்றும் நிரூபணங்கள் புயல்களற்றும்
நிழலை கொத்தும் பறவை போலிருக்கிறேன்
பிளவுற்ற மனதின் துயரம் உயிரை விழுங்குகிறது
ஒளிந்து விளையாடல் பரவசமெனினும்
எத்தனை பதற்றமளிக்கிறது தொடர்ந்து ஒளிந்திருப்பது
திரைக்கும் பின்னின்று நடத்தும் மௌன நாடகம்
நிபந்தனைகளற்ற அன்பை அலட்சியப்படுத்தி
என்னை அதிக துயரத்திற்கு உள்ளாக்குகிறது
உலகம் காலத்தை கிருஸ்துவுக்கு முன்னும் பின்னுமாய் பிரித்தது
நீயும் கூடஎனக்கு முன், எனக்குப் பின்னென
வாழ்வை வகுத்துக்கொண்டதாய்ச் சொல்கிறாய்
நீ நினைவழிந்து போன துஷ்யந்தனான பிறகு
இந்த அசாதாரணமான வார்த்தைகளில் எல்லாம்
நம்பிக்கை போய்விட்டது
நான் எழுதுபவையெல்லாம்
உனை வருத்தத்தில் ஆழ்த்தலாம்
அல்லது என் மீது வெறுப்பைக்கூட வளர்க்கலாம்
ஒருபோதும் நான் மன்னிப்பு கோரப்போவதில்லை
காதலின் மாயத்தை அருந்திய பின்பு
இதயம் மனது வார்த்தை ஆன்மா அனைத்தும்
உண்மையை மட்டுமே பேசுகின்றன
அழுது தீர்த்தாகிவிட்டது மகாசமுத்திரமாய்
நீல நிலா வந்து போய்விட்டது
நீலம்பாரிக்கும் மௌனத்தில் எனைப்
புதைத்துவிட்டும் போய்விட்டது
எவ்வித பதற்றமும் படபடப்புமற்ற
தெளிவுடனேயே நானிதனை எழுதுகிறேன்
புத்தரின் சிரிப்புடன் அமைதியாயிருக்கிறேன்
காதல் காமம் வாழ்வு கடமை மரணமென
அனைத்தையும் பார்த்து புன்முறுகிறேன்
ஆழமான வலி உனதென அறிவேன்
ஆனால் துயருரும் போதேனும்
அமைதியை நாடவில்லையெனில்
அமைதி தன் மதிப்பிழந்து விடுகிறது
அடிக்கடி நீயென்னை
ஆழ்கடலின்அமைதியென சொல்வதை
நினைவூட்டவில்லை நான்
வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை,
என்ன செய்வது
பல சமயங்களில்
மௌனமாயிருப்பது போலவே
சில சமயங்களில்
கர்ஜிப்பதுமாகவே இருக்கிறது
காயமுற்ற காதல்

Sunday, August 16, 2009




கருப்பு முகமந்திகள்
மரம் விட்டு மரம் தாவும் கணத்தில்
அந்தியின் மஞ்சள் விழுந்து முறிகிறது
அந்த நெடிய மரத்தின் மென்கிளைகள்
உதட்டில் அசைய அதன் நிழலில்
என் உயிர் உறையும் காலம்
மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்
சரிவுகளில் நேர்கோடற்றுத் துடித்துப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளின் நிறமிப் புள்ளிகளை
அழிக்கத் துவங்கியது இருளின் மாயம்
அடர்ந்த மலைகளிலிருந்து வன இசை அதிர்ந்து பெருக
எவருமறியா குகைக்கோவிலொன்றின்
மண்டபம் அழைத்தது நடனமாட
அதன் அகன்ற தூண்களிலிருந்து
நர்த்தகிகள் சதங்கை குலுங்க ஓடி
மரங்களின் அடர்வுக்குள் மறைந்து
கழற்றி எறிந்த கச்சைகளில் நெளியும்
வண்ணக்கோடுகளிலிருந்து ஆதி சேஷனின்
பிளவுண்ட ஆயிரம் நாவுகள் நீள்கின்றன
வெளிச்சம் பறவையாகி
இருளுக்குள் மறையும் கணம்
என்னுடல் ஈரமாகிக்கிடந்தது
நெளிந்துகொண்டிருந்தேன்
(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)





ஏற்கனவே இறந்திருந்தேன்
கண்ணாடிக்குள் யாருமற்ற பிம்பத்தில்
காதலைச் சொல்லும் எனது உடல்
சாலைகளில் துக்கம் பெருகியோட
உதிர்ந்த மலரின் வாசனை நகரெங்கும்
துக்கத்தில் ஒரு தாவரம் துளிர்த்து எழும்
மொட்டின் நோக்கத்துடன்
பொழுது விடிய இருக்கிறது





(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)

Sunday, August 9, 2009






கமலா தாஸ் எனும் கவிதை

தாரா கணேசன்

(நன்றி: உயிரெழுத்து, ஆகஸ்ட் 2009)

................... பிறகு நானொரு சட்டையும் என்
தம்பியின் கால்சாராயும் அணிந்து, தலைமுடியை மிகக்குறைத்து வெட்டிக்கொண்டு என் பெண்மையைத் தவிர்த்தேன்
புடவை அணி, பெண்ணாயிரு, மனைவியாயிரு
என்றார்கள் அவர்கள். பின்னல் வேலை செய்
சமையற்காரியாய் இரு, வேலைக்காரர்களுடன் சண்டையிடுபவளாய் இரு,
பொருந்து. தொடர்புடையவளாய் இரு, கத்தினார்கள் வகைப்படுத்துவோர்..........


ஒப்பற்ற மலையாள எழுத்தாளரும் கவிஞருமான கமலா தாஸின் ”ஒரு அறிமுகம்” (An Introduction) என்ற இந்தக் கவிதையின் வரிகள் பெண்ணின் இருத்தல் குறித்த துயரினை தெளிவாய் முன்வைக்கின்றன. சுவாரஸ்யமற்ற இருப்பில் பெண்ணைத் திணிக்க சட்டங்கள் வகுக்கும் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் கமலா தாஸ் ஒருபோதும் தன்னை அதனுடன் பிணைத்துக்கொள்ளாத சுதந்திரப் பறவையாகவே இருந்தார். ஆங்கிலக் கவிதைகளில் புலமை பெற்ற இவர் தனது அற்புதமான பெண்ணியக் கவிதைகளால் இலக்கியவானில் என்றும் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்பவர். இந்தியாவில் ஆங்கிலக் கவிஞர்களின் வரிசையில் முதன்மையான இடத்தைப் பெற்ற கமலா தாஸ், இலக்கியத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுப் பிரபலமடைந்தவர்.

அவ்ரது ஆங்கிலப் படைப்புகளில், ‘ஒன்லி தி சோல் நோஸ் ஹௌ டு சிங்’, ‘ஓல்ட் பிளேஹவுஸ்’, ‘மை ஸ்டோரி’, ‘சம்மர் இன் கல்கத்தா’, ‘தி டிசென்டன்ட்ஸ்’ ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மிகுந்த படைப்பாற்றல்மிக்க கவிஞரான கமலா தாஸை உலக புகழடையச் செய்தது இவரது சுய சரிதையான “என் கதை” (My Story) என்ற நூல் தான். கமலாதாஸின் ‘மை ஸ்டோரி’ பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருச்சூர் புன்னையார்குளத்தில் இலக்கியக் குடும்பத்தில் மார்ச் 31, 1934ல் பிறந்த கமலாவின் தாயார் பாலாமணியும் பிரசித்தி பெற்ற மலையாளக் கவிஞர். அதுமட்டுமின்றி கமலாவின் தாய்மாமனான நலாப்ட் நாராயண மேனனும் ஒரு புகழ்வாய்ந்த இலக்கிய ஆளுமையாகவே இருந்தவர். இலக்கியக் குடும்பப் பின்னணியும், தனிமைமிகு வாழ்வுச் சூழலுமே இவரை எழுதுகோல் எடுக்கத்தூண்டியது. தனது முதல் கவிதையினை 17ம் வயதில் எழுதிய கமலா ஆரம்ப நாட்களில் ‘மாதவிக்குட்டி’ எனும் புனைபெயரிலேயே எழுதத் தொடங்கினார். பரவலாக வாசிக்கப்பட்ட மாதவிக்குட்டியின் எழுத்துகள் மெல்ல மெல்ல வாசகர்களை தனது படைப்புகளின் வலைக்குள் சிக்க வைத்தன. அதன் பிறகு இவரது புகழின் வானம் விரியத் தொடங்கியது.

தன்னுடைய ஒரு நேர்காணலில் கமலா தாஸ் –
“எனக்கு அன்பு கிடைத்திருக்குமேயானால் நான் ஒருபோதும் எழுத்தாளராயிருக்கவே முடியாது. நான் வெறும் மகிழ்ச்சியான மனுஷியாக மட்டுமே இருந்திருப்பேன். எனக்குள் இருந்த ஏதோ ஒரு பலவீனமே நான் எழுதத் தொடங்கக் காரணமாயிருந்தது. நான் பலவீனமானவளென்றும், தாக்குதல்களின் இலக்காகவும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதனால் தான் கவிதைகளை எழுதத் தொடங்கினேன். கவிஞர்கள் ஓடுகளற்ற நத்தைகள், பயங்கரத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள், எளிதில் நொறுங்கிவிடுபவர்கள். உண்மைதான். கவிதை எனக்கு அதீதமான வலியைக் கொடுத்தது, சொல்லப்போனால் ஒவ்வோர் கவிதையும். ஒவ்வொரு கவிதையும் வலிகளிலிருந்தே பிறக்க, நான் அவ்வலியினைக் கவிதை மூலம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் நீ உன் வலியைப் பகிர்ந்து கொள்பவருக்காகவே வாழத் தொடங்குகிறாய். இருப்பினும் அப்படிப்பட்ட ஒரு பகிர்ந்து கொள்பவனை உன்னால் எங்குமே காண இயலாது. கவிஞன் எழுதிக்கொண்டேயிருக்கிறான். எழுத்தின் மூலம் தேடிக்கொண்டேயிருக்கிறான். தன் பகிர்வுக்கான இணையைக் கண்டடைந்ததும், கவிஞன் தேடல் முடிவுறும். கவிதையும் முடிவுறும்.” –
என்று மனந்திறந்து குறிப்பிட்டுள்ளார்.

உணர்வுகளின் பகிர்வுகளுக்காகவே எழுதத் தொடங்கிய கமலா தாஸின் சுய சரிதையான ‘என் கதை’, 1975ல் பிரசுரமான தினத்திலிருந்து இன்றுவரைக்கும் விற்பனையாகிக்கொண்டே இருக்கிறது. பதினேழாம் வயதில் ‘மாத்ருபூமி’யில் வெளியான முதல் கதையே அவரது படைப்பாக்கத்திற்கான முகத்துவாரமெனலாம். அற்புதமான கதையாடலும் மொழியாற்றலும் இவருக்கு கைவந்த கலையாயிருந்தது.

