Tuesday, June 9, 2009

காதலும் எதிர்காலமும்




உனக்குப் புரியாத இந்த மூப்பெய்திய மொழியை
நான் அமைதிப்படுத்த வேண்டும்
(இயல்பாகவே நீ பூக்கும் மரத்தைப் போல்
வருங்காலத்தைச் சேர்ந்தவள்தான்)
வருங்காலத்தின் புதிய மொழியில்
நான் பேச வேண்டும். மலர் சூடிய அந்த மொழியில்
பழங்காலத்தைப் பற்றிய இந்த ஏக்கத்தை
அடிமைக் கப்பலுக்குள்ளிருந்தே
நிலவைப் பற்றிக் கனவு காணும்
வெள்ளை மாலுமிகளும் கருப்பு அடிமைகளும்
கொண்டுவந்த இந்த ஏக்கத்தை
நான் அடிமைப் படுத்த வேண்டும்
ஸ்லோஸ், ப்ளூஸ், பொலரோஸ் என்னும்
வடிவங்களெடுத்த இந்த புராதான கண்ணீரை
நான் அடிமைப் படுத்த வேண்டும்
(உனது வேட்கை எனது மார்பின் மீது
உனது மார்பு எனது கையில். உனது கை
உனது தொடையின் கதகதப்பு, உனது
கண்களின் ஆசை இவையாவ்ற்றையும்
காட்டிக்கொடுக்காத இந்த வேதனை மிக்க
மன அழுத்தம்)
நான் இவையனைத்தையும் அமைதிப் படுத்த வேண்டும்
(இயல்பாகவே நீ பூக்கும் மரத்தைப்போல்
வருங்காலத்தை சேர்ந்தவள்தான்)
நனவாக்கப் படவேண்டிய
நம்பிக்கை கீதத்தை உனக்கு நான் பாடிக்காட்ட வேண்டும்
ஓ பூக்கும் மரமே நாளை கனியப்போகும்
பழங்களைப் பற்றி உன்னிடம் நான் பாடவேண்டும்
என் வாழ்விற்குள் பாய்ந்து பரவும் சூரியனே
ஏற்கனவே விடிந்து விட்ட நாள் இது




*கருப்பின மக்களின், குறிப்பாக ஆஃப்ரோ-அமெரிக்க மக்களின் இசை வகைகள்
(Poem by Fernandes Oliverio Mario Antonio - மண்ணும் சொல்லும் - மூன்றாம் உலகக் கவிதைகள் - தமிழில் வ. கீதா & எஸ். வி. ராஜதுரை



No comments:

Post a Comment