Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, January 25, 2010







காதலைப் போலவே
காயங்களும் கூட
உன்னதமானவைதான்
நாட்காட்டியின் பக்கங்களில்
உன்னதங்களின்
நிழல் படர்ந்திருக்க
வாசனையற்ற நினைவுகள்
உதிர்கின்றன அதன் மீது
*


நன்றி : கல்கி, ஜனவரி 31 , 2009








சில பொய்யான
பிரியங்கள்
ஒரு வேட்டை நாயென
குரல்வளையைக் குதறுகின்றன
ஆயினும்
அன்பை ஒருபோதும்
நான் தந்திரமென்று
ஒதுக்க இயலாதவளாகவே
இருக்கிறேன்
*
நன்றி : கல்கி ஜனவரி 31, 2010






தீராத வலிகளே
என்னை நான் வெல்ல
எனக்கு அளிக்கப்பட்ட
அஸ்திரங்கள்

வலிகளே என்னை
முழுமையாக்குகின்றன
வலிகளின் எல்லைகள்
விஸ்தீரணமடைவதிலேயே
எனது இருப்பு
ஸ்திரப்படுகிறது

*

நன்றி : கல்கி, ஜனவரி 31, 2010





Monday, October 26, 2009


கடவுளின் மறுவுரு

எதையும் எழுதாமலேயே நேரம் கடந்துவிட்டது
கடந்தது குறித்து வருந்துவதிலேயே
இன்றும் கழிந்துவிடும்
கடந்தது இறந்தது.
இறந்தது கடந்தது.

நேரத்தின் கலத்தைச் செலுத்துபவன் எவன்.
யமன் ஒன்றும் நமது நேரக்காப்பாளன் இல்லை
மரணம் கூடக் கடைசி மணி அல்ல,
இருப்பினும் வாழ்வு
மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது

பசியெடுக்கும் போது விழுங்கும்
அந்த விநோத விலங்கைப் பார்திருக்கிறாயா நீ

வாழ்வின் சகல துடிப்புகளுடனும் உடல்
தலை புழுத்த மண்டையோடு
வலக்கையில் சாத்தானின் வால் போன்றொரு தூண்டில்
இடக்கையின் மணிக்கட்டில் கிண்கிணித் தொட்டில்
கண்களின் பொந்துகளில் ஒளிந்திருக்கும் முற்றுபெறா இரவு
மூன்றாம் கை வலியற்றுத் உயிர் துண்டிக்கும் கோடாரி
மூன்று கைகளும் மூன்று காலங்குறிக்க
தோளில் காகத்துடன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்திருந்த அதனை
ஒரு புராதனத்தின் அகழ்வில் சந்தித்ததாகக் கனவில் வந்தது

உரையாடிப் பிரிந்த போது கரப்பன்கள் ஊர்ந்த வாயுடன் முத்தமிட்டது
நிலம் நடுங்கிப் பிளந்த பின்னும் உயிரோடிருந்தேன்

ஆயினும் அக்கணத்தில்
வாழ்வின் தத்துவக் குழப்பங்கள் அனைத்தையும் முடித்து வைக்கும்மரணத்தைக் கடவுளென்று அறிந்துகொண்டேன்

(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

வெள்ளை ஒயின்

புயல் நாளொன்றில்
சீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்
கண்களுக்குப் புலப்படா நட்சத்திரங்களென
கரைமீதிருந்தோம்

என் மீதான கவிதையொன்றை
அவன் சொல்லத் தொடங்கிய போது
கண்ணாமூச்சியாடிக் களைத்த நண்டுகள்
வளைகளை மறந்து அவன் காலருகே
கொடுக்குகள் தூக்கி நின்றன

கரங்களிலிருந்த கோப்பையின்
வெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி
கலந்து அருந்தினோம்

அவன் நுனி நாக்கு சர்ப்பமென
மேலன்னம் துழாவியதில்
மூக்கின் மீதோடி உதட்டில் இறங்கிய

மழைத்துளியில்
ஆதிரத்தத்தின் வாசனை

காற்றும் மழையும் கடலும் மதுவும்
எதிரெதிரே மோதிய அலைகளில்
இனமழிந்த விலங்குளின் பெருயுத்தம்

