Tuesday, October 6, 2009


கடற்கரையில் நேற்று மாலை கடவுளைச் சந்தித்தேன்
அலைகளின் நுரைபோலத்தான் அவரும் இருந்தார்
உரையாடிக்கொண்டே கரையோரம் நடந்த போது
வரமொன்று தரச்சொல்லிக் கேட்டேன்
கேட்கலாமெனக் கரம் பிடித்தார்
உலோகத்தின் குளிர்ச்சியுடனிருந்தது அவரது கரம்
நிமிர்ந்து விழிகளுக்குள் பார்வையைச் செலுத்தினேன்
நெருப்பின் வெப்பம் என் நாளங்களில் நகர்ந்து பரவியது
சில நட்சத்திர மீன்கள் கரையேகி வந்து எங்கள் காலருகில் வீழ்ந்தன
கடற்பறவைகள் எங்களது பேச்சைக் கேட்கும் விழைவில் தாழப் பறந்தன
அந்த உயர அலைகளையும் கரை பரந்த மணலையும்
மீன்களையும் பறவைகளையும் சாட்சியாய் வைத்து
என் தோழமை அனைத்தும் எப்போதும் நலம் வாழக் கேட்டேன்
நான்கு நாட்களுக்கு மட்டுமே வரம் பலிக்கும் என்றார் புதிர்ப் புன்னகையுடன்
எனில் ஒரு வசந்தம், ஒரு கோடை, ஒரு இலையுதிர், ஒரு பனி
என பருவத்திற்கொன்றாய் நான்கு நாட்கள் கேட்டேன்
மறுத்தவர் நான்கல்ல மூன்று கேள் என்றார்
எனில், நேற்றும் இன்றும் நாளையும் என தயக்கமின்றிச் சொன்னேன்
இல்லை, இரண்டு நாட்கள் எனக்கூறி விலகி நின்றார் கடவுள்
சரி ஒரு வெளிச்சப் பகல் நாளும் ஒரு இருள் நிறைந்த இரவு நாளும் என்றேன்
இன்னும் சற்று விலகியவர்
இல்லை, ஒர் நாள் மட்டுமே என்றார் புன்னகையற்று
வருத்தமேதுமின்றித் தலையசைத்தேன்
கேள்வியாய்ப் புருவம் உயர்த்தி அந்நாள் எந்நாள் என்றார்


கடலில் மூழ்கும் சூரியனைப் பார்த்தவாறே
‘ஒவ்வோர் நாளும்’ என அழுத்தமாய் உரைத்தேன்
வாய்விட்டுச் சிரித்த கடவுள்
அப்படியே ஆகட்டுமென ஆசீர்வதித்து மறைந்தார்.
ஆரத் தழுவிய் ஸீகல் பறவைகள்
உச்சந்தலையில் முத்தமிட்டுப் போயின

5 comments:

  1. எமக்கான உங்கள் வரம் அப்படியே பலிக்கட்டும்
    சீகல் பறவை சாட்சியாக

    எப்படி முடிகிறது இத்துணை எளிய சொற்களில் இவ்வளவு ஆழம் தொடும் சூத்திரம்

    ReplyDelete
  2. க‌ட‌வுளினும் பிடிவாத‌ம் கொள்ளும் உங்க‌ள் ந‌ற்குண‌ம் க‌ண்டேன். வாழ்த்துக‌ள்.

    ReplyDelete
  3. கவிதை எளிமையாகவும் அழகாகவும் இருந்தது

    ReplyDelete