Monday, October 26, 2009


கடவுளின் மறுவுரு

எதையும் எழுதாமலேயே நேரம் கடந்துவிட்டது
கடந்தது குறித்து வருந்துவதிலேயே
இன்றும் கழிந்துவிடும்
கடந்தது இறந்தது.
இறந்தது கடந்தது.

நேரத்தின் கலத்தைச் செலுத்துபவன் எவன்.
யமன் ஒன்றும் நமது நேரக்காப்பாளன் இல்லை
மரணம் கூடக் கடைசி மணி அல்ல,
இருப்பினும் வாழ்வு
மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது

பசியெடுக்கும் போது விழுங்கும்
அந்த விநோத விலங்கைப் பார்திருக்கிறாயா நீ

வாழ்வின் சகல துடிப்புகளுடனும் உடல்
தலை புழுத்த மண்டையோடு
வலக்கையில் சாத்தானின் வால் போன்றொரு தூண்டில்
இடக்கையின் மணிக்கட்டில் கிண்கிணித் தொட்டில்
கண்களின் பொந்துகளில் ஒளிந்திருக்கும் முற்றுபெறா இரவு
மூன்றாம் கை வலியற்றுத் உயிர் துண்டிக்கும் கோடாரி
மூன்று கைகளும் மூன்று காலங்குறிக்க
தோளில் காகத்துடன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்திருந்த அதனை
ஒரு புராதனத்தின் அகழ்வில் சந்தித்ததாகக் கனவில் வந்தது

உரையாடிப் பிரிந்த போது கரப்பன்கள் ஊர்ந்த வாயுடன் முத்தமிட்டது
நிலம் நடுங்கிப் பிளந்த பின்னும் உயிரோடிருந்தேன்

ஆயினும் அக்கணத்தில்
வாழ்வின் தத்துவக் குழப்பங்கள் அனைத்தையும் முடித்து வைக்கும்மரணத்தைக் கடவுளென்று அறிந்துகொண்டேன்

(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

4 comments:

  1. மிகவும் இரசித்து வாசித்த நீண்ட கவிதை.

    //வாழ்வு மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது//

    பிறப்பென்பதே மரணத்தை நோக்கி நகரும் ஒரு பயணம் என்பதையுணர்த்தும் வரிகள்.

    அருமை.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. எழுதப்பட்டிருக்கும் அத்தனை கவிதைகளுமே அடர்த்தியான மொழியையும் புதிய தளத்தினையும் இயல்பாய் கொண்டிருக்கின்றது.
    நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. அர்த்தமான ஆழ்ந்த வரிகள்.., படங்கள் பயப்படவைக்கிறது..Remove Word verification.,

    ReplyDelete
  4. வாசிக்கிற ஒவ்வொரு முறையும் என் வாசிப்புக்குள் புதுப்புது வழிகளை, அனுபவங்களைக் கொண்டுவருகிறது இக்கவிதை.வாழ்வு மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது. இந்த வரியிலேயே மனசு சிலமணிநேரம் சஞ்சரித்துக்கொண்டே இருந்தது.

    ReplyDelete