யாரோ பெரிய பெரிய பாறைகளை
கடலின் ஊடே எறிய நடுங்கின சொற்கள்

மெல்லிய உள்ளங்கைப் பற்றுதலில்
திடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு

கரை சூழ்ந்த கடலில் கரங்கள் பிணைத்து
உயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்
நீந்தினோம் புயலின் பயமற்று

பதற்றமுடன் நண்டுகள்
வளையில் இறங்கிக்கொண்டிருந்தன
(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

ஓவியத்தில் உறைந்தவள்

ஏதேனின் விழுதுகள்
நம்மை பிணைத்திருந்தன
ஆன்மாவின் ஓவியக்கித்தானில்
உன்னுள் நுழைந்து ஆக்கிரமிக்கிறேன்
எனதிந்த வார்த்தைகளின் வழியே
கடந்து போன காலம் மறுபடியும்
நம்மை ஏந்திச் செல்கிறது பின்னோக்கி
மீண்டும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட
பூர்ணசந்த்ரோதயப் பொழுதில்
நமது முதல் சந்திப்பு
முதல் ஸ்பரிஸம், முதல் முத்தம்
எல்லையற்று விரியும் தொடுவானில்
உனது திளைப்பின் பார்வையில் அலை
இருவரும் இடையறா முத்தங்கள் பகிரும்
ராஃபலின்
[1] கியூபிட்[2]களாய் இருந்தோம்
மாலையின் மஞ்சள் தூரிகை
உன் அருகாமையின்
கதகதப்பை தீட்டிய போது
என்னில் உருக்கிய பொன்னின்
மினுமினுப்பு கூடியது
பூங்காற்றை வீsசி படபடத்தன
இளவேனில் இரப்பைகள்
உதிர்ந்த பன்னீர் பூக்களின் முன்னிரவில்
தழுவிப்பிணைந்த நம் உடல்வழியே
இசை நதியாகியது
மிதந்தபடியே நாம்
இரவை நெய்து முடித்திருந்தோம்
ஏதேன் தன் முத்தங்களை
இன்னும் விதைத்தபடியே இருக்கிறது

(நன்றி: பவளக்கொடி, அக்டோபர், 2009)

[1] ராஃபல் ஒரு மறுமலர்ச்சிக்கால ஓவியன்,
[2] கியூபிட் ஒரு தேவ குழந்தை

Tuesday, October 6, 2009


கடற்கரையில் நேற்று மாலை கடவுளைச் சந்தித்தேன்
அலைகளின் நுரைபோலத்தான் அவரும் இருந்தார்
உரையாடிக்கொண்டே கரையோரம் நடந்த போது
வரமொன்று தரச்சொல்லிக் கேட்டேன்
கேட்கலாமெனக் கரம் பிடித்தார்
உலோகத்தின் குளிர்ச்சியுடனிருந்தது அவரது கரம்
நிமிர்ந்து விழிகளுக்குள் பார்வையைச் செலுத்தினேன்
நெருப்பின் வெப்பம் என் நாளங்களில் நகர்ந்து பரவியது
சில நட்சத்திர மீன்கள் கரையேகி வந்து எங்கள் காலருகில் வீழ்ந்தன
கடற்பறவைகள் எங்களது பேச்சைக் கேட்கும் விழைவில் தாழப் பறந்தன
அந்த உயர அலைகளையும் கரை பரந்த மணலையும்
மீன்களையும் பறவைகளையும் சாட்சியாய் வைத்து
என் தோழமை அனைத்தும் எப்போதும் நலம் வாழக் கேட்டேன்
நான்கு நாட்களுக்கு மட்டுமே வரம் பலிக்கும் என்றார் புதிர்ப் புன்னகையுடன்
எனில் ஒரு வசந்தம், ஒரு கோடை, ஒரு இலையுதிர், ஒரு பனி
என பருவத்திற்கொன்றாய் நான்கு நாட்கள் கேட்டேன்
மறுத்தவர் நான்கல்ல மூன்று கேள் என்றார்
எனில், நேற்றும் இன்றும் நாளையும் என தயக்கமின்றிச் சொன்னேன்
இல்லை, இரண்டு நாட்கள் எனக்கூறி விலகி நின்றார் கடவுள்
சரி ஒரு வெளிச்சப் பகல் நாளும் ஒரு இருள் நிறைந்த இரவு நாளும் என்றேன்
இன்னும் சற்று விலகியவர்
இல்லை, ஒர் நாள் மட்டுமே என்றார் புன்னகையற்று
வருத்தமேதுமின்றித் தலையசைத்தேன்
கேள்வியாய்ப் புருவம் உயர்த்தி அந்நாள் எந்நாள் என்றார்


