Sunday, August 16, 2009




கருப்பு முகமந்திகள்
மரம் விட்டு மரம் தாவும் கணத்தில்
அந்தியின் மஞ்சள் விழுந்து முறிகிறது
அந்த நெடிய மரத்தின் மென்கிளைகள்
உதட்டில் அசைய அதன் நிழலில்
என் உயிர் உறையும் காலம்
மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்
சரிவுகளில் நேர்கோடற்றுத் துடித்துப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளின் நிறமிப் புள்ளிகளை
அழிக்கத் துவங்கியது இருளின் மாயம்
அடர்ந்த மலைகளிலிருந்து வன இசை அதிர்ந்து பெருக
எவருமறியா குகைக்கோவிலொன்றின்
மண்டபம் அழைத்தது நடனமாட
அதன் அகன்ற தூண்களிலிருந்து
நர்த்தகிகள் சதங்கை குலுங்க ஓடி
மரங்களின் அடர்வுக்குள் மறைந்து
கழற்றி எறிந்த கச்சைகளில் நெளியும்
வண்ணக்கோடுகளிலிருந்து ஆதி சேஷனின்
பிளவுண்ட ஆயிரம் நாவுகள் நீள்கின்றன
வெளிச்சம் பறவையாகி
இருளுக்குள் மறையும் கணம்
என்னுடல் ஈரமாகிக்கிடந்தது
நெளிந்துகொண்டிருந்தேன்
(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)





ஏற்கனவே இறந்திருந்தேன்
கண்ணாடிக்குள் யாருமற்ற பிம்பத்தில்
காதலைச் சொல்லும் எனது உடல்
சாலைகளில் துக்கம் பெருகியோட
உதிர்ந்த மலரின் வாசனை நகரெங்கும்
துக்கத்தில் ஒரு தாவரம் துளிர்த்து எழும்
மொட்டின் நோக்கத்துடன்
பொழுது விடிய இருக்கிறது





(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)

Sunday, August 9, 2009






கமலா தாஸ் எனும் கவிதை

தாரா கணேசன்

(நன்றி: உயிரெழுத்து, ஆகஸ்ட் 2009)

................... பிறகு நானொரு சட்டையும் என்
தம்பியின் கால்சாராயும் அணிந்து, தலைமுடியை மிகக்குறைத்து வெட்டிக்கொண்டு என் பெண்மையைத் தவிர்த்தேன்
புடவை அணி, பெண்ணாயிரு, மனைவியாயிரு
என்றார்கள் அவர்கள். பின்னல் வேலை செய்
சமையற்காரியாய் இரு, வேலைக்காரர்களுடன் சண்டையிடுபவளாய் இரு,
பொருந்து. தொடர்புடையவளாய் இரு, கத்தினார்கள் வகைப்படுத்துவோர்..........


ஒப்பற்ற மலையாள எழுத்தாளரும் கவிஞருமான கமலா தாஸின் ”ஒரு அறிமுகம்” (An Introduction) என்ற இந்தக் கவிதையின் வரிகள் பெண்ணின் இருத்தல் குறித்த துயரினை தெளிவாய் முன்வைக்கின்றன. சுவாரஸ்யமற்ற இருப்பில் பெண்ணைத் திணிக்க சட்டங்கள் வகுக்கும் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் கமலா தாஸ் ஒருபோதும் தன்னை அதனுடன் பிணைத்துக்கொள்ளாத சுதந்திரப் பறவையாகவே இருந்தார். ஆங்கிலக் கவிதைகளில் புலமை பெற்ற இவர் தனது அற்புதமான பெண்ணியக் கவிதைகளால் இலக்கியவானில் என்றும் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்பவர். இந்தியாவில் ஆங்கிலக் கவிஞர்களின் வரிசையில் முதன்மையான இடத்தைப் பெற்ற கமலா தாஸ், இலக்கியத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுப் பிரபலமடைந்தவர்.