இலக்கியத்தின் மூலம் வாழ்வின் அனுபவங்களை, அசைபோடல்களை, வலிகளை, இருப்பின் அலுப்பை, தன் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். தன்னை விடவும் 15 வயது மூத்தவரான மாதவதாஸ் என்பவரை மணமுடித்த போது அவருக்கு வயது 15. இவரது கவிதைகள் கலகத்தன்மை மிக்கவையாகவும் மனந்திறந்த ஆன்மப் பதிவுகளாகவும் இருந்தன. உண்மையாகவே எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்படாத கலகக் கவிஞராகவே தனது வாழ்வைத் தனது விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டவராகவும் இருந்தார் கமலாதாஸ். தன்னை விமர்சிப்பவர்களைத் துணிச்சலாய் எதிர்க்கும் எதிர்வினையாளராகவும் இருந்தார். போலித்தனமற்ற உக்கிரமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் இவரது வெளிப்படையான உடல் அரசியல் குறித்த பெண்ணியக் கவிதைகள் மிகப் பெரிய விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான போதிலும் உலகப் பெண்களின் உரிமைக்கான குரலாகவும் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அவை அமைந்திருந்தன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு மிகப் பரந்த உணர்வின் வெளியைத் துல்லியமாய் தனது எழுத்துக்களில் பிரதிபலித்தார் கமலா தாஸ்.

கடுமையான விமர்சனங்களுக்கு இலக்கான இவரது கவிதைகள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனத்தைக் கவரும் வல்லமை படைத்தவையாகவே இருந்தன. தனது தனித்துவம் மிக்க எளிய மொழியினாலும் ஆழமான கவிதைகளின் மூலமாகவும் அர்த்தமற்ற இருப்பிலிருந்து தன்னைத் துண்டித்துகொண்டு சுதந்திரப் பறவையாகப் பறக்கவே விரும்பிய கமலா தாஸ் தனது 42ம் வயதில் எழுதிய ‘என் கதை’ எனும் தனது சுயசரிதை, பலரின் பழிப்புக்கு அவரை ஆளாக்கியது. இந்த நூல் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளின் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலில் கமலா தாஸ் பெண்ணுடலில் அழகியல் குறித்து மிக உக்கிரமாகவும் தத்துவ வீச்சுடனும் எழுதியிருக்கிறார்.
அவரது மனந்திறந்த உடல் அரசியல் கவிதைகள் பலரது எழுத்துகளுக்குப் புதிய பாதையினைக் காட்டியது என்பது மறுக்க இயலாத உண்மை. கூட்டுப் புழுக்களாயிருந்த பலரை அவரது எழுத்தின் வலிய கூடுகளை உடைத்து வெளிவரச் செய்தது. 1999-ல், தனது 65ம் வயதில் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின் தன்னை கமலா சுராயா என்று அறிவித்தார். அவரது இஸ்லாமிய மதத் தழுவல் பல வகையான விவாதங்களையும் அதிர்வுகளையும் உருவாக்கியது.
கமலா தாஸின் உணர்வுகளைத் தூண்டும் கவிதைகள் இருப்பு, நகர வாழ்வின் அவலம், அன்பிற்கான ஏக்கம், காமம் ஆகியவற்றைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கின்றன. சர்ச்சைக்குரிய பெண் கவிஞரான இவரது கவிதைத் தொகுப்புகள் இந்தியா, ஆஸ்திரேலியா, மற்றும் மேற்கு நாடுகளில் அதிக அளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ்-ஆசிய கவிதைப் பரிசினை 1963லும், கேரளாவின் சாகித்ய அக்காடமியின் விருதினை தனது மலையாளப் படைப்புகளுக்காக 1969லும், அச்சமற்ற படைப்பாளருக்கான சிமன் லால் விருதினை 1971லும், தமது ஆங்கிலக் கவிதைகளுக்கென இந்திய சாகித்திய அக்கடமி' விருதினை 1981லும், உலக ஆசியப் பரிசினை 1985லும் பெற்றார். 1984-ல் கமலா தாஸ் மார்க்ரெட் யோர்செனர், டோரிஸ் லெஸ்ஸிங் மற்றும் நாடைன் கோர்ட்மெர் ஆகெயோருடன் இலக்கியத்தின் நோபல் பரிசுக்கென பரிந்துரை செய்யப்பட்ட கவிஞருமாவார்.
கவிஞரும் எழுத்தாளருமாகச் சிறந்து விளங்கிய கமலா தாஸ் ஒரு ஓவியருமாக இருந்தார். அவரது பல ஓவியங்கள் கண்காட்சிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. கவிஞர் என்ற அடையாளத்தைத் தாண்டிய அவர் கடந்த 1984-ம் ஆண்டு லோக் சேவா எனும் கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். மேலும் கேரளா சாகித்ய அக்காதமியின் துணைத் தலைவராகவும், கேரள வனத்துறையின் தலைவராகவும், கேரளாவின் சிறுவர்களுக்கான பிலிம் சொசைட்டியின் தலைவராகவும், மற்றும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் கவிதை எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்.
எனது வழியைத் தொலைத்துவிட்ட நான் இப்போது
அறிமுகமற்ற ஒருவரின் கதவின் முன்னால்
கையேந்தி நிற்கிறேன், அன்பினை சில்லரைகளாகவேனும்
பெற்றுச் செல்வதற்காக

My Grandmother's House

இக்கவிதை வரிகளை வாசிக்கும் போதே, வாசகனின் உணர்வுத்துளைகள் வழியே அன்பிற்கான ஏக்கத்தின் வலியை பொங்கிப் ஊற்றெடுக்கச்செய்கின்றன.
எளிதில் கட்டுபடுத்த இயலாத என்னுடலை
மதங்களின் சவப்பெட்டிக்குள் அடக்க
என்னால் வளைக்க இயலாது
நான் இறந்துவிடுவேன் என நானறிவேன்
ஆயினும், எப்போது நான் அன்பினால் அலுப்படைவேனோ,
வாழ்விலும், சிரிப்பிலும் சலிப்படைவேனோ, அப்போதென்னை
ஆறுக்கு இரண்டு குழிக்குள் தூக்கியெறியுங்கள்,
எனக்கெனக் கல்லரை வாசகம் எதனையும் எழுதுவது பற்றிய கவலையில்லாமல்

என்று தனது சமீபத்திய கவிதையொன்றில் எழுதிய கமலா சுராயா தனது 75ம் வயதில் இவ்வருடம் மே 31ம் தேதி காலமானார்.

தீராப் பித்தமேற்றும் கமலா தாஸின் கண்கள் நிரந்தரமாய்த் தூங்கிய பின்னும் அவளின் கவிதாமொழியின் வழியே அவை கள்வெறியேற்றிய வண்ணமே இருக்கின்றன.


கமலா தாஸ் கவிதைகள்.
மொழியாக்கம் : தாரா கணேசன்

நிலைக்கண்ணாடி

உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம்
எனினும், ஒரு பெண்ணாக உனது தேவைகளில் மட்டும் நேர்மையாயிரு.
நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார் அவனோடு
தன்னை அவன் வலியவனாய் நம்புவதற்கும், அவனைவிடவும்
மென்மையான, இளமையான, அழகானவளாய் உன்னை அறிவதற்கும்.
உனது உவகையின் விம்முதலை ஒப்புக்கொள்.
அவனது ஆணுடலின் நேர்த்தியை கவனி, குளிக்கும் போது
அவன் விழிகளிலேறும் சிவப்பை, குளியலறைத் தரையில் வெட்கிய
நடையினை, இடுப்புத் துண்டினை அவிழ்த்தெறிந்து,
சற்றே நடுக்கமுடன் அவன் சிறுநீர் கழிப்பதை.
அவனை ஆணென்றும் உனது ஒரே ஆணென்றும் விவரிக்கும்
உனக்கு விருப்பமான எல்லா நுணுக்கங்களையும்.
எல்லாவற்றையும் அவனுக்கு வழங்கு. உன்னை எது பெண்மையாக்குகிறதோ
அதனை அவனுக்குப் பரிசாக்கு. உன் நீண்ட கூந்தலின் வாசனையை,
முலைகளிடையே துளிர்க்கும் வியர்வையின் கஸ்தூரி மணத்தை,
தூமையின் அதிர்வூட்டும் இளஞ்சூட்டை, இன்னும் உனது
முடிவற்ற பெண்மையின் மிகுபசியை. ஓ, ஆமாம்,
உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம், ஆனால், பின்பு
அவனற்ற வாழ்வையும் சந்திக்கும் துணிச்சலும் வேண்டும்.
நீ பல இடங்களுக்குச் செல்லும் போதும், அறிமுகமற்றோரைச்
சந்திக்கும் போதும், தீராத தேடலை அவர்களில் முடித்து வைக்கும்
உனது கண்களோடும், அவனது கடைசிக் குரல் உனது
பெயர் சொல்லியழைத்ததை மட்டும் கேட்ட செவிகளோடும்
அவனது ஸ்பரிஸத்தின் கீழே மெருகூட்டிய பித்தளையென ஒளிர்ந்து
தற்போது பழுப்பேறிக் கிடக்கும் அநாதரவான உடலோடும்.
*



என் மகனின் ஆசிரியை

என் மகனுக்கு நான்கு வயது. இங்கிருந்து ஐந்து மைல் தூரத்தில் அவன் ஆசிரியை
ஒரு சாம்பல் நிற நடைபாதையில் மயங்கி விழுந்து இறந்து போனாள்.
அவள் விழுந்து கிடந்த இடத்திலிருது அவளது புதிய பாவாடை
இறப்பின் சிறிய வெற்றியை அறிவிக்கும் விதமாய்,
அரைக்கம்பத்தில் அசையும் ஒரு பச்சைக் கொடிபோல்
மேலுங்கீழுமாய் அசைந்து படபடத்தது. காற்று பலத்து வீசிய அந்நாளில்
பாவம் அந்த மனிதர்கள் ரோஜா வண்ண யானைக் கடவுள்களை
கடலுக்குச் சுமந்து சென்றார்கள். அவர்கள் கண்ணைப் பறிக்கும் உடையணிந்து
ஜால்ரா தட்டிக்கொண்டே நீண்ட ஊர்வலம் போனார்கள். மேளங்கள் அடித்தபடி
உரத்த குரலில் பாடிச் சென்றார்கள். அந்தப் பாடலில் மயங்கிக் மூழ்கிப் போனாள்.. செய்தித்தாளில் மாலைச் செய்தியானாள். அவன் குளித்து,
பால் அருந்தி. இரட்டைக் கோடுகளுக்குள் ‘டி’ எழுதிக் காத்திருந்தான்.
ஆனால் அழைப்புமணி அழுத்துவதில்லை இறந்தவர்கள். அவனுக்கு நான்கே வ்யது.
பல்லாண்டுகளுக்கு சொல்லப்படாதிருக்கும் இச்சோகம் அவனிடம்.
துயருற்ற பறவையொன்று ஒரு மதியத்தில் அவன்மீது பறந்து,
மென்மையாய் தனது சிறகுகளால் அவனின் தோளணைந்தது.
*