கடலில் மூழ்கும் சூரியனைப் பார்த்தவாறே
‘ஒவ்வோர் நாளும்’ என அழுத்தமாய் உரைத்தேன்
வாய்விட்டுச் சிரித்த கடவுள்
அப்படியே ஆகட்டுமென ஆசீர்வதித்து மறைந்தார்.
ஆரத் தழுவிய் ஸீகல் பறவைகள்
உச்சந்தலையில் முத்தமிட்டுப் போயின

Tuesday, September 8, 2009


பதறி விலகியோடும்படிக்கு என்ன நேர்ந்து விட்டது
சிலுவையில் நம்மை நாமே அறையும்படிக்கு தவறென்ன செய்தோம்
ஒரு வகையில் உனதிந்த மௌனம் தண்டனையல்ல, பரிசு
கேட்காத இசையெல்லாம் இனிதென்றான் கீட்ஸ்
பேசாத வார்த்தைகளால் ஆன மௌனம் எத்தனை கசப்பாய் இருக்கிறது
இருவரும் குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தியிருக்கலாம்
அல்லது பேருந்து நிலைய நிழற்குடை கீழ் சற்று உரையாடியிருக்கலாம்
நிர்பந்தகளின் நங்கூரமற்றும் நிரூபணங்கள் புயல்களற்றும்
நிழலை கொத்தும் பறவை போலிருக்கிறேன்
பிளவுற்ற மனதின் துயரம் உயிரை விழுங்குகிறது
ஒளிந்து விளையாடல் பரவசமெனினும்
எத்தனை பதற்றமளிக்கிறது தொடர்ந்து ஒளிந்திருப்பது
திரைக்கும் பின்னின்று நடத்தும் மௌன நாடகம்
நிபந்தனைகளற்ற அன்பை அலட்சியப்படுத்தி
என்னை அதிக துயரத்திற்கு உள்ளாக்குகிறது
உலகம் காலத்தை கிருஸ்துவுக்கு முன்னும் பின்னுமாய் பிரித்தது
நீயும் கூடஎனக்கு முன், எனக்குப் பின்னென
வாழ்வை வகுத்துக்கொண்டதாய்ச் சொல்கிறாய்
நீ நினைவழிந்து போன துஷ்யந்தனான பிறகு
இந்த அசாதாரணமான வார்த்தைகளில் எல்லாம்
நம்பிக்கை போய்விட்டது
நான் எழுதுபவையெல்லாம்
உனை வருத்தத்தில் ஆழ்த்தலாம்
அல்லது என் மீது வெறுப்பைக்கூட வளர்க்கலாம்
ஒருபோதும் நான் மன்னிப்பு கோரப்போவதில்லை
காதலின் மாயத்தை அருந்திய பின்பு
இதயம் மனது வார்த்தை ஆன்மா அனைத்தும்
உண்மையை மட்டுமே பேசுகின்றன
அழுது தீர்த்தாகிவிட்டது மகாசமுத்திரமாய்
நீல நிலா வந்து போய்விட்டது
நீலம்பாரிக்கும் மௌனத்தில் எனைப்
புதைத்துவிட்டும் போய்விட்டது
எவ்வித பதற்றமும் படபடப்புமற்ற
தெளிவுடனேயே நானிதனை எழுதுகிறேன்
புத்தரின் சிரிப்புடன் அமைதியாயிருக்கிறேன்
காதல் காமம் வாழ்வு கடமை மரணமென
அனைத்தையும் பார்த்து புன்முறுகிறேன்
ஆழமான வலி உனதென அறிவேன்
ஆனால் துயருரும் போதேனும்
அமைதியை நாடவில்லையெனில்
அமைதி தன் மதிப்பிழந்து விடுகிறது
அடிக்கடி நீயென்னை
ஆழ்கடலின்அமைதியென சொல்வதை
நினைவூட்டவில்லை நான்
வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை,
என்ன செய்வது
பல சமயங்களில்
மௌனமாயிருப்பது போலவே
சில சமயங்களில்
கர்ஜிப்பதுமாகவே இருக்கிறது
காயமுற்ற காதல்

