Friday, February 27, 2009

வனம் புகுவோம்

கவிஞர், அரசியல் நிபுணர், கல்வியாளர், பெண்ணியவாதி எனப் பன்முகம் கொண்ட கலைஞர் கேப்ரியல் மிஸ்ட்ரல். ”லூசிலா டி மரியா டெல் பெர்பெச்சுவோ சொகோரோ கொடாய் அல்கயாகா” எனும் நீண்ட இயற்பெயர் கொண்ட இவர் கேப்ரியல் மிஸ்ட்ரல் எனும் புனைபெயரில் எழுதியவர். சிலி நாட்டின் பிரஜையான மிஸ்ட்ரல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்கப் பெண்மணி. உலகப் புகழ் பெற்ற பாப்லோ நெருடாவும் சிலி நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை, நம்பிக்கை துரோகம், காதல், தாயின் அன்பு, துயரம், பயணம் ஆகியவை அவரது பாடுபொருள்களாயிருந்தன. கொடிது கொடிது இளமையில் வறுமையென அவ்வை பாடியதற்கேற்ப இவரது இளமைப் பிராயம் வறுமையின் கொடுமை மிக்கதாயிருந்தது. இவர் தனது பதினைந்தாவது வயதில் தொடங்கியது கவிதை. ”ரகசியக் கடிதம்” (Intimate Letter) எனும் இவரது கவிதை முதல் முதலில் தினசரியொன்றில் பிரசுரமானது. அப்போதிருந்தே பல்வேறு புனைப்பெயர்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.

பதினேழாம் வயதில் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த மிஸ்ட்ரல் ரொமிலியோ என்ற ரயில்வே தொழிலாளியை சந்தித்தார். ரொமிலியோ மூன்று வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார். மரணத்தின் தாக்கம் மிஸ்ட்ரலின் கவிதைகளில் படிமங்களானது. ரொமிலியோவின் தற்கொலை கேப்ரியலை இதுவரையில் எந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞரும் எழுதியிருக்காத அளவிற்கு மரணம் – வாழ்வு ஆகியவற்றைக் குறித்து எழுதத் தூண்டியது.

மிஸ்ட்ரலுக்கு பல ஆண்களுடனும் பெண்களுடனும் இருந்த நட்புறவை அவரது எழுத்து பிரதிபலிக்கத் தொடங்கியது. ஆயினும் தனது மனவெழுச்சி மிகுந்த வாழ்வினை மிஸ்ட்ரல் ரகசியமாகவே வைத்திருந்தார்.

சாண்டியாகோவில் நடந்த தேசிய அளவிலான இலக்கியப் போட்டியில் முதற்பரிசு வென்றது மிஸ்ட்ரலின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையாக அனமந்தது. தேசிய அளவில் கவனிக்கத் தகுந்த புகழ் அடைந்த எழுத்தாளராக மாறிய மிஸ்ட்ரலுக்கு அப்பொழுது வயது 25. ஜீகாஸ் ப்ளோரேல் எனும் அந்த தேசிய விருதை எட்டிய பிறகு லூசிலா கொடாய் என்ற பெயரில் எழுதுவதை விடுத்து, கேப்ரியல் மிஸ்ட்ரல் என்ற புனைப் பெயரிலேயே தனது படைப்பைத் தொடர்ந்தார்.

தனது எழுத்துலகப் பயணத்தின் பெயரை தனக்கு மிகப்பிடித்த கேப்ரியேல் டி அனுன்ஸியோ மற்றும் பிரட்ரிக் மிஸ்ட்ரல் ஆகிய இரு எழுத்தாளர்களிடமிருந்து புனைந்து கொண்டார். மிஸ்ட்ரலின் உலகளாவிய புகழ் அவரை தன் சொந்த நாடான சிலியில் தொடர்ந்து செயல்படத் தடையாயிருந்தது. நாற்பதாம் வயதில் பிரான்ஸுக்கு குடிபுகுந்த பிறகு மிஸ்ட்ரல் தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்தார்.

பிற லத்தீன் அமெரிக்கக் கலைஞர்களைப் போலவே மிஸ்ட்ரலும் தனது இறப்பு வரை அந்நிய நாட்டுப் பிரதிநிதியாக பல நாடுகளில் பணியாற்றினார். மேட்ரிட்டில் பணியாற்றிய பொழுது அவருக்குத் தன் போலவே பிரதிநிதியாய்ப் பணியாற்றி வந்த நோபல் புகழ் பெற்ற கவிஞனான பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். நெருடாவுடனான நட்பு அவரையும் ஒரு முன்னணி இயக்கத்திற்கு ஆதரவாளராக்கியது. அத்துடன் மிஸ்ட்ரல் ஸ்பெயினின் பத்திரிக்கைகளிலும் தினசரிகளிலும் நூற்றுக்க்கணக்கான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்குவித்தார். இதனால் மிஸ்ட்ரல் புகழ் பரவத்தொடங்க கொலம்பிய நாட்டுத் ஜனாதிபதியான எடுவர்டொ சாண்டோஸ், எலினார் ரூஸ்வெல்ட் மற்றும் அனைத்து சிலி நாட்டு ஜனாதிபதிகளுக்கும் மிகவும் நம்மிக்கைக்குரியவரானார்.

மிஸ்ட்ரலின் இரண்டாவது கவிதைப் பெருந்தொகுதியான தாலா (Tala) 1938ல் அவரது நெருங்கிய நீண்ட நாள் நண்பரான விக்டோரியா ஒகாம்போவினால் பியூனஸ் ஏரிஸில் வெளியிடப் பட்டது. இதன் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அனாதையான குழந்தைகளுக்குச் செலவிட்டார்.