வழித்தோன்றல்கள்

நமது பால்யத்தை கழித்தோம் கனிவான பாவத்தில்
உண்மையற்ற காதலைப் பண்டமாற்றாக்கியும்,
நாம் காயமுற்றிப்பதாய் அடிக்கடி எண்ணியபடியும்.
ஆயினும், நமது வலிகள் நம்மில் மீந்திருக்கவில்லை,
கன்றிய காயங்கள் தழும்புகளையோ அன்றி
நமது குளிர்ச்சிமிகு அழகினைத் துளியேனும் கறைப்படுத்தவோ இல்லை.
எல்லா தட்பவெப்பத்திலும் ஆசுவாசத்திலிருந்தோம், ஆணியடிக்கப்பட்டு,
ஆயினும் சிலுவைகளில் அல்ல, மென்படுக்கைகளில்
மென்மையான உடலில், உயர்ந்தும், அலைந்தும்.
நிதானமான நேரம் நகர்ந்தது அரையிருளில், அரைப்பகலில்,
அரைக்கனவில், அரை நனனவில். இணங்குபவர்களானோம்,
நம்மை எல்லாவற்றுக்கும் இணங்கச் செய்தோம்.
நினைவுகளின் கர்ப்பப்பையின் சுவர்களை நமக்காக சுரண்டவோ,
இறப்பைக் கூட நமக்காக கேள்விகள் கேட்கவோ நம்மால் இயலாது.
ஆயினும், தாயின் கரங்களிலிருக்கும் மகவென நம்மை நாமளிப்போம்
அந்த நெருப்பிற்கு அல்லது மெதுவாக உண்ணவேண்டிய
நமது பசிமிகு நிலத்திற்கு, வெறியுடன் விழுங்கப்பட.
தமது சிலுவைகளை எவரும் கடந்துவர இயலாது,
அன்றி அவனது காயங்களை நமக்குக் காட்டவும் இயலாது.
மௌனத்தில் தொலைந்துபோன எந்தக் கடவுளும் பேசத் தொடங்காது,
தொலந்துபோன எந்தக் காதலும் நம்மை நஷ்ட ஈடாய்க் கோர இயலாது. இல்லை,
நாம் எப்போதுமே மீட்டுணர்வோம், அல்லது புத்துருவாக்கம் செய்யப்படுவோம்.
*


அர்த்தநாரிகளின் நடனம் வெம்மையாயிருந்தது, கடும் வெம்மை, அந்த அலிகள்
அகன்ற பாவாடைகள் வட்ட வட்டமாய் சுழல ஜால்ராக்கள்
சத்தமாய் மோத, கொலுசுகள் குலுங்கி கிணுகிணுத்து இசையிசைக்க
ஆட வரும் முன்னே. தழல் நிற குல்மொஹர் மரத்தின் கீழே,
நீண்ட சடை சுழன்றாட, கரிய கண்கள் மின்ன, ஆடினார்கள்,
ஆடினார்கள், ஓ, ரத்தம் கசியும் வரை ஆடினார்கள். கன்னங்களில்
குத்திய பச்சை, கூந்தல் சூடிய மல்லிகை, கருப்பாய் சிலர்
கிட்டத்தட்ட சிவப்பாய் சிலர். அவர்கள் குரலில் ஆண்மை,
பாடலில் ததும்பும் துயரம், இறந்து போகும் காதலர்களையும்
பிறக்காத குழந்தைகளையும் பாடலாய் இசைத்தார்கள்
சிலர் டோலி அடித்தார்கள்; மற்றவர்கள் தமது வருந்துதற்குரிய
முலைகளின் மீது ஓங்கி அடித்து ஒப்பாரியிட்டு
வெறுமையின் இன்புறும் வேதனையில் துடித்தார்கள்
பாதி எரிந்த சிதைவிறகென வரண்டு மெலிந்த அவர்களின் தேகம்,
ஒவ்வொருவரும் வரட்சியில் உளுத்திருந்தனர். அமைதியிலிருந்தன
மரங்களின் மீது காகங்கள், அசைவின்றி ஆச்சர்யத்தின்
அகன்ற விழிகளுடன் குழந்தைகள். கவனித்தனர் அனைவரும்
இந்தப் பரிதாப ஜீவிகளின் துயர வலிப்பை
பிறகு வானம் வெடித்துப் பிளந்து இடியிடித்து, மின்னல்
மழை. பரணையின் புழுதியில் படிந்த பல்லிகள் எலிக்குஞ்சுகளின்
மூத்திர வாடையுடன் சொற்ப மழை.


*


சடலப்புழுக்கள்
அந்தியில், நதிக்கரையில் கண்ணன்
அவளை கடைசியாய் கலந்து மறைந்தான்

அந்த இரவில் கணவனின் கரங்களில்,
மரணித்திருப்பதாய் உணர்ந்தாள், ராதா
என்னவாயிற்று, என் முத்தங்களைப் பொருட்படுத்துவாயா அன்பே என்றான்.
இல்லை, இல்லவே இல்லை என்றவள்
நினைத்தாள்,
சடலத்தைப் புழுக்கள் கிள்ளினால் என்னவாகிவிடுமென.
*


கற்காலம்
பிரியத்திற்குரிய கணவனே, மனதில் குடியேறிய புராதனனே
உன்மத்தமாகி வலை பின்னும் தடித்த வயோதிகச் சிலந்தியே, அன்பாய் இரு. என்னை ஒரு சிலைபறவையாக்கி விட்டாய், ஒரு கரும்பளிங்குப் புறா,
என்னைச்சுற்றியோர் அசுத்த அறை கட்டி வைத்து
அம்மைத் தழும்பேறிய எனது முகத்தை வாசித்துக்கொண்டே ஞாபக மறதியாய்த் தட்டிக்கொடுக்கிறாய். உரத்த குரலில் எனது அதிகாலைத் துயிலை நசியச் செய்கிறாய்.
கனாக் கண்ணில் உன் விரலைத் திணிக்கிறாய். இருப்பினும் பகற்கனாவில் திரண்ட ஆண்கள்
தமது நிழல்களைப் பதித்து மூழ்கினார்கள்
எனது திராவிட ரத்தத்தில் வெள்ளைச் சூரியனாய்
புனித நகரங்களின் கீழ் வடிகால்கள் ரகசியமாய் ஓடுகின்றன
நீ சென்றபின், நான் எனது தேய்ந்து போன நீல ஊர்தியை
ஓட்டிச் செல்வேன் ஆழ்நீலக் கடலை ஒட்டி. நாற்பது எட்டுகளை தடதடத்து ஓடிக் கடக்கிறேன் வேறொரு கதவைத் தட்டுவதற்கு. சாவித்துவாரங்கள் வழியே
அண்டைவீட்டார் கவனிக்கிறார்கள் நான் வருவதையும், மழைபோல் போவதையும். என்னைக் கேளுங்கள், எல்லோரும் கேளுங்கள் என்னை. என்னில் அவன் பார்த்தது தென்னவென்று. என்னைக் கேளுங்கள், அவனைச் சிங்கமென்று அழைப்பதேனென
சுதந்திரன் அவனின் கரம் என் யோனி அணையும் முன்
பாம்பின் படமென நெளிவதேனென என்னைக் கேளுங்கள்.
வெட்டப்பட்ட பெருமரமாய் என் முலைகளின் மேல் சாய்ந்து
உறங்குகிறான். வாழ்வு ஏன் குறுகியதென்றும் காதலேன் அதனினும் குறுகியதென்றும் என்னைக் கேளுங்கள். மோட்சமெதுவென்றும் அதன் விலையென்னவென்றும் என்னைக் கேளுங்கள்.


*




Tuesday, July 7, 2009

from The Pebbles (My poetry collection)


Upon the atrium of desires,
in the silence of a late night hour,
nudity stretches itself
on the strange designs of moon rays.
Pondering the gleam of an unseen cascade,
far away in an abyss,
shamelessly twirls the untamed caprice.
Like the broken shells scattered on the shore,
lie the unstrung dreams.
Fragrant messages of nocturnal blossoms
are mystic invitation to bees
As the clandestine corners
of light forbidden land
shrieks wordlessly, potent mind shatters
sprouting fatigue as in a prairie.
The webbed roots have sucked the moisture of psyche
A geyser springs from a hidden cave
In its gush, wicked thoughts are set to loot
Resoluteness skids, loosing its balance
As the Needle of thoughts perforate the soul
into the mid of night melts a poetry,
as an indecipherable scribbling.

(Transcreation : - கூழாங்கற்கள் நூலில் இருந்து)

Monday, July 6, 2009

கரோல் ஆன் டஃபி (Carol Ann Duffy)


யார் தருவார் இந்த அரியாசனம்?
தாரா கணேசன்

(நன்றி :அம்ருதா - ஜூலை, 2009)

கரோல் ஆன் டஃபி (Carol Ann Duffy)

வியப்பில் உலகமே திரும்பிப் பார்க்கிறது. இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்திருப்பது தான் இதன் முக்கிய காரணம். உலகின் பெருவியப்புக்கும் இங்கிலாந்துச் சரித்திரத்தின் திருப்பத்திற்கும் இடையே பெருமிதமாய் நிற்கிறார் கரோல் ஆன் டஃபி.

சுமார் 341 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர் (Poet Laureate) எனும் சிம்மாசனத்தை எட்டிப் பிடித்த ஸ்காட்லாண்டின் முதல் பெண்மணியான இவர் ஒரு அற்புதமான கவிஞரும், நாடக ஆசிரியருமாவார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் அரசவைக் கவிஞரான டஃபி ஒரு இருபால் உறவினர் (bisexual) என்று பகிரங்கமாய் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் புதிய அரசவைக்கவிஞராக இந்த ஆண்டின் மே மாதம் 1ம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ள 53 வயதான டஃபி, 1955ல் கிளாஸ்கோவில் பிறந்தவர். அரசவைக் கவிஞராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இவர் மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியத்தின் தலைவர் பதவியிலிருக்கிறார்.

டஃபி ஆழ்ந்த கற்பனைவளம் மிக்கவரென்றும், அனுபவங்களையும் உணர்வுகளையும் வார்த்தைக்கோர்வைகளாய் எளிதில் மாற்றக்கூடிய திறனுள்ள அற்புதமான நவீன கவிஞரெனறும் இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரவுனால் (Gordon Brown) பாராட்டப்பட்டவர். மிகவும் புகழ்வாய்ந்ததும் பெருமைக்குரியதுமான இந்த அரசவைக் கவிஞர் பதவியை அடைந்திருக்கும் இவர் தலைசிறந்த இலக்கியவாதிக்குரிய சிம்மாசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் படைப்பாளிகள்.
தனது சிறுவயது முதற்கொண்டே ஏட்ரியன் ஹென்றியின் கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்ட டஃபி,. ஹென்றியின் ஆழ்ந்த வாசகியாகி இவர் ஒரு எழுத்தாளராய் அறியப்படவேண்டும் என்றே விரும்பினார். ஏட்ரியன் ஹென்றி இங்கிலாந்தின் மிக முக்கியமான சமகால பின்நவீனத்துவக் கவிஞரும் ஓவியரும் ஆவார். மிகவும் அதிகமான அளவில் விற்பனையை அள்ளிக்குவித்த கவித்தொகுப்பான தி மெர்ஸே சவுண்ட் எனும் புத்தகத்திற்காக இங்கிலாந்து இவரையும் இன்னும் பிரையன் பேட்டென் மற்றும் ரோகெர் மேக்கௌவ் ஆகியோரையும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.


