Friday, July 23, 2010விஜய் மகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே'
நூல் விமர்சனக் கூட்டம் (அகநாழிகை & டிஸ்கவரி புக் பேலஸ்)
தாரா கணேசன்

"Only those things are beautiful which are inspired by madness and written by reason." -Andre Gide


எவையெல்லாம் பைத்தியக்காரத்தனத்தினால் தூண்டப்பட்டும் அறிவார்த்தத்தினால் எழுதவும் படுகின்றனவோ அவையெல்லாம் அதியழகானவை என்கிறான் ஆண்ட்ரே கைட்.

தனது கதைகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்ட எர்னஸ்ட் ஹெம்மிங்வே "There is no friend as loyal as a book." ஒரு புத்தகத்தைவிடவும் உண்மையான நண்பன் இருக்க முடியாது என்கிறார். வாழ்வைப்பற்றி எழுத வேண்டுமெனில் முதலில் நீ வாழ்ந்து பார்க்கவேண்டும் புகழ்பெற்ற அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் பால்க்னர் தானொரு தோல்வியுற்ற கவிஞரென்றும் கவிதையில் தோற்றுப்போய் சிறுகதை எழுதத் தொடங்கி அதிலும் தோற்று பின்பு தனது எழுத்துப்பயணம் நாவலில் போய் முடிந்ததாகவும் கூறுகிறார். அவர் சொல்வது முற்றிலும் உண்மைதான் கவிதைக்கு அடுத்தபடியாய் அதிக எதிர்பார்ப்புகளை முன்வைப்பவை சிறுகதைகள் தான். ஏனெனில் நாவலை போன்று அதில் பரந்த வெளியும், இடமும் இருப்பும் இல்லை. கதா பாத்திரங்கள், காலம், இருப்பு, போராட்டம், உரையாடல், மௌனம் என்ற பரந்துபட்ட தளங்களில் நாவல் தன்னை நிலை நிறுத்துகிறது. சிறுகதை என்பது அவ்வாறில்லை. அவற்றில் உரையாடல்கள் கூட அதிகம் இருக்காது.

பார்வைக்கு எளிமையாய்த் தோன்றினாலும் சிறுகதைகள் எழுத்தின் சவாலான வடிவம் தான். இன்றைய நவீன எழுத்துலகின் சூழலுக்கு நாவலை விடவும் மிகவும் பொருத்தமான வடிவம் சிறுகதைகள் தான். புகழ் பெற்ற உலகச் சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் ஓ ஹென்றி, ஜேடி சாலிங்கர், எட்கர் ஆலன் போ, ஜான் அப்டைக், போன்ற சிறந்த அமெரிக்கச் சிறுகதையாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஓ ஹென்றி. பிரமாதமான சிறுகதைகளைத் தந்தவர். முக்கியமாக கிஃப்ட் ஆப் மேகி கதை. கதையின் வடிவம், விவரிப்பு, அதன் வழியாக அவர் என்ன சொல்லவருகிறார் என்ற எதிர்பார்ப்பு, அந்த எளிய சிறுகதையினை முன்னெடுத்துச் செல்லும் விதம் அதன் இலக்கியத் தரம் என எல்லாமுமே வாசகனுக்கு பிரமிப்பூட்டக்கூடியவை. வில்லியம் டீன் ஹவெல்ஸ் (William Dean Howells) என்ற விமர்சகர் அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மை காரணமாகத்தான் சிறுகதை என்னும் வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று என்கிறார்.

அமெரிக்கச் சிறுகதைகளுக்கு அடுத்தபடியாக உலகப் புகழ் வாய்ந்தவை பிரஞ்சுச் சிறுகதைகள். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகம் அறிந்த அற்புதமான பிரஞ்சு சிறுகதையாளர்கள் மெரிமீ் (Merimee), பால்ஸாக் (Balzac), மாப்பசான் (Maupassant) ஆகியோர். இவர்களில், மாப்பசான் தான் இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மாப்பசானின் தி நெக்லஸ் அதி சிறந்த சிறுகதையாக பேசப்படுகிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை செக்காவ் துர்கனேவ், கொகொல் (Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள். இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி (Overcoat என்னும் கொகொலின் கதை உலகப் புகழ்பெற்றது. சிறுகதையின் தந்தையெனப் போற்றப்படும் "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் அனைவரும் பிறந்தோம் என்கிறார் துர்கனேவ்.