Sunday, August 16, 2009






ஏற்கனவே இறந்திருந்தேன்
கண்ணாடிக்குள் யாருமற்ற பிம்பத்தில்
காதலைச் சொல்லும் எனது உடல்
சாலைகளில் துக்கம் பெருகியோட
உதிர்ந்த மலரின் வாசனை நகரெங்கும்
துக்கத்தில் ஒரு தாவரம் துளிர்த்து எழும்
மொட்டின் நோக்கத்துடன்
பொழுது விடிய இருக்கிறது





(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)

Monday, July 6, 2009


கனல் பறக்கப் பாறைகளில் குளம்புகள் தேய்த்து
ஒற்றைக்கொம்புக்குதிரை கனைத்துத் தாவும் நள்ளிரவு
இருட்காட்டின் சருகுகள் நொறுங்க அலையும்
பசித்த ஓநாய்க் கண்களின் கூரிய பச்சை ஒளியுடன்
மயக்கமூட்டி நெருங்கும் ஒரு நிழலுருவம்
இரவின் தாபப் பெருமூச்சில் வெப்ப நதி பெருக
நிலத்தில் கிடக்கிறாள் கலைந்த ஓவியமாய்
தீரா தாகத்துடன் படருமவன் கரிய இதழ்கள்
உறிஞ்சிய இளஞ்சூட்டுக் குருதித் துடிப்பை
உச்சத்தின் முனகலோடு எதிரொலிக்கும் இருள்
தலை துண்டித்த ஆட்டுக்குட்டியாய்
உடல் துள்ளித் துடிக்க வெளியேறிய கடைசி மூச்சில்
சாத்தானின் பாடல் அதிர, வெடித்த நிலத்தில்
அகன்ற வால் சரசரக்கப் பதறி இடம்பெயரும்
முதலைகள் முரட்டுக் கால்களால்
ஒன்றையொன்று இறுகத் தழுவின
உருகிய மெழுகென பிரக்ஞையற்றுக் கிடந்தவளின்
வியர்வை பூத்துத் திறந்திருந்த மார்பில் முத்தமிட்டு
இருள் வௌவாலாய் மறைகிறான் தாகந்தீர்ந்து
பனியாய் உறைந்த அவளுடல் மீண்டும்
தாகம் மீறும் இன்னோர் இரவில்
குருதி நதியாய் விழிக்கும்
அவனருந்தும் கனவின் கரையில்

Saturday, July 4, 2009




பாலை நான்
கானல் நீரை அருந்து
தாகம் தோன்றும்
கடந்து போ என்னில் இப்போது
இன்னும் அதிகம் தாகிப்பாய்
ஒட்டகத்தை எங்கே தொலைத்தாய்
தேடாதே, மணல் மேடுகளுக்குள் மறைத்துள்ளேன்
கிழிந்த ஆடையணிந்த பாரசீகக் கவிஞனைப் போல்
யாழுடன் பாடித்திரி
ஒரு பௌர்ணமியின் ஒளிக்கடலில்
நிறுத்தாமல் நீயிசைக்கும் அந்தப் பாடலில்
பாலை முழுதும் பேரீச்சை பழுக்கட்டும்

*



குதிரைகளை விடவும் குளம்புகளைப் பிடிக்கிறது
இரட்டைப் பிறை குளம்பொலிக்கத்
தாவி வரும்போது பொங்கும் குதூகலம்
நாடோடிகளின் மத்தளமென இசைக்கிறது
நான் வானமாகிறேன்
குதிரை ஹம்மிங் பறவையாகிறது