தனது 20வது வயதில் Fleshweathercock and Other Poems என்ற முதல் கவிதை நூலை வெளியிட்ட டஃபி, 22ம் வயதில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலிருந்து தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருபதாவது வயதில் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய டஃபி இன்று உலகே வியக்கத்தக்க வகையில் இங்கிலாந்தின் மதிப்பிற்குரிய மிக உயரிய அரசவைக் கவிஞர் எனும் பதவியினை அடைந்துள்ளார். இடைவெளிகள் ஏதுமின்றித் தொடர்ச்சியாக இலக்கியத்திற்க்கெனத் தனது பங்களிப்பைச் செய்துள்ள இவர் இதுவரை பல கவிதைத் தொகுதிகளையும் நாடகங்களையும் சிறுவர்களுக்கான புத்தகங்களையும் இயற்றியுள்ளார். தானொரு புகழ்பெற்ற நாடக ஆசிரியராக இருப்பதோடு மட்டுமின்றி லிவர்பூலின் தலைசிறந்த நாடக அரங்குகளிலும் லண்டனின் புகழ்வாய்ந்த அல்மீயிடா அரங்கிலும் நடித்தும் இருக்கிறார். டேக் மை ஹஸ்பண்ட், கேவர்ன் ஆஃப் ட்ரீம்ஸ், லிட்டில் வுமன் ஆகியவை இவரது நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். The World's Wife எனும் படைப்பு இவரது எழுத்துகளுள் தலைசிறந்தாகக் கருதப்படுகிறது.


காலம், ஏமாற்றம், மற்றும் மாறுதல்கள் குறித்த பல படைப்புகளை உருவாக்கியுள்ள இவர் குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாய்ச் சித்திரம் போல் தீட்டும் வல்லமை உள்ளவர். விடலைப் பருவம் மற்றும் வாலிபப் பருவத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை காதல், நினைவுகூர்தல் ஆகிய பாதைகள் வழியே மொழியின் ஆளுமையால் கைக்கொண்டு அனுதினமும் நிகழ்கின்ற வாழ்வின் அன்றாடங்களை அனுபவப் பதிவுகளாக்குவதோடன்றி தனதும் பிறரதுமான மாய உலகினையும் அற்புதமாய்ப் படைக்கும் திறனுள்ளவர்.


லிவர்பூலில் இருந்த காலத்தில் கவிதைக்கான ஆழ்ந்த விதை அவருக்குள் ஊன்றப்பட்டதற்கான முக்கிய காரணம் ஏட்ரியன் ஹென்றியோடான அவரது இலக்கிய உறவுதான். சமகாலக் கவிஞர்களுள் மிக முக்கியமானவராக அறியப்படும் டஃபி அற்புதமான கவிஞர் மட்டுமின்றி பல உயரிய விருதுகளையும் தனக்குரித்தாக்கிக் கொண்டவர்.


1983ல் தொடங்கி இன்றுவரை ஒவ்வோர் வருடமும் ஒவ்வோரு விருதினை வாங்கிக்குவித்த பெருமைமிக்கவர் டஃபி என்பது பெரிதும் வியப்புக்குரியது. எரிக் கிரிகோரி விருது, Standing Female Nude எனும் படைப்பிற்கான ஸ்காட்லாண்டின் ஆர்ட் கவுன்ஸில் விருது, Selling Manhattan எனும் படைப்பிற்காக சாமர்செட் மாம் விருது, கவிதைகளுக்காக டைலன் தாமஸ் ப்ரிசு, The Other Country படைப்புக்காக இரண்டாம் முறையாக ஸ்காட்லாண்ட் ஆர்ட் கவுன்ஸில் விருது, கோல்மாண்டெலே விருது, Mean Time படைப்பிற்காக விட்பிரட் விருது, லானென் விருது, சிறுவர்களுக்கான கவிதை விருது, விஞ்ஞான, பொறியியல் மற்றும் கலைக்காக வழங்கப்படும் நேஷனல் எண்டோவ்மெண்ட் விருது, Rapture படைப்பிற்காக டி.எஸ் எலியட் பரிசு என்று விருதுகளும் பரிசுகளுமாக வாங்கிக் குவித்தவர்.


கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளாக தனக்கென இலக்கியத்தில் ஓர் இடத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ள சமகாலக் கவிஞரான டஃபி கல்லூரி மணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர்கள், சாதாரண வாசகர்கள், என்று பல்வேறு தளங்களிலிருதும் பெரும் வரவேற்பு பெற்றவராகவும் திகழ்கிறார்.


டஃபிக்குள் இருக்கும் கவிஞரைப் புரிந்து கொள்வது சுலபமல்ல. சிக்கலான உள்மனம் அவருடையது. சில சமயங்களில் அதீதமான காதல் வயப்பட்ட கவிதைகளாகவும், சில சமயங்களில் செறிவான அரசியல் கவிதைகளையும் எழுதும் இவரது படைப்புகள் உற்சாகமூட்டக்கூடியதாகவும் இறை உணர்வை மறுப்பவையாகவும் அதே நேரத்தில் நகைச்சுவையானதாகவும் அமைந்துள்ளன.



திருமதி. லாஸரஸ்
மூலம் : கரோல் ஆன் டஃபி
மொழிபெயர்ப்பு: தாரா கணேசன்

நான் துக்கித்திருந்தேன் ஒரு முழு இரவும் பகலும்
இழப்பைக் குறித்து அழுது கிழித்தெறிந்தேன்
மணப்பெண் உடையை எனது மார்பிலிருந்து
கதறி விழுந்தழுது ஓலமிட்டு இரத்தம் பெருகும் வ்ரை
எனது கரங்களால் கல்லரை கற்களைப் பிராண்டி
ஓங்கரித்தேன் அவன் பெயரை திரும்பத் திரும்ப
மரித்தான் மரித்தானென்று

வீடு திரும்பி, வெறுமையில் மனமுடைந்து
ஒற்றைக்கட்டிலில் உறங்கினேன் விதவையாய்
ஒரு வெற்று கையுறை, துசுகள் படிந்த
வெண்தொடையெலும்பு, ஒரு கருப்புப் பையில்
பாதி திணிக்கப்பட்ட ஆழ்வண்ணக் காற்சட்டை
ஒரு இறந்த மனிதனின் காலணியுடன் இடம் பெயர்ந்து
என் வெற்றுக் கழுத்தை இறுக்கினேன்
‘டை’யினால் இரு-சுருக்கிட்டு

நிலைக்கண்ணாடியில் தன்னைத் தானே தொட்டுணரும்
நோயுற்று மெலிந்த கன்யாஸ்த்ரீயின்
ஆழ்துயர் நிலைகளை நான் கற்றுணர்ந்துவிட்டேன்
எவ்வித பிடிமானமுமற்ற சட்டங்களில்
குறியீடாயிருக்கிறது எனது முகம்
ஆனால் இதற்குள் அவன் என்னை விட்டு விலகிப்போகிறான்
ஒரு சிறிய புகைப்படம் போன்று குறுகிச் சிறுத்து
சிறிது சிறிதாய்த் தேய்ந்தழிந்து போவதுபோல்

போகிறான், அவன் பெயர் அவன் முகத்தை நினைவூட்டும்
மந்திரச்சொல் என்பது மரந்து போகும் வரைக்கும்.
அவனுது சிகையின் கடைசிக் கற்றை
புத்தகத்தில் இருந்து பறந்து போனது
அவன் வாசனை வெளியேறியது வீட்டை விட்டு.
வாசிக்கப்பட்டது உயில். என் தங்க மோதிரத்தின்
சிறிய பூஜ்யத்திற்குள்ளாக அவன் கரைந்து போகிறான்

பிறகவன் போய்விட்டிருந்தான்
பிறகவன் நிலையான காவியமானான், அழியா மொழியானான்
இருபுறமும் வேலிச்செடிகள் அடர்ந்திருந்த பாதையில்
அந்தப் பள்ளிக்கூட ஆசிரியரின் தோள் மீது கரம் வைத்த போது
ஒரு ஆணின் வலிமை திடுக்கிட்டு அதிரவைத்தது
அவனது மேல்கோட்டுச் சட்டைக்கையின் அடியில் இருந்து
ஆனால் நான் இயன்றவரை
உண்மையாய்த்தானிருந்தேன்
அவன் வெறும் நினைவாகிப்போகும் வரை

ஆக, கம்பளிப்போர்வை போல்
அருமையான காற்று வீசிய அம்மாலையில்
வயல்வெளியில் நிற்க முடிந்தது
நான் குணமாகி விட்டிருந்ததால்
வானில் நிலவின் விளிம்பைக் காண இயன்றது
ஒரு புதரிலிருந்து ஒரு முயல் குதித்தோடியதையும்
அந்த கிராமத்து மனிதர்கள் என்னை நோக்கி
உரக்கக் கத்தியவாறு வந்து கொண்டிருந்ததையும் கூட
கவனிக்க முடிந்தது

அவர்களுக்கு பின்னாலிருந்த அந்தப் பெண்களை,
குழந்தைகளை, குரைக்கும் நாய்களை எனக்குத் தெரியும்,
அந்த ஏமாற்றும் விளக்கொளியில்
அந்த இரும்படிப்பவனின் முக பாவனையிலும்
அந்தக் கேளிக்கை அரங்கிலிருந்த பெண்ணின்
நடுங்கும் விழியிலும்,
என்முனனே கலைந்து போன கூட்டத்திலிருந்து
என்னைக் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்ட கரங்களிலும்
எனக்குத் தெரிந்துவிட்டது

அவன் உயிரோடிருப்பது, அவனது முகத்தில் கண்டேன் அந்த பயங்கரத்தை
அவனது அம்மாவின் கிறுக்குத்தனமான பாடலைக் கேட்டேன்
அவனது துர்நாற்றத்தை சுவாசிக்க முடிந்தது
என் மணமகன் தனது அழுகிய மரணஅங்கியில்
கல்லரையிலிருந்து சரியும் மணலின் ஈரத்துடன்
அவனது பெயரை தவளையின் குரலில் உச்சரித்தபடி
காலத்தினுள்ளிருந்து வெளிவந்தான், தன்னுரிமையிழந்து,


*

இங்கிலாந்து அரசவைக் கவிஞர்களின் காலக்கோவை

1617: பென் ஜான்ஸன்
1638: சர் வில்லியம் டேவனண்ட்
1668: ஜான் ட்ரைடென்
1689: தாமஸ் ஷாட்வெல்
1715: நிகோலஸ் ரோவ்
1718: லாரன்ஸ் இயூஸ்டென்
1730: கோலே சைபர்
1757: வில்லியம் வொயிட்ஹெட்
1785: தாமஸ் வார்ட்டன்
1790: ஹென்றி ஜேம்ஸ் பை
1813: ராபர்ட் சௌத்தே
1843: வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
1850: ஆல்பிரட் லார்ட் டென்னிஸன்
1896: ஆல்பிரட் ஆஸ்டின்
1913: ராபர்ட் பிரிட்ஜ்
1930: ஜான் மேஸ்பீல்ட்1967: செசில் டே லூயிஸ்
1972: சர் ஜான் பெஞ்சமன்
1984: டெட் ஹக்ஸ்
1999: ஆண்ட்ரூ மோஷன்
2009: கரோல் ஆன் டஃபி

கனல் பறக்கப் பாறைகளில் குளம்புகள் தேய்த்து
ஒற்றைக்கொம்புக்குதிரை கனைத்துத் தாவும் நள்ளிரவு
இருட்காட்டின் சருகுகள் நொறுங்க அலையும்
பசித்த ஓநாய்க் கண்களின் கூரிய பச்சை ஒளியுடன்
மயக்கமூட்டி நெருங்கும் ஒரு நிழலுருவம்
இரவின் தாபப் பெருமூச்சில் வெப்ப நதி பெருக
நிலத்தில் கிடக்கிறாள் கலைந்த ஓவியமாய்
தீரா தாகத்துடன் படருமவன் கரிய இதழ்கள்
உறிஞ்சிய இளஞ்சூட்டுக் குருதித் துடிப்பை
உச்சத்தின் முனகலோடு எதிரொலிக்கும் இருள்
தலை துண்டித்த ஆட்டுக்குட்டியாய்
உடல் துள்ளித் துடிக்க வெளியேறிய கடைசி மூச்சில்
சாத்தானின் பாடல் அதிர, வெடித்த நிலத்தில்
அகன்ற வால் சரசரக்கப் பதறி இடம்பெயரும்
முதலைகள் முரட்டுக் கால்களால்
ஒன்றையொன்று இறுகத் தழுவின
உருகிய மெழுகென பிரக்ஞையற்றுக் கிடந்தவளின்
வியர்வை பூத்துத் திறந்திருந்த மார்பில் முத்தமிட்டு
இருள் வௌவாலாய் மறைகிறான் தாகந்தீர்ந்து
பனியாய் உறைந்த அவளுடல் மீண்டும்
தாகம் மீறும் இன்னோர் இரவில்
குருதி நதியாய் விழிக்கும்
அவனருந்தும் கனவின் கரையில்

Saturday, July 4, 2009




பாலை நான்
கானல் நீரை அருந்து
தாகம் தோன்றும்
கடந்து போ என்னில் இப்போது
இன்னும் அதிகம் தாகிப்பாய்
ஒட்டகத்தை எங்கே தொலைத்தாய்
தேடாதே, மணல் மேடுகளுக்குள் மறைத்துள்ளேன்
கிழிந்த ஆடையணிந்த பாரசீகக் கவிஞனைப் போல்
யாழுடன் பாடித்திரி
ஒரு பௌர்ணமியின் ஒளிக்கடலில்
நிறுத்தாமல் நீயிசைக்கும் அந்தப் பாடலில்
பாலை முழுதும் பேரீச்சை பழுக்கட்டும்

*



குதிரைகளை விடவும் குளம்புகளைப் பிடிக்கிறது
இரட்டைப் பிறை குளம்பொலிக்கத்
தாவி வரும்போது பொங்கும் குதூகலம்
நாடோடிகளின் மத்தளமென இசைக்கிறது
நான் வானமாகிறேன்
குதிரை ஹம்மிங் பறவையாகிறது

Thursday, July 2, 2009

நிலைக்கண்ணாடி


கமலா தாஸ் கவிதைகள்.

மொழிபெயர்ப்பு : தாரா கணேசன்

நிலைக்கண்ணாடி

உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம்
எனினும், உனது தேவைகளில் மட்டும் நேர்மையாயிரு
ஒரு பெண்ணாக. நிலைக்கண்ணாடியின் முன் நின்றுபார் அவனுடன்
தன்னை அவன் வலியவனாய் நம்புவதற்கும், அவனைவிடவும்
மென்மையான, இளமையான, அழகானவளாய் உன்னை அறிவதற்கும்.
உனது உவகையின் விம்முதலை ஒப்புக்கொள்.
அவனது ஆணுடலின் நேர்த்தியை கவனி, குளிக்கும் போது
அவன் விழிகள் சிவப்பை, குளியலறைத் தரையில் வெட்கிய
நடையினை, துண்டினை அவிழ்த்தெறிந்து, சற்றே நடுக்கமுடன்
அவன் சிறுநீர் கழிப்பதை. அவனை ஆணென்றும்
உனக்கான ஒரே ஆணென்றும் விவரிக்கும் உனக்கு விருப்பமான
எல்லா நுணுக்கங்களையும். எல்லாவற்றையும் அவனுக்கு வழங்கு.
எது உன்னைப் பெண்மையாக்குகிறதோ அதனை பரிசாய்க் கொடு அவனுக்கு.
உன் நீண்ட கூந்தலின் வாசனையை, முலைகளிடையே துளிர்க்கும்
வியர்வையின் கஸ்தூரி மணத்தை, தூமையின் அதிர்வூட்டும் இளஞ்சூட்டை,
இன்னும் உனது முடிவற்ற பெண்மையின் மிகுபசியை. ஓ, ஆமாம்,
உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம், ஆனால், பின்பு
அவனின்றி வாழ்தலையும் சந்திக்கும் துணிச்சலும் வேண்டும்.
நீ பல இடங்களுக்குச் செல்லும் போதும், அறிமுகமற்றோரைச்
சந்திக்கும் போதும், தீராத தேடலை அவர்களில் முடித்து வைக்கும்
உனது கண்களோடும், அவனது கடைசிக் குரல்
உனது பெயர் சொல்லியழைத்ததை மட்டும்
கேட்ட செவிகளோடும், அவனது ஸ்பரிஸத்தின் கீழே
மெருகூட்டிய பித்தளையென ஒளிர்ந்து
தற்போது பழுப்பேறி அநாதரவான உடலோடும்.

Wednesday, July 1, 2009

ஐரிஸ், என் செல்லமே!




முறிந்த புயல்கிளையென
நீரில் தலைகீழாய் தொங்கியது ஏன், என் செல்ல மீனே
அகன்ற செதில்களில் முத்தின் ஒளிசிதற
நிற்காத அலையென நீந்தினாயே ‘ஐரிஸ்’
துடுப்புக்கு பதிலாய் இறக்கைகள் இருந்திருந்தால்
நீயோர் பிரம்மாண்ட வெண்புறா
இயந்திரங்களின் பிராணவாயு நிரம்பிய
உனதிந்தச் சிறிய கடல் உன் அகால மரணத்திற்கான
எந்த சாட்சியமுமற்று அசைகிறது நீர்க்குமிழிகளுடன்
குறுக்கு வெட்டில் அலைந்து கொண்டிருந்த உனது
பெருமென்னுடலை உயிரற்று ஏந்திக்கொண்டிருக்கிறது
அமைதியாய் இந்த கண்ணாடிச் சவப்பெட்டி
காயச்சண்டிகையின் தீராப்பசியுடன்
தங்க மீன்களுண்ட உன் அகன்ற பெருவாய் அசைத்து
உனது இறப்பிற்கு முந்தய ஏழு தினங்களும்
நீ உபவாசமிருந்ததன் காரணம் சொல்வாயா?
மரணத்திலும் விரைக்காத உன்னுடல்
காக்காய்ப் பொன் மின்னலெனத் தகதகக்கிறது
உன்னோடு நீந்திய குஞ்சு மீன்கள்
உன்னிடமிருந்து தப்பிய மகிழ்வில்
நீந்தியலைகின்றன உன்னருகே பயமற்று
கம்பீர மச்சமே, பாற்கடலில் அப்ஸரஸ்களின்
நிர்வாணம் நீந்தச் சொல்லாமல் போனாயோ
நிலைகுலைந்த உன்னுடல் கண்டு பதறி
கொலையுண்ட கோவலனின் கண்ணகியாய் கதறுகிறேன்
ஒரு நீர்விலங்கின் மரணத்திற்குப் புலம்பும்
பைத்திய மீன்காதலியின் துக்கங்கண்டு
நீந்தும் குஞ்சுமீன்கள் அசைவற்றுத் திகைத்து நிற்கின்றன
மரித்த மீனுக்கான தேற்றுவாறற்ற துக்கத்தில்
பின் தோட்ட மாமரந்தின் அருகே புதைக்கிறேன் உன்னை
என் பிரிய வானவில் தேவதையே
இனி மீண்டும் அம்மரம் பூக்கும் காலத்தில்
அது மீனின் வாசம் வீசும்
உறைந்த உன் ரத்தம் அதன் கனிகளாய்ப் பழுக்கும்

Thursday, June 25, 2009

SOLITARY





தனி (SOLITARY)
A Short Film by Iyyappa Mathavan


I didn't have my films as an outlet for all the different sides of me, I would probably be locked up.”

- Angelina Jolie

எல்லாக் கவிஞனுமே எப்போதும் தனக்குள் ஒரு தனிமையைச் சுமந்து கொண்டு தேடலுடன் அலைந்து கொண்டிருக்கிறான். அற்புதமான கவிதைகளின் உலகில் உலவும் அய்யப்ப மாதவன் இயக்கி செழியன் அவர்களால் குறும்படமான படமாக்கப்பட்டிருக்கும் தனி (solitary) ஜூன் 20ம் தேதியன்று சென்னையில் திரையிடப்பட்டது.

இன்றைய தமிழ்த் திரைச் சூழலில் காட்சி ஊடகத்தின் முக்கிய வடிவமான குறும்படத்தினை அய்யப்ப மாதவன் இயக்கியிருப்பது கவனத்திற்குரிய விஷயமாகும். தனியாக இருக்கும் ஒரு மனிதனைப் பற்றிய பத்து நிமிடக் குறும்படம் இது. பத்து நிமிடக் குறும்படமாயினும் படைப்பாக்கத்தின் திறமையினை முழுமையாய் வெளிப்படுத்தியிருக்கிறது ‘தனி’.

இந்தக் குறும்படத் திரையிடல் நிகழ்வினை ஆழி பப்ளிஷர்ஸின் உரிமையாளர் திரு செந்தில் நாதன் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி, எழுத்தாளர் சாரு நிவேதிதா, கவிஞர் தாரா கணேசன், எழுத்தாளர் அ. மார்க்ஸ், கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்புரை ஆற்றிய அனைவருமே இக்குறும்படம் மிக நல்ல முயற்சி என்றும் இன்றைய வியாபார மயமாகிவிட்ட திரைச்சூழலில் இது போன்ற திரைப்படங்கள் வருவது அவசியமென்ற கருத்தையே வலியுறுத்தினர்.

நல்ல திரைப்படம் எடுப்பதையே தனது வாழ்வின் குறிக்கோள் என்று கண்ணில் கனவுகள் மின்னச் சொல்லும் அய்யப்ப மாதவனின் இந்தக் குறும்பட முயற்ச்சி பாராட்டுக்குரியது. ஏற்கனவே இவரது கவிதையொன்றை “இன்று” என்ற தலைப்பில் செழியன் அவர்கள் குறும்படமாக்கியிருக்கிறார். இதில் அய்யப்ப மாதவனே நடித்தும் இருக்கிறார். இப்போது திரையிடப்பட்ட ‘தனி’ குறும்படம் திரையுலகின் நெடுங்கரையில் இவரது காலடியை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

இந்தப் படத்தினைப் பார்த்த் போது, ஜெர்மானியின் தத்துவ ஞானியுமான ப்ரட்ரிக் நீட்சே-யின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“உனது மிகவும் அடர்ந்த தனிமை இரவொன்றில் துர்த்தேவதையொன்று எவருமறியாமல் உனைப் பிந்தொடர்ந்து “நீ வாழும் இந்த வாழ்க்கையினை மறுபடியும் எண்ணிலடங்காத முறைகள் நீ வாழவேண்டும்; உனது ஒவ்வோர் வலியும், மகிழ்வும், சந்தோஷமும், எண்ணங்களும், பெருமூச்சுகளும் உன்னிடத்து நீ வாழ்ந்த வாழ்வின் அத்யாயம் போல அதே வகை முறையில் அதே குறிப்பிட்ட வரிசை ஒழுங்குடன் திரும்ப வரவேண்டும்; வாழ்வின் என்றும் மாறாத மணற்கடிகையினை, மிகநுண்ணிய புழுதிகளுடன் உன்னோடு மறுபடி மறுபடி திருப்பி வைக்கப்படவேண்டும்; - என்று சொல்லுமேயானால், அப்போது நீ உன்னை கீழே வீழ்த்திக் கொண்டு பற்களை நரநரவெனக் கடித்தபடி அந்தப் துர்த்தேவதியை சபிப்பாயா? அல்லது இதனைவிடவும் தெய்வீகமான வார்த்தைகளை இது வரையில் நான் கேட்டதேயில்லையென பதிலிறுப்பாயா? (“What if a demon were to creep after you one night, in your loneliest loneliness and say “ This life which you live, must be lived by you once again, innumerable times more; And every pain and joy and thought and sigh must come again to you all in the same sequence; The eternal hour-glass will again and again be turned and you along with it, dust of the dust. Would you throw yourself down and gnash your teeth and curse that demon? Or would you answer, “Never have I heard anything more divine”.)

நீட்சே சொல்லியிருப்பதைப் போல, இந்த மனிதனை அப்படியொரு துர்த்தேவதை துரத்துவது போலத் தான் தோன்றியது. இவன் தனது வாழ்க்கையின் தனிமையை முதல் முறை கடக்கிறானா அல்லது சபிக்கப்பட்ட அந்தத் தனிமையினை மறுபடி கடக்கிறானா அல்லது தனிமையை தனிமையில் தனிமையாய் கடக்கிறானா – இவனது தனிமைக்கு தனிமைதான் துணையா என்றெல்லாம் யோசிக்கத் வைக்கிறது.

தனியாய் இருப்பதற்கும் தனிமைக்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கிறது. தனியாய் இருத்தல் என்பது being alone தனிமை என்பது being lonely. இந்தப் படத்தில் இரண்டும் கலவையாகி a solitary solitude ஆக மாறியிருக்கிறது. படமாக்கப் பட்டிருக்கும் விதத்தில் தனிமை குறித்த பயம், விரக்தி, கையாலாகாத வெறுமை, தனக்குத் தானே பேசும் மனநிலை பாதிப்பு, இயலாமை குறித்த வெறுப்பு, சொல்ல இயலாத சோகம், எல்லாமும் எல்லாமும் ஒரு சுழல் போல நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.

விஸ்வநாதன் கணேசன் நடிப்பில் அய்யப்ப மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தனி’ இந்தக் குறுப்படத்தினை செழிய்ன் அவர்கள் அற்புதமான படமாக்கியிருக்கிறார்.

Tuesday, June 9, 2009

காதலும் எதிர்காலமும்




உனக்குப் புரியாத இந்த மூப்பெய்திய மொழியை
நான் அமைதிப்படுத்த வேண்டும்
(இயல்பாகவே நீ பூக்கும் மரத்தைப் போல்
வருங்காலத்தைச் சேர்ந்தவள்தான்)
வருங்காலத்தின் புதிய மொழியில்
நான் பேச வேண்டும். மலர் சூடிய அந்த மொழியில்
பழங்காலத்தைப் பற்றிய இந்த ஏக்கத்தை
அடிமைக் கப்பலுக்குள்ளிருந்தே
நிலவைப் பற்றிக் கனவு காணும்
வெள்ளை மாலுமிகளும் கருப்பு அடிமைகளும்
கொண்டுவந்த இந்த ஏக்கத்தை
நான் அடிமைப் படுத்த வேண்டும்
ஸ்லோஸ், ப்ளூஸ், பொலரோஸ் என்னும்
வடிவங்களெடுத்த இந்த புராதான கண்ணீரை
நான் அடிமைப் படுத்த வேண்டும்
(உனது வேட்கை எனது மார்பின் மீது
உனது மார்பு எனது கையில். உனது கை
உனது தொடையின் கதகதப்பு, உனது
கண்களின் ஆசை இவையாவ்ற்றையும்
காட்டிக்கொடுக்காத இந்த வேதனை மிக்க
மன அழுத்தம்)
நான் இவையனைத்தையும் அமைதிப் படுத்த வேண்டும்
(இயல்பாகவே நீ பூக்கும் மரத்தைப்போல்
வருங்காலத்தை சேர்ந்தவள்தான்)
நனவாக்கப் படவேண்டிய
நம்பிக்கை கீதத்தை உனக்கு நான் பாடிக்காட்ட வேண்டும்
ஓ பூக்கும் மரமே நாளை கனியப்போகும்
பழங்களைப் பற்றி உன்னிடம் நான் பாடவேண்டும்
என் வாழ்விற்குள் பாய்ந்து பரவும் சூரியனே
ஏற்கனவே விடிந்து விட்ட நாள் இது




*கருப்பின மக்களின், குறிப்பாக ஆஃப்ரோ-அமெரிக்க மக்களின் இசை வகைகள்
(Poem by Fernandes Oliverio Mario Antonio - மண்ணும் சொல்லும் - மூன்றாம் உலகக் கவிதைகள் - தமிழில் வ. கீதா & எஸ். வி. ராஜதுரை



Thursday, June 4, 2009

Come,
let us go back
to the shore temple
befouled by the dust of time
where doves bequeath their feathers

Reposing upon the hump
of the excavated mythical bulls
[1]
that egress silence
in the moonlit horizon
enticing us to kiss
as the breeze swirl our tress
we could share
the un-kissed kisses of the past

From your benighted lips,
like the waves that splash
Upon the mossy rocks
let the tempest rise
bursting the obstructs
of our languishing separation




[1] Nandi (Nandi is the bull which Lord Siva rides and the gate keeper of Siva and Goddess Parvati in Hindu mythology

Monday, June 1, 2009

BLOSSOMS OF MUSIC


Listening the mystical Chinese flute, ancient
adrift I was, as the ground beneath slipped away

All the vines of the woods gleaming in twilight
fastened me tightly
Showering blossoms of music
dragged all the planets,
comets and constellation
and placed them at my feet

The universe at one end
and I, on the other
were clasped together

Gripping the creeper
I traveled for an odyssey
beyond the universe
wearing the garland of the blossoms
it bestowed

Thursday, May 28, 2009






உறக்கமற்ற பின்னிரவில்
இது வேறோர் காலமாய் இருந்தது
மாயக் குகை ஒன்றின்
ஆதி இருள் நுழைய
கால அகாலத்தில் உலவும்
துன்ப உடல்
அகாலத்தின் சுரங்கம்
அழைத்துச் சென்றது
வேறோர் கனவின்
ஆழ் உறக்க வெளிக்குள்
விழிப்பினுள்ளே உறக்கம் மூழ்கியவள்
கனவுக் குடுவை ஏந்தி
இறக்கை முளைத்த
இருள் மோகினியாய்
ஊற்றுகிறேன்
உன் நினைவுக் கோப்பையில்
கொஞ்சம் சோமபானம்.



Wednesday, May 27, 2009

MERMAID, DOLPHIN AND THE SERENE EVE




Along the ECR Coast
Paatti will wave at you
from the waves


When you are
at the shore
you will never miss her
salty kisses

The setting sun
would rock her chair
amidst the surf

A mermaid would have
a moon-lit suck
of her breasts

Dont ever miss
the Dolphin's song
'PATTI... THE SERENE EVE'

* * * * *

The dishevelled
yester kolam dots
the disendowed badam leaves
the disconsolate empty chair
the remnants of
dismembered grey over the scissors....
an unclad angelic shadow
within the bathroom walls....
and a lot more is there
with you


Affectionately
Admirer of Hues

SHOULDERING THE GRIEF

Dear Thara,

i dont have many words. in a tightness of feelings and loss of words, i could share your sorrow not in words or symbols... but remember it is there...

paattiji, loved by you and by all others,.... she appeared in poems of yours... but that kindred spirit gave you ideas...you linked her with your own life with words, her ways with your ways... her past with your present...

somehow the sadness mixed time with inescapable feeling of life....

im sorry i could not come... firstly, i dont even know how to react to deaths... i did not know how i can come and help with things... i was confused due to my own policies/thoughts....

i might die earlier.....and i wont care who comes to attend.... besides, i have plans to go secret on things

sharing your lament....

Soundar
தீ குச்சியிலிருந்துதீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த தீயின்
மிச்சத்தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்
மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்
அணைத்து கரைக்க..!

அன்பின் தாரா,

இது எப்போதோ நான் எழுதிய கவிதை. கீதையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? இல்லை..இப்போது..நீங்கள் இப்படி இருப்பதுதான் சரி..குழந்தை மனமே..அந்த பாட்டிக்குநீ பெயர்த்தியா,,தாரா பாட்டிக்குஅவர்கள் பெயர்த்தியா..புரியல.. யாரும் நம்மை விட்டு போக முடியாதும்மா..அவங்க் உன் கூடதான் இருப்பாங்க...!

யாக்கை கவிதை என் தமிழ் கவியுலகம் வியக்கும்கவித்தாரகையின்உள்ளில் மிக இயல்பாய்புரியாது கேள்வி கேட்கும் ஒரு பிள்ளைமையின் புரியா அலறலை எனக்குள் பிழிந்தது. எல்லா சம்பிரதாயங்களும்..எல்லாம் முடிந்ததும்..திரும்பி பார்க்காமல்தான்போக சொல்கின்றன.

திரும்பிவிட்டால்..தேங்கிவிடுவோம்..தாரா..

எந்த அளவீட்டு கருவிகளாலும் அளவிட முடியாத அன்பு ஊற்று உங்கள் மனமென புரிகையில் அந்த பாட்டி கொடுத்துவைத்த்வர்கள்தான்.

எந்த பெயரத்தியும்..பாட்டிக்காக இப்படி துடித்ததாய்..நான் அறிந்ததில்லை..
அன்று இதே துடிப்பு ஷ்யாமிடமும்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள்.
அன்பு பாட்டியின் ஒவ்வொரு சொல்லையும் வாழ்க்கை ஆக்குங்கள்.

எனக்கு சரியான நேரத்தில் தெரிந்திருந்தால்..அந்த தெய்வத்தின்பொட்டல காலில் விழுந்தாவது வணங்கஓடிவந்திருப்பேன்.

எனக்கும் உள்ளூற பயம்தான்..உம்மாச்சியை எண்ணித்தான்..பயம் மரணத்தின் மீதல்ல..செய்ய முடியாமல் போகும் சாதனைகள் மீது.

உங்களுக்கொன்று தெரியுமா..அந்த் முகம் தெரியா பாட்டி"டேய் நான் சொல்றேண்டா..நினைக்கறதை எல்லாம்முடிச்சிட்டு நிதானமா வா..நான் சொல்றேன்"என வானத்திலிருந்து வாழ்த்துவதுபோல பிரமை.

பாட்டி நம்மோடுதான் இருக்கிறார்கள்.
சாப்பாட்டு மேசையில் அவர்களுக்கு ஒரு நாற்காலி
உங்கள் அலுவலகத்தில் ஒரு இருக்கை
வாகனத்தில் செல்லுகையில் பக்கத்தில்
எப்போதும் மனக்குகையுள்....!

பாட்டி எங்கேயும் போகவில்லை. இதோ என்னிடம்கூட வந்து பேசும் - வாழ்த்தும்- ஆசி சொல்லும் - பாதுகாக்கும்- நினைத்தாலே வந்து குரல்கொடுக்கும் - சிரிக்கும் - இன்னும் எழுதுடாஎன்று சொல்லும் -ஓர் உயர்ந்த நிலையில் நம்மோடேதான் இருக்கிறார்கள்.