இங்கிலாந்து என்றெடுத்துக்கொண்டால் ரட்யாட் கிப்ளிங் (Rudyard Kipling), ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson), கதரீன் மான்ஸ்ஃபீல்ட் (Katherene Mansfield), தாமஸ் ஹார்டி (Thomas Hardy), ஜோசப் கான்ராட் (Joseph Conrad), ஹென்றி ஜேம்ஸ் (Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோர் அற்புதமான சிறுகதையாளர்கள். 90களில் இங்கிலாந்தின் சிறுகதையாளர்களில் வித்யாசமான கதைசொல்லி ரோல்ட் டால். 1945ல் இருந்து இன்றுவரையான முக்கியமான 50 எழுத்தாளர்களில் டாலும் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவரது Land Lady, Willam and Mary, The visitor ஆகியவை ஆகச் சிறந்த சிறுகதைகள்.

ஜப்பானின் ஹாருகி முரகரி (Haruiki Murakari), ஐரிஷ் சிறுகதையாளரான வில்லம் ட்ரெவர் (Willam Trevor), அமெரிக்காவின் ரேமாண்ட் கார்வர் (Rayond Carver), மற்றும் டொபியஸ் வுல்ப் (Tobias Wolff) ஆகியோர் சமகாலத்தின் சிறந்த சிறுகதையாளர்கள்.

இப்படி உலகின் சிறந்த சிறுகதைகாளர்களின் ஒட்டுமொத்த வரிசையில் கொண்டாடப்படவேண்டிய பல சிறுகதைகள் தமிழில் படைக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனில் தொடங்கி, மௌனி, கு.பா.ரா., லா.சாரா., தி.ஜா., அசோகமித்ரன், வண்ணநிலவன், வண்ணதாசன், ஜி. நாகராஜன், பிரபஞ்சன், இ.பா, நாஞ்சில் நாடன், சமயவேல், ஜே பி சாணக்கியா, எஸ் செந்தில்குமார், என்று விரிந்துகொண்டேயிருக்கும் சிறுகதையுலகம் எண்ணற்ற கதையாடல்களை, கதை மாந்தர்களை, சூழல்களை, மண்வாசனையை நம்மனதில் உலவ வைத்த வண்ணம் இருக்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளின் பெரும் கரையில் விஜய மகேந்திரனின் புதிய காலடியும் இப்போது பதிந்திருக்கிறது.

இன்றைய நவீனத் தமிழ்ச் சிறுகதை இலக்கியமென்பது, அது கையாளும் உட்கருத்திலும், கதை சொல்லப்படும் விதத்தின் நேர்த்தியிலும் மொழியிலும் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சிறுகதையாளனும் தனக்கென்ற தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக் களனையும் தேர்வு செய்கிறான். நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது உலகம். அதி நவீனத்தை நோக்கி நகர்ந்த வண்ணமும் இருக்கிறது. வாழ்வு நகரும் வேகத்திற்கு ஏற்ப சிந்தனையின் வடிவமும் மொழியின் வடிவமும் இலக்கியத்தின் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் வடிவமென்று எவ்வித நிர்ணயமும் அவசியமற்றுப்போன நிலையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. எப்போதுமே புதிய வடிவங்களும் புரட்ச்சிகரமான மாற்றங்களும் கலையிலும் இலக்கியத்திலும் ஈடு இணையற்ற வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

அலங்காரங்களும் வர்ணனைகளும் தேவையற்றதாகி படைப்பின் முழுவீச்சை யதார்த்தத்துடன் தரும்பொழுது அப்படைப்புகள் உலக அளவில் சிறந்த படைப்புகளில் இடம்பெறக்கூடிய தகுதியைப் பெறுகிறன. எல்லையற்ற சாத்தியங்களுடன் புனைவின் எல்லைகள் விரிந்து கொண்டேயிருக்க, இன்றைய நவீன சிறுகதை என்பது நிகழ்வின் பிரதிபலிப்பாக இருக்கிறது. யதார்த்தமும், நிகழ்வுகள் சார்ந்த மன அதிர்வுகள், அத்தகைய அதிர்வுகள் உருவாக்கும் மனோநிலை, மொழிவழியே வெளிப்படும் மனோநிலையின் பிரதிபலிப்பு என்று படைப்பின் தளம் விரிகிறது. அதுவே உச்சபட்சப் புனைவாக மீபொருண்மை, மிகை யதார்த்தம், யதார்த்ததிற்கும் பாண்டஸிக்கும் இடைப்பட்ட ஹைப்பர் ரியாலிட்டி போன்ற பல்வேறு விதமான படைப்புகளை உருவாக்குகிறது..

