Sunday, October 4, 2009



கவிதைக்கான மனநிலையை
பருவங்கள் கொண்டுவருகின்றன
என்பதை மறுப்பதற்கில்லை
துரிதமாய் ஒலிக்கும் துக்கத்தின் தொனியுடன்
உனது சன்னமான சொற்களை கேட்டு
குளிர் விரைத்த எனதுடல் சூடுணர்கிறது
பனிமூட்டம் போன்று கவிந்திருக்கும்
புத்தகங்களும் இசையும் கவிதையுமான
இப்பருவகாலத்தில்

கவிதையோர் அடிமையாக்கும்
துர்ப்பழக்கமென்றே நினைக்கிறேன்
தீவிர சிந்தனையின் பிடியிலுள்ளோர்
அனைவருமே வாழ்க்கைக்கும் கவிதைக்கும்
அடிமைகளாயிருக்க
இரண்டுமே கைவிட இயலா
துர்ப்பழக்கமாயிருக்கின்றன

இன்னும் வலிமையோடிருப்பதற்க்கான
ஆற்றலிருக்கிறது என்னிடம்.
அர்த்தமற்ற அவசரங்களில்
என்னை தொலைத்துவிட்டுப் புலம்புகிறேன்
நேரம் ஒன்றும் ஓடிப்போகப் போவதில்லை
காலம் சுழன்று மறுபடி கொண்டுவரும்
இதே பருவங்களை என்னிடத்து

என்னுடைய மற்றெல்லா அலுவல்களையும்
முடித்துக் காத்திருக்கலாம் நம்பிக்கையுடன்
சொல்லாது விடப்பட்டவையே அதீத இசைமிகு
சொற்களாயிருக்கும் எப்போதும்

வாழ்வின் நாராசங்களுடன் இசையைக் கலப்பதும்
ஓர் இனிய பாடலாகவே இருக்கும்

No comments:

Post a Comment