அவ்ரது ஆங்கிலப் படைப்புகளில், ‘ஒன்லி தி சோல் நோஸ் ஹௌ டு சிங்’, ‘ஓல்ட் பிளேஹவுஸ்’, ‘மை ஸ்டோரி’, ‘சம்மர் இன் கல்கத்தா’, ‘தி டிசென்டன்ட்ஸ்’ ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மிகுந்த படைப்பாற்றல்மிக்க கவிஞரான கமலா தாஸை உலக புகழடையச் செய்தது இவரது சுய சரிதையான “என் கதை” (My Story) என்ற நூல் தான். கமலாதாஸின் ‘மை ஸ்டோரி’ பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருச்சூர் புன்னையார்குளத்தில் இலக்கியக் குடும்பத்தில் மார்ச் 31, 1934ல் பிறந்த கமலாவின் தாயார் பாலாமணியும் பிரசித்தி பெற்ற மலையாளக் கவிஞர். அதுமட்டுமின்றி கமலாவின் தாய்மாமனான நலாப்ட் நாராயண மேனனும் ஒரு புகழ்வாய்ந்த இலக்கிய ஆளுமையாகவே இருந்தவர். இலக்கியக் குடும்பப் பின்னணியும், தனிமைமிகு வாழ்வுச் சூழலுமே இவரை எழுதுகோல் எடுக்கத்தூண்டியது. தனது முதல் கவிதையினை 17ம் வயதில் எழுதிய கமலா ஆரம்ப நாட்களில் ‘மாதவிக்குட்டி’ எனும் புனைபெயரிலேயே எழுதத் தொடங்கினார். பரவலாக வாசிக்கப்பட்ட மாதவிக்குட்டியின் எழுத்துகள் மெல்ல மெல்ல வாசகர்களை தனது படைப்புகளின் வலைக்குள் சிக்க வைத்தன. அதன் பிறகு இவரது புகழின் வானம் விரியத் தொடங்கியது.

தன்னுடைய ஒரு நேர்காணலில் கமலா தாஸ் –
“எனக்கு அன்பு கிடைத்திருக்குமேயானால் நான் ஒருபோதும் எழுத்தாளராயிருக்கவே முடியாது. நான் வெறும் மகிழ்ச்சியான மனுஷியாக மட்டுமே இருந்திருப்பேன். எனக்குள் இருந்த ஏதோ ஒரு பலவீனமே நான் எழுதத் தொடங்கக் காரணமாயிருந்தது. நான் பலவீனமானவளென்றும், தாக்குதல்களின் இலக்காகவும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதனால் தான் கவிதைகளை எழுதத் தொடங்கினேன். கவிஞர்கள் ஓடுகளற்ற நத்தைகள், பயங்கரத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள், எளிதில் நொறுங்கிவிடுபவர்கள். உண்மைதான். கவிதை எனக்கு அதீதமான வலியைக் கொடுத்தது, சொல்லப்போனால் ஒவ்வோர் கவிதையும். ஒவ்வொரு கவிதையும் வலிகளிலிருந்தே பிறக்க, நான் அவ்வலியினைக் கவிதை மூலம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் நீ உன் வலியைப் பகிர்ந்து கொள்பவருக்காகவே வாழத் தொடங்குகிறாய். இருப்பினும் அப்படிப்பட்ட ஒரு பகிர்ந்து கொள்பவனை உன்னால் எங்குமே காண இயலாது. கவிஞன் எழுதிக்கொண்டேயிருக்கிறான். எழுத்தின் மூலம் தேடிக்கொண்டேயிருக்கிறான். தன் பகிர்வுக்கான இணையைக் கண்டடைந்ததும், கவிஞன் தேடல் முடிவுறும். கவிதையும் முடிவுறும்.” –
என்று மனந்திறந்து குறிப்பிட்டுள்ளார்.

உணர்வுகளின் பகிர்வுகளுக்காகவே எழுதத் தொடங்கிய கமலா தாஸின் சுய சரிதையான ‘என் கதை’, 1975ல் பிரசுரமான தினத்திலிருந்து இன்றுவரைக்கும் விற்பனையாகிக்கொண்டே இருக்கிறது. பதினேழாம் வயதில் ‘மாத்ருபூமி’யில் வெளியான முதல் கதையே அவரது படைப்பாக்கத்திற்கான முகத்துவாரமெனலாம். அற்புதமான கதையாடலும் மொழியாற்றலும் இவருக்கு கைவந்த கலையாயிருந்தது.

இலக்கியத்தின் மூலம் வாழ்வின் அனுபவங்களை, அசைபோடல்களை, வலிகளை, இருப்பின் அலுப்பை, தன் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். தன்னை விடவும் 15 வயது மூத்தவரான மாதவதாஸ் என்பவரை மணமுடித்த போது அவருக்கு வயது 15. இவரது கவிதைகள் கலகத்தன்மை மிக்கவையாகவும் மனந்திறந்த ஆன்மப் பதிவுகளாகவும் இருந்தன. உண்மையாகவே எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்படாத கலகக் கவிஞராகவே தனது வாழ்வைத் தனது விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டவராகவும் இருந்தார் கமலாதாஸ். தன்னை விமர்சிப்பவர்களைத் துணிச்சலாய் எதிர்க்கும் எதிர்வினையாளராகவும் இருந்தார். போலித்தனமற்ற உக்கிரமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் இவரது வெளிப்படையான உடல் அரசியல் குறித்த பெண்ணியக் கவிதைகள் மிகப் பெரிய விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான போதிலும் உலகப் பெண்களின் உரிமைக்கான குரலாகவும் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அவை அமைந்திருந்தன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு மிகப் பரந்த உணர்வின் வெளியைத் துல்லியமாய் தனது எழுத்துக்களில் பிரதிபலித்தார் கமலா தாஸ்.

கடுமையான விமர்சனங்களுக்கு இலக்கான இவரது கவிதைகள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனத்தைக் கவரும் வல்லமை படைத்தவையாகவே இருந்தன. தனது தனித்துவம் மிக்க எளிய மொழியினாலும் ஆழமான கவிதைகளின் மூலமாகவும் அர்த்தமற்ற இருப்பிலிருந்து தன்னைத் துண்டித்துகொண்டு சுதந்திரப் பறவையாகப் பறக்கவே விரும்பிய கமலா தாஸ் தனது 42ம் வயதில் எழுதிய ‘என் கதை’ எனும் தனது சுயசரிதை, பலரின் பழிப்புக்கு அவரை ஆளாக்கியது. இந்த நூல் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளின் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலில் கமலா தாஸ் பெண்ணுடலில் அழகியல் குறித்து மிக உக்கிரமாகவும் தத்துவ வீச்சுடனும் எழுதியிருக்கிறார்.
அவரது மனந்திறந்த உடல் அரசியல் கவிதைகள் பலரது எழுத்துகளுக்குப் புதிய பாதையினைக் காட்டியது என்பது மறுக்க இயலாத உண்மை. கூட்டுப் புழுக்களாயிருந்த பலரை அவரது எழுத்தின் வலிய கூடுகளை உடைத்து வெளிவரச் செய்தது. 1999-ல், தனது 65ம் வயதில் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின் தன்னை கமலா சுராயா என்று அறிவித்தார். அவரது இஸ்லாமிய மதத் தழுவல் பல வகையான விவாதங்களையும் அதிர்வுகளையும் உருவாக்கியது.
கமலா தாஸின் உணர்வுகளைத் தூண்டும் கவிதைகள் இருப்பு, நகர வாழ்வின் அவலம், அன்பிற்கான ஏக்கம், காமம் ஆகியவற்றைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கின்றன. சர்ச்சைக்குரிய பெண் கவிஞரான இவரது கவிதைத் தொகுப்புகள் இந்தியா, ஆஸ்திரேலியா, மற்றும் மேற்கு நாடுகளில் அதிக அளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ்-ஆசிய கவிதைப் பரிசினை 1963லும், கேரளாவின் சாகித்ய அக்காடமியின் விருதினை தனது மலையாளப் படைப்புகளுக்காக 1969லும், அச்சமற்ற படைப்பாளருக்கான சிமன் லால் விருதினை 1971லும், தமது ஆங்கிலக் கவிதைகளுக்கென இந்திய சாகித்திய அக்கடமி' விருதினை 1981லும், உலக ஆசியப் பரிசினை 1985லும் பெற்றார். 1984-ல் கமலா தாஸ் மார்க்ரெட் யோர்செனர், டோரிஸ் லெஸ்ஸிங் மற்றும் நாடைன் கோர்ட்மெர் ஆகெயோருடன் இலக்கியத்தின் நோபல் பரிசுக்கென பரிந்துரை செய்யப்பட்ட கவிஞருமாவார்.
கவிஞரும் எழுத்தாளருமாகச் சிறந்து விளங்கிய கமலா தாஸ் ஒரு ஓவியருமாக இருந்தார். அவரது பல ஓவியங்கள் கண்காட்சிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. கவிஞர் என்ற அடையாளத்தைத் தாண்டிய அவர் கடந்த 1984-ம் ஆண்டு லோக் சேவா எனும் கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். மேலும் கேரளா சாகித்ய அக்காதமியின் துணைத் தலைவராகவும், கேரள வனத்துறையின் தலைவராகவும், கேரளாவின் சிறுவர்களுக்கான பிலிம் சொசைட்டியின் தலைவராகவும், மற்றும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் கவிதை எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்.
எனது வழியைத் தொலைத்துவிட்ட நான் இப்போது
அறிமுகமற்ற ஒருவரின் கதவின் முன்னால்
கையேந்தி நிற்கிறேன், அன்பினை சில்லரைகளாகவேனும்
பெற்றுச் செல்வதற்காக

My Grandmother's House

இக்கவிதை வரிகளை வாசிக்கும் போதே, வாசகனின் உணர்வுத்துளைகள் வழியே அன்பிற்கான ஏக்கத்தின் வலியை பொங்கிப் ஊற்றெடுக்கச்செய்கின்றன.
எளிதில் கட்டுபடுத்த இயலாத என்னுடலை
மதங்களின் சவப்பெட்டிக்குள் அடக்க
என்னால் வளைக்க இயலாது
நான் இறந்துவிடுவேன் என நானறிவேன்
ஆயினும், எப்போது நான் அன்பினால் அலுப்படைவேனோ,
வாழ்விலும், சிரிப்பிலும் சலிப்படைவேனோ, அப்போதென்னை
ஆறுக்கு இரண்டு குழிக்குள் தூக்கியெறியுங்கள்,
எனக்கெனக் கல்லரை வாசகம் எதனையும் எழுதுவது பற்றிய கவலையில்லாமல்

என்று தனது சமீபத்திய கவிதையொன்றில் எழுதிய கமலா சுராயா தனது 75ம் வயதில் இவ்வருடம் மே 31ம் தேதி காலமானார்.

தீராப் பித்தமேற்றும் கமலா தாஸின் கண்கள் நிரந்தரமாய்த் தூங்கிய பின்னும் அவளின் கவிதாமொழியின் வழியே அவை கள்வெறியேற்றிய வண்ணமே இருக்கின்றன.