விஜய மகேந்திரனின் இருள் விலகும் கதைகள் தலைப்பில் 12 நவீன சிறுகதைகளை தொகுத்து அளித்து தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். நகரத்திற்கு வெளியே என்னும் தனது சிறுகதைத் தொகுப்பின் மூலம் மேலும் கவனம் பெறுகிறார். விரையும் நகர வாழ்வின் சிக்கல்களையும் அபத்தங்களையும் தனது சிறுகதைகளின் வழியே நம்முன் வைக்கும் இவருக்கு எளிய மொழி கைவந்துள்ளது. இத்தொகுதியின் முதற்கதையான ’சனிப்பெயர்ச்சி’யில் ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றை தீவிரமாய் நம்புவதால் விளையும் பிரச்சினைகளை நகைச்சுவையாக முன்வைக்கிறார். ’மழை புயல் சின்னம்’ என்னும் சிறுகதை இதொகுதியில் சிறந்த கதை. நகர்வதறியாமல் வாசகனை நகர்த்திச் செல்கிறது இச்சிறுகதை. கதையின் களம் அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. புயல் மழையினால் பாதிக்கப்படும் அன்றாட வாழ்வினைக் காட்சி மாற்றத்தினூடே அழகாய் சித்தரித்திருக்கிறார். ஒரு சாதாரணனின் வாழ்வில் உருவாகும் காதலின் எதிர்பார்ப்புகளை, யதார்த்தத்தை ஒரு மழைநாளின் மந்தத்தை, அதனை சாவதானமாக தேநீர் அருந்தியபடி அனுபவிக்கும் போது முளைக்கும் அலுவலக நெருக்கடிகளை, புதியதான திருப்பத்தை, அந்த மழை நாள் தந்த எதிர்பாராத கதகதப்பை நன்கு சித்தரித்திருக்கிறார். தேவையற்றுக் நீளாமல் கச்சிதமாய் முடிக்கப்பட்ட நல்ல சிறுகதை இது. அடைபடும் காற்று என்று இன்னொரு சிறுகதை. இவரது கதைகளுக்குள் இது ஒரு புதிய முயற்சி. முழுக் கதையும் கடிதங்களே. அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் சென்ற மகனுடன் சென்று திரும்பும் ஒரு வயோதிகர் டிரைவ் இன் ஓட்டல் மூடிவிட்ட வருத்தத்தை சித்தரித்திருப்பதை வாசிப்பது ஒரு வித்யாசமான அனுபவமாய் இருக்கிறது.

பொதுவாகவே விஜய் மகேந்திரன் எளிய சம்பவங்களின் வழியே நகரத்தின் அவலத்தை உருவாக்கி காட்டியிருப்பது இவரது சிறுகதைகளின் சிறப்பம்சம். இருத்தலின் விதிகள் கதையில் இன்னும் சற்று கனம் கூட்டியிருக்கலாம். இந்தக்கதைக்கு நல்ல கரு இருப்பினும் மனதில் பதிய மறுக்கிறது. நகரச் சூழல், அதன் நெருக்கடிகள் இவற்றின் விவரிப்பு அன்றாட வாழ்வை படம்பிடித்துக்காட்டினாலும் இக்கதையின் மையச்சரடு பலவீனமாய் இருக்கிறது. மேலும் சில கதைகளுக்கு வலிந்து அவசியமற்ற கதைமுடிவில் விளக்கம் அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