அன்புடன்
வெங்கட் தாயுமானவன்

Tuesday, May 26, 2009

யாக்கை


பாட்டிம்மா.........

பாட்டிம்மா
உம்மாச்சி கிட்டே போய்ட்டாங்க.
நேத்திக்கி காத்தாலெ 4 மணிக்கு
உம்மாச்சி அவங்களுக்கு
பூ காட்டிட்டு கூட்டிட்டு போய்டுச்சு

அப்புறம் அவங்க உடம்ப
பொட்லம் கட்டிகுடுத்தாங்க
ஐஸ் பொட்டில போட்டு
வீட்ல பொட்லத்த வச்சு
எல்லாரும் சுத்தி நின்னு
அழுதோம்
மேலேர்ந்து அவுங்க
சிரிச்சுக்கிட்டே பாத்தாங்க
கடவுள் மடிலேந்து
சாயங்காலம் 4 மணிக்கு
மின் தகனமேடைலே
சரட்டுனு பொட்லத்தை வெச்சு
தள்ளிட்டாங்க
குபு குபுன்னு நெருப்பு
பத்திக்கிச்சு

5 மணிக்கு மேலே
எலும்பு சாம்பல் எல்லாம்
இன்னொரு மூட்டேல குடுத்தாங்க

6 மணிக்கு கடலுக்கு போனோம்
பலூனல்லாம் வித்தாங்க
சின்ன புள்ளங்க அத வெச்சுக்கிட்டு
விளயாடறத பாத்துகிட்டே
இந்த சாம்பல் மூட்ட வச்சுகிட்டு
கடல் கிட்டே போனேன்

பெரிய அலை வந்துச்சு
மூட்டைய திறந்து
சாம்பலக் கரச்சுட்டு
திரும்பிப் பாக்காம வந்துடோம்

வந்து பாத்தா
அதே நாற்காலிலே
அவுங்க உக்காந்து

“எங்கே போனம்மா
இவ்ளோ நேரமான்னு”
சிரிச்சுட்டே கேட்டுட்டு
காபி போட்டுத் தந்தாங்க

Because I could not stop for Death,
He kindly stopped for me;
The carriage held but just ourselves
And Immortality
- Emily Dickinson

Patti, even death cannot separate you from me


பால்யத்தின் பிராயங்களை
மென்று கொண்டிருக்கிறாள் பாட்டி
தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி

திரைவிழுந்த விழிகள்
இருப்பிற்கு அப்பால்
இனமறியாப் பதற்றத்துடன்

விடுவித்துக்கொள்ள இயலாத
பெருந்துக்கம் உலாத்தும் அவளை
விசித்திரமான புதிர் உலகில்

மர்ஃபி குழந்தையென ஆட்காட்டி விரல்
முகவாயில் பதிந்திருக்க
ஆழ்ந்த மௌனத்தின் வெளியில்
குரலற்ற காகமாய் அலையும்
நீராலான விழிகள் தருவிக்கிறன
‘லால்குடி’ நினைவுகளின் மின்னலை

உறைந்த விழிகளின் ஓரத்தில்
உருளக்காத்திருக்கிறது கண்ணீர்
சுருக்கம்மிகு கன்னங்களின் மீது

எவரும் புரிந்துகொள்ள இயலாத
நினைவுகளின் தொகுப்பை
ஓயாமல் உதடுகள் முணுமுணுக்க

காலம் இசையமைத்துக்கொண்டிருக்கிறது
அவளின் அந்திமப் பாடலை
(ருதுவனம்)

Saturday, May 16, 2009

பூமிக்குள் பாறை


ரோமமற்ற
பரந்த ராட்ஸச மணல் மார்பில்
சிதறி கிடக்கும் கிழிந்த முலைகள்..
காற்றின் ஊழிக் கால நகங்கள்
உயிர்க்குருதியை உறிஞ்சிக் குடிக்கப்
பைத்தியவெறியால் பேயொலியுடன்
பூமியை பிறாண்டும் அகாலங்கள்...
நுண்ணிய தப்படிகள் வைத்து
தப்பித்துக் கொள்ள முயலும்
ப்ரும்மாண்டப் பாறைகளின்
இடம்பெயர்தலைக் காட்டிக் கொடுக்கும்
மணல்கோடுகள் ..
ஆனாலும் எதுவும் சலனமற்றதான
பொய்வெளிச்சத்துடன்
லட்சியம் செத்த இறந்த மனத்தைப் போல்
விரிந்து கிடக்கும் பாலைவனம் ;
இங்கே உண்டு
நமது இதயத்திலும்
பிரபஞ்சத்திலும் ..

எஸ். வைத்தீஸ்வரன்

Tuesday, May 12, 2009

யவனிகாவின் கவிதை உலகு

யவனிகாவின் மிகை உலகு

ஒரே வரிக்குள் ப்ரபஞ்சத்தையே அடக்கிவிடக்கூடியது எதுவென்றும் புதிரான இருப்பையும் சராசரி வாழ்வையும் ஒரு நொடிக்குள் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிவிடக் கூடியது எதுவெனவும் என்னிடமிருந்த ஒரு மாயக்கண்ணாடியிடம் வினவ, அது எனக்கு ரகசியமாய்ச் சொன்ன பதில் “கவிதை” .

நோபல் பரிசு பெற்ற ஸ்பெயின் நாட்டுக் கவிஞனான ஹுவான் ரேமென் ஹிமேனெஸ் தனது வாழ்நாளில் இவர் 20 கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் நானே எழுதியது போன்ற உணர்வைத் தருகின்ற இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான் நானல்ல
நானே பார்க்க இயலாமல் என்னருகில் நடப்பவனும்
எப்போதாவது நான் சென்று சந்திப்பவனும்
சில சமயங்களில் நான் மறந்து விடுபவனும்
நான் உரையாடும் தருணங்களில்
அமைதியாக இருப்பவனும்
நான் வெறுத்து ஒதுக்கும் போது
இனிமையுடன் மன்னிப்பவனும்
நான் அறைக்குள்ளிருக்கையில்
வெளியே உலவிக்கொண்டிருப்பவனும்
நான் இறந்துவிடுகையில்
உயிரோடு நின்றுகொண்டிருப்பவனுமே
நானாயிருக்கிறேன்


மொழியின் மீதான தீராப்பசிதான் கவிதை உலகிற்குள் வாசகியாய் என்னை வழிநடத்திச் செல்கிறது. இப்படி நான் உலகக் கவிதைகளை தேடித் தேடிப் படித்துக்கொண்டிருந்தாலும் உலகத் தரத்திற்கு சற்றும் குறைவற்ற எழுத்துத் திறமையும் மொழி ஆளுமையும் உள்ள தமிழ்க் கவிதைகளை வாசிக்கும் போது மிகுந்த வியப்படைகிறேன்.

உலகமயமாக்கலில் கரைந்து கொண்டிருக்கும் நமது இருப்பும், இருப்பின் போராட்டங்களின் துன்புறுதலுக்கும் இடையே ஏறி ஏறிச் சருக்கிவிழும் வாழ்விலிருந்து கனவு வரிகளால் நம்மைக் கட்டியிழுத்து வேறோர் உலகிற்கு கொண்டு செல்வது மாதிரியான கவிதைகளைத் தருவதில் யவனிகா ஸ்ரீராமின் பங்களிப்பு அதிமுக்கியமானது. உணர்வுகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தக்கூடிய திறன் உள்ள யவனிகாவின் கடவுளின் நிறுவனமும், சொற்கள் உறங்கும் நூலகமும், திருடர்களின் சந்தையும் இதுவரையில் கண்டிராத வித்யாசமான கவிதை உலகினை அறிமுகம் செய்கின்றன.

பரந்த உலக நோக்குடனான கவிதை செய்யும் இவர் மானுடப் பிரக்ஞையை மறக்கடிக்கக்கூடிய மயக்கந்தரும் சொற்றொடர்களை வைத்து கலகத்தை உண்டுபண்ணக்கூடிய தீவிரமான அரசியல் கவிதைகளை மொழிப்படுத்துகிறார். கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாக இல்லாமல் ஒவ்வோர் வரியிலும் வாசகனை இறுத்தி வைக்கும் வலிமையான சொற்பதங்களையும் காட்சிப் படிமங்களையும் உருவாக்கும் தந்திரம் இவருக்கு கைவந்த கலையாய் இருக்கிறது.

கவிதைக்கான தீவிர மனோநிலையில் செயல்படும் இவர், வழக்கமான சூழல்களையும் உணர்வுகளையும் மட்டுமே கவிதையாக்காது, முற்றிலும் புதுமையான பார்வையுடன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் ஒவ்வொரு அசைவினையும் நுட்பமான பதிவுகளாக்கி அதனை மொழிக்குள் எளிதாய் வசப்படுத்தி விடுகிறார். புலன்களை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாய் தனக்குள் உதிக்கும் காட்சிகளை அல்லது தான் கண்டிருந்த காட்சிகளையோ தொன்ம வேர்களுடனான நவீன விருட்சமாக்கி சீறிப்பாயும் இவரது மொழி ஆற்றல் வியப்பையும் பேரதிர்ச்சியையும் தருவதாய் இருக்கிறது.

கடல் வாணிபமும், கடற்பறவைகளும், கடற்கரை உணவகமும், சுட்ட மீனும், பரவலாய் காணப்படுகின்ற இவரது கவிதகளை நெய்தலின் நவீனம் என்றுகூடச் சொல்லலாம். ஆயினும் எந்த ஒரு சட்டத்திற்குள்ளும் அடைத்து விட முடியாத பிரம்மாண்ட ஓவியமாய் வானுக்கும் பூமிக்குமாய் விரிந்துகிடக்கிறது இவரது கவிதை தீட்டிய கித்தான்.

ஒரே கவிதைக்குள் பலவிதமான மனிதர்களை, அசைவுகளை, நிகழ்வுகளை, விநோதங்களை, அடுக்கிக்காட்டியும் ஒரு குறும்படத்தினைப் போல காட்சிகளை அடுத்தடுத்து வேகமாய் நகர்த்தியும் வெவ்வேறு கோணங்களில் காட்சியின் விரிதல்களையும், ஒரு 3Dயின் வடிவம் போன்று கண்முன் நிறுத்துகிறார் தனது விந்தைக் கவிதைகளின் வழியே.. பொதுவாகவே நீண்ட, இடைவெளியற்ற, கவிதைகள் ஒருவகையான சலிப்பையும், தொடர்வாசிப்பிற்கான இடைஞ்சலையும் உருவாக்கக்கூடுமெனினும் இவரது காட்சிப்படிமங்களில் நாம் உணர்கின்ற அதிர்வலைகளும் ஆச்சர்யங்களும் இவரது கவிதையின் ஒரு மாயச்சுழலுக்குள் அனாயாசமாய் நம்மைச் சிக்கவைத்து அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

பறவைகள் முட்டையிலிருந்து வருவதைப் போல நம்பிக்கைகள் நிலத்திலிருந்து எழுகின்றன (திருடர்களின் சந்தை) என்ற முதல் கவிதையின் வரியில் இருந்து தொடங்குகிறது இவரது கவிதை மீதான நமது நம்பிக்கையும். வாசகனுக்குத் தன் நிலத்தின் அருமையினைக் காட்டுகின்றது காலக் கண்ணாடியில் இவரது மாய வரிகள் உருவாக்கும் பிம்பம். எனது நிலம் எப்போதும் சூரிய பார்வையில் இருக்கிறது - என்ற வரியில் தனது நிலம் குறித்த பெருமையினை கம்பீரமாய் ஒரு அரசனைப் போலச் சொல்ல முடிகிறது இவரால்.