இதற்கிடையே மிஸ்ட்ரலின் அக்கா மகனான 17 வயது மிகுஈயல் இறந்து போனான். இரண்டாம் உலகப் போரினால் மிகவும் மனம் பாதிக்கப் பட்டிருந்த மிஸ்ட்ரலுக்கு இம்மரணம் பேரிடியாக இரங்கியது. இந்த துயரத்தின் அவரது இறப்பிற்கு முன்னால் அவர் எழுதிய கடைசித் தொகுதியின் அலைகளானது. லாகார் (Lagar) எனும் அத்தொகுதி சில பிரிவுகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. சிலி கவிதைகள் (Poema de Chile) என்ற தலைப்பில் இதன் கடைசித் தொகுப்பு மிஸ்ட்ரலின் மரணத்திற்கு பின்பாக அவரது நண்பரான டோரிஸ் டானா என்பவரால் வெளியிடப்பட்டது. இக்கவிதைத் தொகுதி மிகவும் அற்புதமான படைப்பாக இருந்தது.

1945ம் வருடம் மிஸ்ட்ரலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஸ்ட்ரல் இப்பரிசைப் பெற்ற முதல் லத்தீன் அமெரிக்கரும் நோபல் பரிசு பெரும் ஐந்தாவது பெண்மணியுமாய் இருந்தார். ஸ்வீடன் நாட்டரசரான கஸ்டாவிடமிருந்தும் விருது பெற்றார். பிறகு நெடுநாளாய் வழங்கப்படாதிருந்த சிலிநாட்டின் உயரிய தேசிய இலக்கிய விருதும் மிஸ்ட்ரலுக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியா நாட்டின் கல்லூரி இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

உடல் நலம் குன்றியதால் மிஸ்ட்ரல் பயணங்களைத் தவிர்த்தார். தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியை நியூயார்க் நகரில் கழித்தார் புற்று நோயால் கணையம் பாதிக்கப் பட்டு தனது 67ம் வயதில் இறந்தார் சிலி நாட்டு அரசு அவரது மறைவுக்கு மூன்று நாட்கள் விடுமுறையுடன் துக்கம் அனுஷ்டித்தது.
*

இயற்கையின் நுட்பங்கள் மிளிரும் மிஸ்ட்ரலின் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த ஒன்றை இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.
*

இப்போது நாம் வனம் புகலாம்
மரங்கள் உன் முகங்கடந்து போக
நானங்கு நின்று உன்னை
அவற்றுக்கு அர்ப்பணிப்பேன்
ஆனாலும் அவற்றால் வளைந்து
உனைப் பெற இயலாது.
இரவு கவனித்தபடியிருக்கிறது
தனது உயிரினங்களின்
பருவ மாற்றத்தை
என்றும் மாறாப் பைன்மரங்களைத்
தவிர்த்து.
பழைய ரணங்களுடன் பிசின் துளிர்க்கின்றது
ஆசீர்வதிக்கப்பட்ட கோந்து மரங்களில்
சாஸ்வதமான பிற்பகலில்.
இயலுமெனில் இம்மரங்கள்
உனை வாரியணைத்துத் தூக்கிச்செல்லும்
ஒரு பள்ளத்தாக்கிலிருந்து இன்னொன்றுக்கு.
நீயும் ஒரு தந்தையிடமிருந்து மறு தந்தையிடம் ஓடும்
குழந்தையெனச் செல்வாய்
ஒரு கரத்திலிருந்து மறுகரத்திற்கு

மூலம் : கேப்ரியல் மிஸ்ட்ரல்
மொழிபெயர்ப்பு : தாரா கணேசன்

2 comments:

  1. Madam pls.translate (Tamil)this page
    Willliam shakespears Drama HENRY V
    யாராவது மொழி பெயர்த்து தாறுங்கள்

    ACT I
    PROLOGUE

    Enter Chorus

    O for a Muse of fire, that would ascend
    The brightest heaven of invention,
    A kingdom for a stage, princes to act
    And monarchs to behold the swelling scene!
    Then should the warlike Harry, like himself,
    Assume the port of Mars; and at his heels,
    Leash'd in like hounds, should famine, sword and fire
    Crouch for employment. But pardon, and gentles all,
    The flat unraised spirits that have dared
    On this unworthy scaffold to bring forth
    So great an object: can this cockpit hold
    The vasty fields of France? or may we cram
    Within this wooden O the very casques
    That did affright the air at Agincourt?

    ReplyDelete
  2. Sennakkalvalasu T.Selvaraju said...

    Madam pls.translate (Tamil)this page
    Willliam shakespears Drama HENRY V
    யாராவது மொழி பெயர்த்து தாறுங்கள்

    ACT I
    PROLOGUE

    Enter Chorus

    O for a Muse of fire, that would ascend
    The brightest heaven of invention,
    A kingdom for a stage, princes to act
    And monarchs to behold the swelling scene!
    Then should the warlike Harry, like himself,
    Assume the port of Mars; and at his heels,
    Leash'd in like hounds, should famine, sword and fire
    Crouch for employment. But pardon, and gentles all,
    The flat unraised spirits that have dared
    On this unworthy scaffold to bring forth
    So great an object: can this cockpit hold
    The vasty fields of France? or may we cram
    Within this wooden O the very casques
    That did affright the air at Agincourt?

    ReplyDelete