சிரிப்பு கதையில் கொஞ்சம் பாண்டசியின் சாயல் தெரிகிறது. வேலை கிடைக்காத ஒருவனுக்கு யாரோ முகம் தெரியாத ஒருவன் கிடைக்கும் என்றொரு வார்த்தையைச் சொல்கிறான். வேலையற்றவனுக்கு அதிகாலை விடிகிறது. அப்போது அவன் கட்டிலுக்குக் கீழிருந்து குதித்தோடுகிறது ஒரு சுண்டெலி என்று அந்த மனிதனின் வாழ்வில் ஒரு நம்பிக்கையை துள்ளலை உற்சாகத்தை உத்வேகத்தை சுண்டெலியை உதாரணித்துச் சொல்லியிருப்பதில் நகைச்சுவையான அணுகுமுறை.முக்கியமாக இவரது நாவலின் தலைப்பிற்கு தெரிவான சிறுகதை நகரத்திற்கு வெளியே. காதலில் தோற்றுப்போன மனநிலையும் தனிமையும் புறக்கணிப்புமே கதையின் மைய உணர்ச்சிகள். ஆணாதிக்கத்தையும் இக்கதை தெளிவாய் பதிவு செய்கிறது. பெண்ணின் உடலை மனத்தை வெளியை தளையிட்டுச் தனது கட்டுப்பட்டுக்குள் வைக்கும் அடக்குமுறையினையும், பெண்ணின் சுதந்திர வெளி மற்றும் மீறலையும், இக்கதை முன்வைக்கிறது. வணிகமயமாகிப்போன உலகில் வாழ்வின் அபத்தச் சூழல் இக்கதையில் நன்கு பதிவாகியிருக்கிறது இக்கதையும் இத்தொகுப்பில் கவனத்திற்குரியதாகிறது.

ஒரு சில இடங்களில் நாட்குறிப்பு படிப்பது போன்ற சம்பவக்கோவையின் உணர்வு எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆயினும் அவ்வகை எழுத்தும் ஒருவகையான மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது. சிறுகதையென்பது கதைசொல்லியின் கரத்திலிருக்கும் கண்ணுக்குப் புலப்படா நூலைப் பிடித்துக்கொண்டு அவனது கதாப் பிரபஞ்சத்தில் பிரவேசிக்கும் முயற்சி. அவரவர் பிரபஞ்சம் அவரவர்களுக்கு. பொதுப் புத்தி சார்ந்த விஷயங்களை படைப்பாளிக்குள் திணிப்பது அவசியமற்றது. தனது வாழ்வு சார்ந்த உலகில் படைப்பாளியின் அவதானங்களும் பாதிப்புகளும் மொழியின் ஆளுமையில் படைப்புகளாகின்றன. ஒரு படைப்பாளியின் தேடலும் இயலாமையும் எதார்த்தமுமே அவனது படைப்பை கவனத்திற்குரியதாக்குகிறது. அவனது தொடர்ந்த தேடலும் உணர்வின் தீவிரமுமே அவன் ஒரு பெரும் ஆளுமையாய் உருவாக வழிவகுக்கிறது. எந்தப் படைப்பாளியும் எவரையும் சார்ந்திருத்தல் அவசியமல்ல. தனது தனித்துவத்தை, தனது உலகை எப்படிப் படைக்கிறான் என்பதே முக்கியமாகிறது. ஒரு படைப்பாளன் வெறும் கதைசொல்லியாக இல்லாமல் நல்ல படைப்பாளியாய் இருப்பதே முக்கியமாகிறது. மறுபடியும் ஹெமிங்வேயின் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. என்ன சொல்ல வேண்டுமோ அதனை ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமே தவிர வெறுமனே உரையாடக்கூடாது என்கிறார் ஹெமிங்வே.
விஜய் மகேந்திரனுக்கு நல்ல கதை சொல்லும் பாங்கும் கதைக்களனைத் தெரிவு செய்யும் திறமும் வாய்த்திருக்கின்றன. புதிய எழுத்தாளர்களிடம் இலக்கிய உலகம் அதிக நம்ப்பிக்கையும் அதே சமயம் அதிக எதிர்பார்ப்பையும் முன் வைக்கிறது. விஜய மகேந்திரன் சிறுகதைத் தளத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றி. அந்த எதிர்பார்ப்ப்புக்கான தனது பங்களிப்பைச் செய்யவேண்டும்.

1 comment: