Monday, October 26, 2009


வெள்ளை ஒயின்

புயல் நாளொன்றில்
சீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்
கண்களுக்குப் புலப்படா நட்சத்திரங்களென
கரைமீதிருந்தோம்

என் மீதான கவிதையொன்றை
அவன் சொல்லத் தொடங்கிய போது
கண்ணாமூச்சியாடிக் களைத்த நண்டுகள்
வளைகளை மறந்து அவன் காலருகே
கொடுக்குகள் தூக்கி நின்றன

கரங்களிலிருந்த கோப்பையின்
வெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி
கலந்து அருந்தினோம்

அவன் நுனி நாக்கு சர்ப்பமென
மேலன்னம் துழாவியதில்
மூக்கின் மீதோடி உதட்டில் இறங்கிய

மழைத்துளியில்
ஆதிரத்தத்தின் வாசனை

காற்றும் மழையும் கடலும் மதுவும்
எதிரெதிரே மோதிய அலைகளில்
இனமழிந்த விலங்குளின் பெருயுத்தம்

யாரோ பெரிய பெரிய பாறைகளை
கடலின் ஊடே எறிய நடுங்கின சொற்கள்

மெல்லிய உள்ளங்கைப் பற்றுதலில்
திடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு

கரை சூழ்ந்த கடலில் கரங்கள் பிணைத்து
உயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்
நீந்தினோம் புயலின் பயமற்று

பதற்றமுடன் நண்டுகள்
வளையில் இறங்கிக்கொண்டிருந்தன
(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

1 comment:

  1. அவன் நுனி நாக்கு சர்ப்பமென
    மேலன்னம் துழாவியதில்
    மூக்கின் மீதோடி உதட்டில் இறங்கிய
    மழைத்துளியில்
    ஆதிரத்தத்தின் வாசனை

    ReplyDelete