கமலா தாஸ் கவிதைகள்.
மொழியாக்கம் : தாரா கணேசன்

நிலைக்கண்ணாடி

உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம்
எனினும், ஒரு பெண்ணாக உனது தேவைகளில் மட்டும் நேர்மையாயிரு.
நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார் அவனோடு
தன்னை அவன் வலியவனாய் நம்புவதற்கும், அவனைவிடவும்
மென்மையான, இளமையான, அழகானவளாய் உன்னை அறிவதற்கும்.
உனது உவகையின் விம்முதலை ஒப்புக்கொள்.
அவனது ஆணுடலின் நேர்த்தியை கவனி, குளிக்கும் போது
அவன் விழிகளிலேறும் சிவப்பை, குளியலறைத் தரையில் வெட்கிய
நடையினை, இடுப்புத் துண்டினை அவிழ்த்தெறிந்து,
சற்றே நடுக்கமுடன் அவன் சிறுநீர் கழிப்பதை.
அவனை ஆணென்றும் உனது ஒரே ஆணென்றும் விவரிக்கும்
உனக்கு விருப்பமான எல்லா நுணுக்கங்களையும்.
எல்லாவற்றையும் அவனுக்கு வழங்கு. உன்னை எது பெண்மையாக்குகிறதோ
அதனை அவனுக்குப் பரிசாக்கு. உன் நீண்ட கூந்தலின் வாசனையை,
முலைகளிடையே துளிர்க்கும் வியர்வையின் கஸ்தூரி மணத்தை,
தூமையின் அதிர்வூட்டும் இளஞ்சூட்டை, இன்னும் உனது
முடிவற்ற பெண்மையின் மிகுபசியை. ஓ, ஆமாம்,
உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம், ஆனால், பின்பு
அவனற்ற வாழ்வையும் சந்திக்கும் துணிச்சலும் வேண்டும்.
நீ பல இடங்களுக்குச் செல்லும் போதும், அறிமுகமற்றோரைச்
சந்திக்கும் போதும், தீராத தேடலை அவர்களில் முடித்து வைக்கும்
உனது கண்களோடும், அவனது கடைசிக் குரல் உனது
பெயர் சொல்லியழைத்ததை மட்டும் கேட்ட செவிகளோடும்
அவனது ஸ்பரிஸத்தின் கீழே மெருகூட்டிய பித்தளையென ஒளிர்ந்து
தற்போது பழுப்பேறிக் கிடக்கும் அநாதரவான உடலோடும்.
*



என் மகனின் ஆசிரியை

என் மகனுக்கு நான்கு வயது. இங்கிருந்து ஐந்து மைல் தூரத்தில் அவன் ஆசிரியை
ஒரு சாம்பல் நிற நடைபாதையில் மயங்கி விழுந்து இறந்து போனாள்.
அவள் விழுந்து கிடந்த இடத்திலிருது அவளது புதிய பாவாடை
இறப்பின் சிறிய வெற்றியை அறிவிக்கும் விதமாய்,
அரைக்கம்பத்தில் அசையும் ஒரு பச்சைக் கொடிபோல்
மேலுங்கீழுமாய் அசைந்து படபடத்தது. காற்று பலத்து வீசிய அந்நாளில்
பாவம் அந்த மனிதர்கள் ரோஜா வண்ண யானைக் கடவுள்களை
கடலுக்குச் சுமந்து சென்றார்கள். அவர்கள் கண்ணைப் பறிக்கும் உடையணிந்து
ஜால்ரா தட்டிக்கொண்டே நீண்ட ஊர்வலம் போனார்கள். மேளங்கள் அடித்தபடி
உரத்த குரலில் பாடிச் சென்றார்கள். அந்தப் பாடலில் மயங்கிக் மூழ்கிப் போனாள்.. செய்தித்தாளில் மாலைச் செய்தியானாள். அவன் குளித்து,
பால் அருந்தி. இரட்டைக் கோடுகளுக்குள் ‘டி’ எழுதிக் காத்திருந்தான்.
ஆனால் அழைப்புமணி அழுத்துவதில்லை இறந்தவர்கள். அவனுக்கு நான்கே வ்யது.
பல்லாண்டுகளுக்கு சொல்லப்படாதிருக்கும் இச்சோகம் அவனிடம்.
துயருற்ற பறவையொன்று ஒரு மதியத்தில் அவன்மீது பறந்து,
மென்மையாய் தனது சிறகுகளால் அவனின் தோளணைந்தது.
*


