Wednesday, September 9, 2009



உறக்கமற்ற இரவுகளில்
நான் கவிதை எழுதுவதில்லை
தொடர் புகைப்பதில்லை
மது மிடறுகளும் கிடைப்பதில்லை
என் கழுமரத்தைச் சுற்றும்
பருந்துகளின் நிழல்களை
விரட்டுவதற்குள்ளேயே
விடிந்துவிடுகின்றது
மற்றொரு பகலின் வதைமுகம்

Tuesday, September 8, 2009


பதறி விலகியோடும்படிக்கு என்ன நேர்ந்து விட்டது
சிலுவையில் நம்மை நாமே அறையும்படிக்கு தவறென்ன செய்தோம்
ஒரு வகையில் உனதிந்த மௌனம் தண்டனையல்ல, பரிசு
கேட்காத இசையெல்லாம் இனிதென்றான் கீட்ஸ்
பேசாத வார்த்தைகளால் ஆன மௌனம் எத்தனை கசப்பாய் இருக்கிறது
இருவரும் குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தியிருக்கலாம்
அல்லது பேருந்து நிலைய நிழற்குடை கீழ் சற்று உரையாடியிருக்கலாம்
நிர்பந்தகளின் நங்கூரமற்றும் நிரூபணங்கள் புயல்களற்றும்
நிழலை கொத்தும் பறவை போலிருக்கிறேன்
பிளவுற்ற மனதின் துயரம் உயிரை விழுங்குகிறது
ஒளிந்து விளையாடல் பரவசமெனினும்
எத்தனை பதற்றமளிக்கிறது தொடர்ந்து ஒளிந்திருப்பது
திரைக்கும் பின்னின்று நடத்தும் மௌன நாடகம்
நிபந்தனைகளற்ற அன்பை அலட்சியப்படுத்தி
என்னை அதிக துயரத்திற்கு உள்ளாக்குகிறது
உலகம் காலத்தை கிருஸ்துவுக்கு முன்னும் பின்னுமாய் பிரித்தது
நீயும் கூடஎனக்கு முன், எனக்குப் பின்னென
வாழ்வை வகுத்துக்கொண்டதாய்ச் சொல்கிறாய்
நீ நினைவழிந்து போன துஷ்யந்தனான பிறகு
இந்த அசாதாரணமான வார்த்தைகளில் எல்லாம்
நம்பிக்கை போய்விட்டது
நான் எழுதுபவையெல்லாம்
உனை வருத்தத்தில் ஆழ்த்தலாம்
அல்லது என் மீது வெறுப்பைக்கூட வளர்க்கலாம்
ஒருபோதும் நான் மன்னிப்பு கோரப்போவதில்லை
காதலின் மாயத்தை அருந்திய பின்பு
இதயம் மனது வார்த்தை ஆன்மா அனைத்தும்
உண்மையை மட்டுமே பேசுகின்றன
அழுது தீர்த்தாகிவிட்டது மகாசமுத்திரமாய்
நீல நிலா வந்து போய்விட்டது
நீலம்பாரிக்கும் மௌனத்தில் எனைப்
புதைத்துவிட்டும் போய்விட்டது
எவ்வித பதற்றமும் படபடப்புமற்ற
தெளிவுடனேயே நானிதனை எழுதுகிறேன்
புத்தரின் சிரிப்புடன் அமைதியாயிருக்கிறேன்
காதல் காமம் வாழ்வு கடமை மரணமென
அனைத்தையும் பார்த்து புன்முறுகிறேன்
ஆழமான வலி உனதென அறிவேன்
ஆனால் துயருரும் போதேனும்
அமைதியை நாடவில்லையெனில்
அமைதி தன் மதிப்பிழந்து விடுகிறது
அடிக்கடி நீயென்னை
ஆழ்கடலின்அமைதியென சொல்வதை
நினைவூட்டவில்லை நான்
வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை,
என்ன செய்வது
பல சமயங்களில்
மௌனமாயிருப்பது போலவே
சில சமயங்களில்
கர்ஜிப்பதுமாகவே இருக்கிறது
காயமுற்ற காதல்