Wednesday, July 1, 2009

ஐரிஸ், என் செல்லமே!




முறிந்த புயல்கிளையென
நீரில் தலைகீழாய் தொங்கியது ஏன், என் செல்ல மீனே
அகன்ற செதில்களில் முத்தின் ஒளிசிதற
நிற்காத அலையென நீந்தினாயே ‘ஐரிஸ்’
துடுப்புக்கு பதிலாய் இறக்கைகள் இருந்திருந்தால்
நீயோர் பிரம்மாண்ட வெண்புறா
இயந்திரங்களின் பிராணவாயு நிரம்பிய
உனதிந்தச் சிறிய கடல் உன் அகால மரணத்திற்கான
எந்த சாட்சியமுமற்று அசைகிறது நீர்க்குமிழிகளுடன்
குறுக்கு வெட்டில் அலைந்து கொண்டிருந்த உனது
பெருமென்னுடலை உயிரற்று ஏந்திக்கொண்டிருக்கிறது
அமைதியாய் இந்த கண்ணாடிச் சவப்பெட்டி
காயச்சண்டிகையின் தீராப்பசியுடன்
தங்க மீன்களுண்ட உன் அகன்ற பெருவாய் அசைத்து
உனது இறப்பிற்கு முந்தய ஏழு தினங்களும்
நீ உபவாசமிருந்ததன் காரணம் சொல்வாயா?
மரணத்திலும் விரைக்காத உன்னுடல்
காக்காய்ப் பொன் மின்னலெனத் தகதகக்கிறது
உன்னோடு நீந்திய குஞ்சு மீன்கள்
உன்னிடமிருந்து தப்பிய மகிழ்வில்
நீந்தியலைகின்றன உன்னருகே பயமற்று
கம்பீர மச்சமே, பாற்கடலில் அப்ஸரஸ்களின்
நிர்வாணம் நீந்தச் சொல்லாமல் போனாயோ
நிலைகுலைந்த உன்னுடல் கண்டு பதறி
கொலையுண்ட கோவலனின் கண்ணகியாய் கதறுகிறேன்
ஒரு நீர்விலங்கின் மரணத்திற்குப் புலம்பும்
பைத்திய மீன்காதலியின் துக்கங்கண்டு
நீந்தும் குஞ்சுமீன்கள் அசைவற்றுத் திகைத்து நிற்கின்றன
மரித்த மீனுக்கான தேற்றுவாறற்ற துக்கத்தில்
பின் தோட்ட மாமரந்தின் அருகே புதைக்கிறேன் உன்னை
என் பிரிய வானவில் தேவதையே
இனி மீண்டும் அம்மரம் பூக்கும் காலத்தில்
அது மீனின் வாசம் வீசும்
உறைந்த உன் ரத்தம் அதன் கனிகளாய்ப் பழுக்கும்

2 comments:

  1. உங்களின் இறக்கை முளைக்காத வெண்புறா “ஐரிஸ்”க்கு என் அஞ்சலி.தொட்டிமீனை வைத்து, அனுபவித்து எழுதியுள்ள இக் கவிதையை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. என் மகள் ஐரிஸுக்கு அஞ்சலி செலுத்தும் நண்பனே... நன்றி!

    ReplyDelete