Monday, October 26, 2009


ஓவியத்தில் உறைந்தவள்

ஏதேனின் விழுதுகள்
நம்மை பிணைத்திருந்தன
ஆன்மாவின் ஓவியக்கித்தானில்
உன்னுள் நுழைந்து ஆக்கிரமிக்கிறேன்
எனதிந்த வார்த்தைகளின் வழியே
கடந்து போன காலம் மறுபடியும்
நம்மை ஏந்திச் செல்கிறது பின்னோக்கி
மீண்டும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட
பூர்ணசந்த்ரோதயப் பொழுதில்
நமது முதல் சந்திப்பு
முதல் ஸ்பரிஸம், முதல் முத்தம்
எல்லையற்று விரியும் தொடுவானில்
உனது திளைப்பின் பார்வையில் அலை
இருவரும் இடையறா முத்தங்கள் பகிரும்
ராஃபலின்
[1] கியூபிட்[2]களாய் இருந்தோம்
மாலையின் மஞ்சள் தூரிகை
உன் அருகாமையின்
கதகதப்பை தீட்டிய போது
என்னில் உருக்கிய பொன்னின்
மினுமினுப்பு கூடியது
பூங்காற்றை வீsசி படபடத்தன
இளவேனில் இரப்பைகள்
உதிர்ந்த பன்னீர் பூக்களின் முன்னிரவில்
தழுவிப்பிணைந்த நம் உடல்வழியே
இசை நதியாகியது
மிதந்தபடியே நாம்
இரவை நெய்து முடித்திருந்தோம்
ஏதேன் தன் முத்தங்களை
இன்னும் விதைத்தபடியே இருக்கிறது

(நன்றி: பவளக்கொடி, அக்டோபர், 2009)

[1] ராஃபல் ஒரு மறுமலர்ச்சிக்கால ஓவியன்,
[2] கியூபிட் ஒரு தேவ குழந்தை

No comments:

Post a Comment