Thursday, May 28, 2009






உறக்கமற்ற பின்னிரவில்
இது வேறோர் காலமாய் இருந்தது
மாயக் குகை ஒன்றின்
ஆதி இருள் நுழைய
கால அகாலத்தில் உலவும்
துன்ப உடல்
அகாலத்தின் சுரங்கம்
அழைத்துச் சென்றது
வேறோர் கனவின்
ஆழ் உறக்க வெளிக்குள்
விழிப்பினுள்ளே உறக்கம் மூழ்கியவள்
கனவுக் குடுவை ஏந்தி
இறக்கை முளைத்த
இருள் மோகினியாய்
ஊற்றுகிறேன்
உன் நினைவுக் கோப்பையில்
கொஞ்சம் சோமபானம்.



Saturday, May 16, 2009

பூமிக்குள் பாறை


ரோமமற்ற
பரந்த ராட்ஸச மணல் மார்பில்
சிதறி கிடக்கும் கிழிந்த முலைகள்..
காற்றின் ஊழிக் கால நகங்கள்
உயிர்க்குருதியை உறிஞ்சிக் குடிக்கப்
பைத்தியவெறியால் பேயொலியுடன்
பூமியை பிறாண்டும் அகாலங்கள்...
நுண்ணிய தப்படிகள் வைத்து
தப்பித்துக் கொள்ள முயலும்
ப்ரும்மாண்டப் பாறைகளின்
இடம்பெயர்தலைக் காட்டிக் கொடுக்கும்
மணல்கோடுகள் ..
ஆனாலும் எதுவும் சலனமற்றதான
பொய்வெளிச்சத்துடன்
லட்சியம் செத்த இறந்த மனத்தைப் போல்
விரிந்து கிடக்கும் பாலைவனம் ;
இங்கே உண்டு
நமது இதயத்திலும்
பிரபஞ்சத்திலும் ..

எஸ். வைத்தீஸ்வரன்

Saturday, May 9, 2009




உதிர்ந்தவன் அவன்

மழையாய் உதிர்ந்தன மலர்கள்
வண்ணம் பூசிச் சிரித்தன
அங்கம் நெடுகிலும்
கைம்மாறின்றி
நிறைத்துக்கொண்டிருந்தது வாசனை
உதிரும் பூக்கள் மீது
வீசத் தொடங்கினான்
உறுத்தும் வார்த்தைகளை
சலிப்பில்லாமல் விழுந்தன
குலுங்கிய பூக்கள்
மேலும் மேலும் அவன் மீது
வண்ணங்கள் மீதும் வாசனை மீதும்
ஆத்திரங்கொண்டு
வீசினான் உலோகக் கோடாரியை
அதிர்விலும் கூட உதிர்ந்தன மலர்கள்
மூளைக்குள் நிறைந்த இனமறியா வெறியில்
ஓங்கி ஓங்கி வெட்ட
உடைந்து சாய்ந்தது
உதிர்க்காமல் மரம்
வலியின் இறுதியில்
மலர்களையெல்லாம் தன்னுள் பூட்டி



ஆண்கள் நிறைந்த

இவ்வுலகில்

பெண்ணாயிருத்தல்

பெரும் பாவமெனில்

முலைகளையும்

யோனியையும்

அறுத்தெறிகிறேன்

என்னுடல்

கவிதை இனி

Saturday, April 25, 2009

குகைக்குள் ஒரு குழந்தை




மெல்லத் தவிக்கும் குழந்தையென
தூக்கமற்ற நேற்றைய இரவின் தூக்கம்
விரல் நீட்ட குறும்பாய்த் தலையசைத்து
கண்ணா மூச்சி ஆடவே
விரும்புவதாய்ச் சொன்னது
கண்களின் குகைக்குள் ஒளியச் சொல்லிக்
கவிதைகளின் ஒளிகொண்டு தேட
குகையெங்கும் வெளிச்சம்
தேடியும் காணவில்லை
அதனை எங்கும்
ஏமாற்றத்துடன் ஒளிக்கவிதையை
துதிப்பாடலாய் இசைத்தேன்
எங்கிருந்தோ தவழ்ந்து
மடியில் தலை சாய்த்து
உறங்கத் தொடங்கியது
அந்த தெய்வீக இசையில்
அது