வழித்தோன்றல்கள்

நமது பால்யத்தை கழித்தோம் கனிவான பாவத்தில்
உண்மையற்ற காதலைப் பண்டமாற்றாக்கியும்,
நாம் காயமுற்றிப்பதாய் அடிக்கடி எண்ணியபடியும்.
ஆயினும், நமது வலிகள் நம்மில் மீந்திருக்கவில்லை,
கன்றிய காயங்கள் தழும்புகளையோ அன்றி
நமது குளிர்ச்சிமிகு அழகினைத் துளியேனும் கறைப்படுத்தவோ இல்லை.
எல்லா தட்பவெப்பத்திலும் ஆசுவாசத்திலிருந்தோம், ஆணியடிக்கப்பட்டு,
ஆயினும் சிலுவைகளில் அல்ல, மென்படுக்கைகளில்
மென்மையான உடலில், உயர்ந்தும், அலைந்தும்.
நிதானமான நேரம் நகர்ந்தது அரையிருளில், அரைப்பகலில்,
அரைக்கனவில், அரை நனனவில். இணங்குபவர்களானோம்,
நம்மை எல்லாவற்றுக்கும் இணங்கச் செய்தோம்.
நினைவுகளின் கர்ப்பப்பையின் சுவர்களை நமக்காக சுரண்டவோ,
இறப்பைக் கூட நமக்காக கேள்விகள் கேட்கவோ நம்மால் இயலாது.
ஆயினும், தாயின் கரங்களிலிருக்கும் மகவென நம்மை நாமளிப்போம்
அந்த நெருப்பிற்கு அல்லது மெதுவாக உண்ணவேண்டிய
நமது பசிமிகு நிலத்திற்கு, வெறியுடன் விழுங்கப்பட.
தமது சிலுவைகளை எவரும் கடந்துவர இயலாது,
அன்றி அவனது காயங்களை நமக்குக் காட்டவும் இயலாது.
மௌனத்தில் தொலைந்துபோன எந்தக் கடவுளும் பேசத் தொடங்காது,
தொலந்துபோன எந்தக் காதலும் நம்மை நஷ்ட ஈடாய்க் கோர இயலாது. இல்லை,
நாம் எப்போதுமே மீட்டுணர்வோம், அல்லது புத்துருவாக்கம் செய்யப்படுவோம்.
*


அர்த்தநாரிகளின் நடனம் வெம்மையாயிருந்தது, கடும் வெம்மை, அந்த அலிகள்
அகன்ற பாவாடைகள் வட்ட வட்டமாய் சுழல ஜால்ராக்கள்
சத்தமாய் மோத, கொலுசுகள் குலுங்கி கிணுகிணுத்து இசையிசைக்க
ஆட வரும் முன்னே. தழல் நிற குல்மொஹர் மரத்தின் கீழே,
நீண்ட சடை சுழன்றாட, கரிய கண்கள் மின்ன, ஆடினார்கள்,
ஆடினார்கள், ஓ, ரத்தம் கசியும் வரை ஆடினார்கள். கன்னங்களில்
குத்திய பச்சை, கூந்தல் சூடிய மல்லிகை, கருப்பாய் சிலர்
கிட்டத்தட்ட சிவப்பாய் சிலர். அவர்கள் குரலில் ஆண்மை,
பாடலில் ததும்பும் துயரம், இறந்து போகும் காதலர்களையும்
பிறக்காத குழந்தைகளையும் பாடலாய் இசைத்தார்கள்
சிலர் டோலி அடித்தார்கள்; மற்றவர்கள் தமது வருந்துதற்குரிய
முலைகளின் மீது ஓங்கி அடித்து ஒப்பாரியிட்டு
வெறுமையின் இன்புறும் வேதனையில் துடித்தார்கள்
பாதி எரிந்த சிதைவிறகென வரண்டு மெலிந்த அவர்களின் தேகம்,
ஒவ்வொருவரும் வரட்சியில் உளுத்திருந்தனர். அமைதியிலிருந்தன
மரங்களின் மீது காகங்கள், அசைவின்றி ஆச்சர்யத்தின்
அகன்ற விழிகளுடன் குழந்தைகள். கவனித்தனர் அனைவரும்
இந்தப் பரிதாப ஜீவிகளின் துயர வலிப்பை
பிறகு வானம் வெடித்துப் பிளந்து இடியிடித்து, மின்னல்
மழை. பரணையின் புழுதியில் படிந்த பல்லிகள் எலிக்குஞ்சுகளின்
மூத்திர வாடையுடன் சொற்ப மழை.


