Wednesday, February 25, 2009




பாப்லோ நெருடா
Translation : Thara Ganesan

இந்த அந்தியையும் தவற விட்டுவிட்டோம்
இந்த அந்தியையும் தவற விட்டுவிட்டோம்
நீல இரவு கவியும் இம்மாலையில் எவரும் பார்க்கவில்லை
பின்னியிருக்கும் நம் கரங்களை

தூரத்து மலை முகடுகளில் சூர்ய அஸ்தமனத்தின் கொண்டாட்டத்தை
என் ஜன்னல் வழியாகப் பார்க்கின்றேன்

சிலநேரம் ஒரு துண்டுச் சூரியன்
என் உள்ளங்கையில் இருக்கும் நாணயமாய் தகிக்கின்றது

ஆத்மாவைப் பற்றியிருக்கும் உனை நினைவுகூர்கிறேன்
நீயறிந்த என் வருந்தங்களோடு

எங்கிருந்தாய் அப்போது?
வேறு எவரிருந்தார் அங்கே?எதைச் சொல்லியபடி?
நீ வெகுதூரத்திலிருக்கிறாயென வருந்தியிருக்கையில்
அத்தனை காதலுமேன் மொத்தமாய் வரவேண்டும்
சற்றும் எதிர்பாராமல் என்னிடத்து விதிவிலக்கின்றி

பகலின் புத்தகத்தை மூடும் அந்தி சாய்ந்து விழ,
ஒரு காயமுற்ற நாயென சுருள்கிறதென் காலருகே நீ
ல வண்ணக் கம்பளிச்சட்டை

எப்பொழுதும் நீ மாலை வழியே பின்வாங்குகிறாய்
சிலைகளையழிக்கும் அந்தியை நோக்கி। *
***
2. மேலான உயிர்த்தெழுதல் (சில்வியா பிளாத் )
- Translation : Thara Ganesan

என்னிடம் விவேகமில்லை, சொற்களில்லை, கண்ணீரில்லை
அளவற்ற எதிர்பார்ப்புகளிலும் அச்சங்களிலும்மரத்திருக்கின்றது
என்னுள் கல்லெனக் கிடக்கும் இதயம்
அக்கம் பக்கம் பார்த்தபடி தனித்து வசிக்கிறேன்
சோகம் மிகுந்து மங்கிய விழிகளை உயர்த்துகிறேன்
மலைத்தொடர்கள் எவற்றையும் நான் காணவில்லை
உதிரும் இலை போலிருக்கிறது வாழ்வு
ஓ இயேசுவே, அதை துரிதப்படுத்து


**


1 comment:

  1. இன்று உங்கள் கவிதை நூல் பிரித்தேன்.
    யாருமற்ற கடற்கரையில் மழைபெய்கிறது.
    அறையில் இருக்கும் வயலின்கள் பறக்கத் துவங்குகின்றன
    நீல விழிக்குழந்தையின் கைக்குட்டையில் இருக்கும் வான்கோவின் சூர்யகாந்தி மெல்ல மலர்கிறது.
    ஒரு பிற்பகலின் மதுக்கோப்பை.
    சொற்களால் நிரம்பும் முத்த வேட்கை அக்கடற்கோயிலின் காற்று.
    சயனிக்க இறங்கிவருகிறது மூன்றாம்பிறை.
    நிசிப்பூணை உறங்க
    காரிருள் வஸ்திரம் உடுத்தி நடக்கும் திரும்ப முடியாத நினைவின் முத்ததெரு.
    அங்கியிலிருந்து பறந்து சென்றன வண்ணப்பறவைகள்.
    உதிர்ந்தன ஓரிரு வேப்பம்பூக்கள்.
    ருதுவனம்.
    நாகக்காடு.
    பட்டின் இழைகளாய் தவழும் அடர்ந்த கூந்தல்.
    பருவமடைந்தபெண் ரகசியமாய்ச் சிலிர்க்கிறாள்.
    பின் நிலைக்கண்ணாடியினுள் நுழைகிறாள்.
    தூரத்தில் எங்கோ மகுடி இசை.
    மிதந்து கொண்டிருந்தது கட்டில்.
    எல்லாமும் நானும் மறைந்தோம்.
    அருமையானது மரணம்.

    ReplyDelete