Monday, March 23, 2009

அகோர கோரம்




மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது
அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள்
குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது
அந்த இருளின் நிறம்

ரத்த மயமான
அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து
அலைகளுக்கு பதிலாய்
பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து
கொடும்மரணத் தடம் பதிக்கின்றன

காலூன்ற இடமின்றி நிலமெங்கும்
உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு
தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால்
அகோர கோலம் இட்டிருக்கும்
துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள்

உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து
ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க
அக்கினியில் ஆகுதியாயின
மரித்த சடலங்கள்

யுத்தச் சரித்திரங்களின்
சிதிலக் குவியல்களிலிருந்து
மரணத்தின் மஹாகுரூர முகம்
தனது ஆட்காட்டி விரலால்
உதட்டை அகட்டி நாக்கை நீட்டி
அதி பயங்கரமாய் நகைக்கிறது
என் ஈரக்குலை நடுங்கிப் பதற.

உதிரப் புனலில் மிதக்கும்
பிண்டச் சடலங்களின் உயிர்கள்
எழும்பிக் கதறுகின்றன கரங்கூப்பி

நொதித்த சதைக் குவியல்களூடே
மனிதத்துவமற்ற மூர்க்கத்துடன்
அலட்சியமாய் உயர்த்தப்படும்
துப்பாக்கிகளின் விசையழுத்தலில்
ரத்தச் சேற்றின் அடர்ந்த கவிச்சையும்
நிணம் கருகி என்புருகும் நாற்றமும்
எங்கும் படர்ந்திருக்க
பாதாளப் புதைகுழிக்குள்
மரணம் தோய்ந்து கிடக்கின்றது
வெளியேற வழியின்றி
மூச்சுதிணறும் மனித நேயம்

Friday, March 6, 2009

பாம்பே ஜெயஸ்ரீயை
தினசரி கேட்க முடிவதில்லை
வாகாய் வந்து மடியில் உட்கார்ந்தாலும்
வண்ணத்துப்பூச்சி பிடிக்கத் தோன்றுவதில்லை
மார்கழிக் குளிரில் வாசலில் பூசணிப்பூ வைக்க
விடியல் விழிப்பு வருவதேயில்லை
வாசலில் கோலம் போட 30 வருடமாய் முயன்றும்
கோலப்பொடி விரலிடுக்குவிட்டு
கம்பியாய் விழுந்ததே இல்லை
தங்கப்பூணிட்டட பெரிய உருத்திராட்ச மாலை
அணியும் ஆசை விடவே இல்லை
இன்னும் ஜேஸுதாசுக்கு கச்சேரியின் போது
கவுரி வீசவும் கச்சேரி முடிந்ததும்
ஏலம் மிளகிட்டு சுடச்சுடப் பாலாற்றிக் கொடுக்கவும்
அம்ஜத் அலிகானுக்கு விரல் நீவி விடவும்
சோனல் மான்சிங்கிற்கு பாதச் சொடக்கெடுக்கவும்
டாலியின் மீசையில் ஊசித்தட்டன் உட்காரவைக்கவும்
மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட் உதட்டில்
அழுத்தி முத்தமிடவும்
லலிதா ஜுவலர்ஸின் பனிச்சிலைக்கு பதிலாய்
உருகும் பெண்ணாய் நானிருக்க
திரண்ட மார்பில் வைரம் மின்னவும்
இன்னொரு முறை தொட்டில் குழந்தைக்குப் பாலூட்டவும்
சாகுந்தலத்தை மூலத்தில் படிக்கவும்
கண்ணகியின் சிலம்பைத் தொட்டுப் பார்க்கவும்
கொடைக்கானலின் தற்கொலைப் பாறையிலிருந்து
கூடை கூடையாய் பிளம்ஸ் உருட்டவும்
இன்னும் பல.....உம்....முடிவதேயில்லை
வேண்டாம் முடிய
என்றும் இப்படி
யே யா யோ இவள்.

Wednesday, February 25, 2009

தீயில் பூ


எல்லாத் தூசையும் எரித்து

எழுகிறது ஒரு தீ


எல்லா வெயிலுக்கும்

மத்தியில் மலர்கிறது

ஒரு பூ