*


சடலப்புழுக்கள்
அந்தியில், நதிக்கரையில் கண்ணன்
அவளை கடைசியாய் கலந்து மறைந்தான்

அந்த இரவில் கணவனின் கரங்களில்,
மரணித்திருப்பதாய் உணர்ந்தாள், ராதா
என்னவாயிற்று, என் முத்தங்களைப் பொருட்படுத்துவாயா அன்பே என்றான்.
இல்லை, இல்லவே இல்லை என்றவள்
நினைத்தாள்,
சடலத்தைப் புழுக்கள் கிள்ளினால் என்னவாகிவிடுமென.
*


கற்காலம்
பிரியத்திற்குரிய கணவனே, மனதில் குடியேறிய புராதனனே
உன்மத்தமாகி வலை பின்னும் தடித்த வயோதிகச் சிலந்தியே, அன்பாய் இரு. என்னை ஒரு சிலைபறவையாக்கி விட்டாய், ஒரு கரும்பளிங்குப் புறா,
என்னைச்சுற்றியோர் அசுத்த அறை கட்டி வைத்து
அம்மைத் தழும்பேறிய எனது முகத்தை வாசித்துக்கொண்டே ஞாபக மறதியாய்த் தட்டிக்கொடுக்கிறாய். உரத்த குரலில் எனது அதிகாலைத் துயிலை நசியச் செய்கிறாய்.
கனாக் கண்ணில் உன் விரலைத் திணிக்கிறாய். இருப்பினும் பகற்கனாவில் திரண்ட ஆண்கள்
தமது நிழல்களைப் பதித்து மூழ்கினார்கள்
எனது திராவிட ரத்தத்தில் வெள்ளைச் சூரியனாய்
புனித நகரங்களின் கீழ் வடிகால்கள் ரகசியமாய் ஓடுகின்றன
நீ சென்றபின், நான் எனது தேய்ந்து போன நீல ஊர்தியை
ஓட்டிச் செல்வேன் ஆழ்நீலக் கடலை ஒட்டி. நாற்பது எட்டுகளை தடதடத்து ஓடிக் கடக்கிறேன் வேறொரு கதவைத் தட்டுவதற்கு. சாவித்துவாரங்கள் வழியே
அண்டைவீட்டார் கவனிக்கிறார்கள் நான் வருவதையும், மழைபோல் போவதையும். என்னைக் கேளுங்கள், எல்லோரும் கேளுங்கள் என்னை. என்னில் அவன் பார்த்தது தென்னவென்று. என்னைக் கேளுங்கள், அவனைச் சிங்கமென்று அழைப்பதேனென
சுதந்திரன் அவனின் கரம் என் யோனி அணையும் முன்
பாம்பின் படமென நெளிவதேனென என்னைக் கேளுங்கள்.
வெட்டப்பட்ட பெருமரமாய் என் முலைகளின் மேல் சாய்ந்து
உறங்குகிறான். வாழ்வு ஏன் குறுகியதென்றும் காதலேன் அதனினும் குறுகியதென்றும் என்னைக் கேளுங்கள். மோட்சமெதுவென்றும் அதன் விலையென்னவென்றும் என்னைக் கேளுங்கள்.


*