இவரது காயங்களிலிருந்து பெருகும் குருதியை மாந்தி தேனீக்கள் குரூரமாய் ரீங்கரிக்கின்றன.. தன் கனவுகளின் நிலம் வழியே பெயரற்ற யாத்ரீகனாய் பயணிக்கும் இவர் அக்கனவுகளின் கருமசியை கவிதைகளில் துடைக்க, வாசகனின் விழிகளுக்குள் நீள்கிறது அறுந்து போன அவரது கனவின் வேறோர் அடர்ந்த பாதை. இவரது கனா நிலத்தின் இளம் பெண்கள் இரவெல்லாம் இயந்திரங்கள் ஆடைகளுக்குள் துழாவுவதாக முறையிடுவதாய் வருந்தும் இவர் நவீன உலக பெண்களின் வெளிப்படையான காம உணர்வுகளை முகத்தில் அறையும் வண்ணம் நம் முன் வைக்கிறார். வடிவமற்ற கனவுகளுக்கு உடலும் உணர்வும் உயிரும் தருகின்ற இவரது கற்பனை விநோதங்கள், கனவுகளை நுகர்ந்து பார்த்து அவற்றுக்குப் பழங்களின் மெல்லிய மணமிருப்பதாய்ச் சொல்கையில் வாசகனின் நுகர்வுச்செல்களைத் தூண்டி அத்தகைய வாசனை தேடி அலையுமாறு மறைமுகக் கட்டளையிடுகிறார்.

சின்னாளம்பட்டியின் சிறிய தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கும் இவரை, இவரது மாயக் கனவுநிலம் எந்தத் தருணத்தில் உள்வாங்கியிருக்குமென்பது குறித்தே பேராராய்ச்சியொன்று செய்தல் அவசியம். நில அதிர்வினைப்போன்ற விரிசல்களை வாசகனுக்குள் உருவாக்கும் இவர், தம் கவிதைகள் வழியே புதிர் உலகினுள் நுழைந்து வடிவம் மாறி மாறித் திகைக்கும் ஆலிஸ் போலத் தனது உணர்விழைகளை நீட்டியும் குறுக்கியும் அலைகிறார், தனது கனவு நிலமெங்கும் ஒரு மென்னுடல் நத்தையென.

உயரமான கட்டிடமொன்றில் தொங்குமொருவன் விளிம்பில் எச்சமிட வந்த பறவையுடன் உரையாடி மகிழ்வதை எப்படிக் கவிதைக்குள் சிந்தித்திருக்க இயலுமென வியந்து ரோமங்கள் குத்திட்டு நிற்கையில் அந்தப் பறவை தனது காலொட்டியிருக்கும் மகரந்தங்களை அவனது முகத்தில் மஞ்சள் கோடுகளாய் வரைகின்ற நுட்பமான கற்பனை அதீதமான பனியின் சில்லிப்பை நரம்புக்குள் செலுத்துகிறது சப்தமின்றி.

இவர் காட்சிப் படுத்தும் வகை வகையான படிமங்கள் அதிர்வைக் கொடுத்து கலகத்தை விளைவிக்கின்றன. ஒருவிதமான அச்சமூட்டக்கூடிய காட்சிப் படுத்தலும் நம் முன் விரிகின்றன.

கிழிபட்ட காயத்தை தக்கிறவன், சொற்களை புதுப்புது நூல்களாகத் தொகுப்பவன், இறந்தவனின் எச்சங்களைச் சேகரிப்பவன், முதிர்ந்த மூங்கிலைத் துளையிட்டு இசைப்பவன், தொப்பிக்குள் மறைந்திருக்கும் ஓநாய்த் தலையன், என்று இப்படிப் பலவிதமான மனிதர்கள் உலவும் உலகமாய் இருக்கிறது அவரது திருடர்களின் சந்தை. வீடற்றவர்களின் உலகம் என்ற கவிதையில் இவர் காட்டியிருக்கின்ற கவிதைக் கோணங்கள் விஞ்ஞானத்தின் குளோனிங் விந்தைகளையும் விலங்குகளின் உலகத்தையும் மூன்றாம் உலக யுத்தத்தையும் கடைசி மனிதனின் வாழ்வுக்கான தவிப்பையும் உரத்த நியாயங்களாய் பதிவு செய்திருக்கிறது. இன்றுவரை நான் வாசித்துணர்ந்த கவிதைக்ளில் இல்லாத உணர்வுகளின் புகைமப் பிரபஞ்சத்தை என்னுள் நிரப்பியிருக்கின்றன இவ்ரது கவிதைகளின் படிமங்களும், காட்சிப் படுத்தல்களும், கனவின் மாயைகளும்.

இவரது கவிதைகளில் நகரும் கழிவறைகளும், புதுப்பிக்கப்பட்ட ஆலயக் கழிவறையும் நவீனமாக்க வேண்டிய பழங்கழிவறையும் சால்வடோர் டாலியின் நவீன ஓவியங்களை நினைவூட்டுகின்றன.

கடவுளின் நிறுவனத்தின் ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் விதமான உணர்வுகளை உருவாக்க அடுத்தடுத்து நிகழும் பருவ மாற்றத்தினுள் சிக்கித் தவிப்பது போலொரு உணர்வெழுகின்றது. கரும் ரேகை படர்ந்த கூழாங்கற்களையொத்த கண்களின் வெடிப்பிற்குள் அரவங்கள் நெளியக் காணும் இவரது பார்வை மிகவும் விநோதமாய் இருக்கிறது. ஒரு அடர்ந்த வனத்தினூடே நெருப்பென ஊர்ந்து சொல்கிற்து இவரது மொழி. உயிர்வளி மண்டலத்தில் பருவங்களின் காலமாற்றத்தை நத்தைக்கூடுகள் இவரது கனவுலகில் நகர்த்த கானல் தகடுகளில் நீர்ச்சலனமாய் எழுகிற உடலுடன் தனது கவிதையின் மாயநிலத்தை சித்தரிக்கிறார் பிரபஞ்சத்தின் விளிம்புகளைத் தீட்டமுடியா தூரிகையில் மீந்த வர்ணத்தில்.

உடைந்த பற்கள் கொண்ட வேசியினை இவர் எந்த நிலத்தில் கண்டிருக்கக்கூடுமென யோசித்த போது, சாஸரின் “Canterbury Tales”ன் ஒரு கதாபாத்திரமான ஐந்து முறை மணம் செய்து கொண்டபின்னும் பலருக்கு ஆசை நாயகியாயிருந்த, முன்னிரண்டு பற்களின் இடையே அகன்ற இடைவெளிகொண்டவளும், ஒற்றைக் காது செவிடான, தன்னை சீமாட்டி போல் அலங்கரித்துக் கொள்வதில் அளவற்ற விருப்பமுடனும், எல்லோரையும் வாதுக்கு அழைப்பவளாகவும், காமலீலைகளில் கைதேர்தவளுமான Bath நகர ஆசைநாயகியை ஏனோ அவள் நினைவூட்டுகிறாள்.

மொழியை தீராத காமத்துடன் சலிப்பின்றி புணர்கிறது இவரது கவிதை. தூய காமம் முற்றிலும் ஆவியுலகு சேர்ந்தது என்றெழுதப்பட்ட வரிகள் ஆதியுலகின ஏவாளின் கனிந்த புன்னகைக் கீற்றைப் பிரகடனம் செய்கிறது. இவரது காதலியின் சரேலென்ற ஆடைவிலகலில் உலகம் இற்று வீழ்கிறது பிடிமானமின்றி. ஆதாமுக்கும் ஏவாளுக்குமாய் கடவுள் படைத்திருந்த ஏடனும் சாத்தானின் தூண்டுதலில் உண்ட அறிவுக் கனி சரேலென விலக்கிக் காட்டிய நிர்வாணத் துகிலும் ஆதி மனுஷிக்குள் சங்கமித்த முதற்காமமும் அதன் பின்னாக இறைவனின் சபித்தலில் இற்று வீழ்ந்த உலகும் டாவின்ஸியின் இடமிருந்து வலமாய் எழுதப்பட்டுள்ள விளங்கிக்கொள்ள இயலாத விநோதப் புதிராய் யவனிகாவின் கரம்வழியே நம்முன் அவிழ்கின்றன.

உலகம் ஒரு விஷத்துளியைப் போல் அழகானதென்றும் ஆழ்கனவுகளால் பைத்தியம் பிடித்தலைகிறது இப்பூமியென்றும் தனது கூரிய வரிகளால் எழுதிச் செல்கிறார். நிலத்தைப் பாளம் பாளமாக உரித்தெடுத்து மடித்து வைக்கின்ற ஒருவனை உருவாக்கி அவன் மதுசீசாக்களுடன், சில துப்பாக்கி ரவைகளையும், பழஞ்சொற்ச்சுவடியையும் சேகரித்துக் குவிப்பவனாக்கிக் கலகம் விளைவித்து அமைதியாய் தூண்டிலோடு அமர்ந்து கொள்கிறார். சூரியக் கோளம் நுழைவாயிலென அவரது வருகைக்கென தரையில் விழுந்து திறந்து கிடக்க, எழுதப்படாத காகிதம் போல் படபடக்கிறது கடல் இந்தக் கவிஞனின் முன்னே.

கீழ்த்திசையும் மேல்த்திசையும் கடற்பயணம் செய்த யவனனின் அனுபவ முதிர்ச்சி தொனிக்கிறது இவரது கவிதைகளில். கவிதைகளுக்குள் இத்தனை கனவுலகும், விநோதங்களின் அதீதங்களும், காணாத தேசங்களின் மனிதர்களும், செதில்கள் நிறைந்த விசித்திரப் பிராணிகளும் மூழ்கிக் கிடக்க இவர் கிரகங்களை மேருவாக்கி கற்பனைக் கயிறுகட்டிக் கடைந்து நிற்க ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் மேலெழுந்து வருகின்றன கவிதையின் அமிர்தகலசமாய்.

காமத்தின் பரவச்ங்களை இழக்கத் தொடங்கும் போது ஒருவன் ஞானியென நடிக்கத் தொடங்குகிறான் என்று தத்துவார்த்தங்களும் நிறைந்து ந்மமை பிரமிக்க வைக்கின்றன இவரின் கவிதைத் தொகுதிகள்.

கடவுளின் முகத்திற்குக் கூட திடுக்கிடும் வடிவம் கொடுத்திருக்கிறது இவரது தொகுப்பு. காலங்களின் உள்ளோடு மண் அள்ளி வீசுகின்ற துயரத்தின் அழகில் கவிதைகள் ஒலித்தபடி இருக்க கடவுளின் முகத்தை வரைவதாகச் சொல்கிறது அந்த ஓவியம் போன்ற கவிதை

கனவுகளின் புனைவும் மொழியின் செரிவுமாய் அமைந்திருக்கும் இவரது கவிதைகள் காலத்தால் அழியாதவை.


”ஆனால்
அவனுக்கு எப்படித் தெரியும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுதும் இதே முடிவை எடுத்திருப்பது பற்றி”

- சொற்கள் உறங்கும் நூலகம்