Showing posts with label பாட்டிம்மா. Show all posts
Showing posts with label பாட்டிம்மா. Show all posts

Tuesday, May 26, 2009

யாக்கை


பாட்டிம்மா.........

பாட்டிம்மா
உம்மாச்சி கிட்டே போய்ட்டாங்க.
நேத்திக்கி காத்தாலெ 4 மணிக்கு
உம்மாச்சி அவங்களுக்கு
பூ காட்டிட்டு கூட்டிட்டு போய்டுச்சு

அப்புறம் அவங்க உடம்ப
பொட்லம் கட்டிகுடுத்தாங்க
ஐஸ் பொட்டில போட்டு
வீட்ல பொட்லத்த வச்சு
எல்லாரும் சுத்தி நின்னு
அழுதோம்
மேலேர்ந்து அவுங்க
சிரிச்சுக்கிட்டே பாத்தாங்க
கடவுள் மடிலேந்து
சாயங்காலம் 4 மணிக்கு
மின் தகனமேடைலே
சரட்டுனு பொட்லத்தை வெச்சு
தள்ளிட்டாங்க
குபு குபுன்னு நெருப்பு
பத்திக்கிச்சு

5 மணிக்கு மேலே
எலும்பு சாம்பல் எல்லாம்
இன்னொரு மூட்டேல குடுத்தாங்க

6 மணிக்கு கடலுக்கு போனோம்
பலூனல்லாம் வித்தாங்க
சின்ன புள்ளங்க அத வெச்சுக்கிட்டு
விளயாடறத பாத்துகிட்டே
இந்த சாம்பல் மூட்ட வச்சுகிட்டு
கடல் கிட்டே போனேன்

பெரிய அலை வந்துச்சு
மூட்டைய திறந்து
சாம்பலக் கரச்சுட்டு
திரும்பிப் பாக்காம வந்துடோம்

வந்து பாத்தா
அதே நாற்காலிலே
அவுங்க உக்காந்து

“எங்கே போனம்மா
இவ்ளோ நேரமான்னு”
சிரிச்சுட்டே கேட்டுட்டு
காபி போட்டுத் தந்தாங்க