யார் தருவார் இந்த அரியாசனம்?
தாரா கணேசன்
தாரா கணேசன்
(நன்றி :அம்ருதா - ஜூலை, 2009)
கரோல் ஆன் டஃபி (Carol Ann Duffy)
வியப்பில் உலகமே திரும்பிப் பார்க்கிறது. இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்திருப்பது தான் இதன் முக்கிய காரணம். உலகின் பெருவியப்புக்கும் இங்கிலாந்துச் சரித்திரத்தின் திருப்பத்திற்கும் இடையே பெருமிதமாய் நிற்கிறார் கரோல் ஆன் டஃபி.
சுமார் 341 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர் (Poet Laureate) எனும் சிம்மாசனத்தை எட்டிப் பிடித்த ஸ்காட்லாண்டின் முதல் பெண்மணியான இவர் ஒரு அற்புதமான கவிஞரும், நாடக ஆசிரியருமாவார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் அரசவைக் கவிஞரான டஃபி ஒரு இருபால் உறவினர் (bisexual) என்று பகிரங்கமாய் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் புதிய அரசவைக்கவிஞராக இந்த ஆண்டின் மே மாதம் 1ம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ள 53 வயதான டஃபி, 1955ல் கிளாஸ்கோவில் பிறந்தவர். அரசவைக் கவிஞராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இவர் மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியத்தின் தலைவர் பதவியிலிருக்கிறார்.
டஃபி ஆழ்ந்த கற்பனைவளம் மிக்கவரென்றும், அனுபவங்களையும் உணர்வுகளையும் வார்த்தைக்கோர்வைகளாய் எளிதில் மாற்றக்கூடிய திறனுள்ள அற்புதமான நவீன கவிஞரெனறும் இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரவுனால் (Gordon Brown) பாராட்டப்பட்டவர். மிகவும் புகழ்வாய்ந்ததும் பெருமைக்குரியதுமான இந்த அரசவைக் கவிஞர் பதவியை அடைந்திருக்கும் இவர் தலைசிறந்த இலக்கியவாதிக்குரிய சிம்மாசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் படைப்பாளிகள்.
தனது சிறுவயது முதற்கொண்டே ஏட்ரியன் ஹென்றியின் கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்ட டஃபி,. ஹென்றியின் ஆழ்ந்த வாசகியாகி இவர் ஒரு எழுத்தாளராய் அறியப்படவேண்டும் என்றே விரும்பினார். ஏட்ரியன் ஹென்றி இங்கிலாந்தின் மிக முக்கியமான சமகால பின்நவீனத்துவக் கவிஞரும் ஓவியரும் ஆவார். மிகவும் அதிகமான அளவில் விற்பனையை அள்ளிக்குவித்த கவித்தொகுப்பான தி மெர்ஸே சவுண்ட் எனும் புத்தகத்திற்காக இங்கிலாந்து இவரையும் இன்னும் பிரையன் பேட்டென் மற்றும் ரோகெர் மேக்கௌவ் ஆகியோரையும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

தனது 20வது வயதில் Fleshweathercock and Other Poems என்ற முதல் கவிதை நூலை வெளியிட்ட டஃபி, 22ம் வயதில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலிருந்து தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருபதாவது வயதில் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய டஃபி இன்று உலகே வியக்கத்தக்க வகையில் இங்கிலாந்தின் மதிப்பிற்குரிய மிக உயரிய அரசவைக் கவிஞர் எனும் பதவியினை அடைந்துள்ளார். இடைவெளிகள் ஏதுமின்றித் தொடர்ச்சியாக இலக்கியத்திற்க்கெனத் தனது பங்களிப்பைச் செய்துள்ள இவர் இதுவரை பல கவிதைத் தொகுதிகளையும் நாடகங்களையும் சிறுவர்களுக்கான புத்தகங்களையும் இயற்றியுள்ளார். தானொரு புகழ்பெற்ற நாடக ஆசிரியராக இருப்பதோடு மட்டுமின்றி லிவர்பூலின் தலைசிறந்த நாடக அரங்குகளிலும் லண்டனின் புகழ்வாய்ந்த அல்மீயிடா அரங்கிலும் நடித்தும் இருக்கிறார். டேக் மை ஹஸ்பண்ட், கேவர்ன் ஆஃப் ட்ரீம்ஸ், லிட்டில் வுமன் ஆகியவை இவரது நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். The World's Wife எனும் படைப்பு இவரது எழுத்துகளுள் தலைசிறந்தாகக் கருதப்படுகிறது.
காலம், ஏமாற்றம், மற்றும் மாறுதல்கள் குறித்த பல படைப்புகளை உருவாக்கியுள்ள இவர் குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாய்ச் சித்திரம் போல் தீட்டும் வல்லமை உள்ளவர். விடலைப் பருவம் மற்றும் வாலிபப் பருவத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை காதல், நினைவுகூர்தல் ஆகிய பாதைகள் வழியே மொழியின் ஆளுமையால் கைக்கொண்டு அனுதினமும் நிகழ்கின்ற வாழ்வின் அன்றாடங்களை அனுபவப் பதிவுகளாக்குவதோடன்றி தனதும் பிறரதுமான மாய உலகினையும் அற்புதமாய்ப் படைக்கும் திறனுள்ளவர்.
லிவர்பூலில் இருந்த காலத்தில் கவிதைக்கான ஆழ்ந்த விதை அவருக்குள் ஊன்றப்பட்டதற்கான முக்கிய காரணம் ஏட்ரியன் ஹென்றியோடான அவரது இலக்கிய உறவுதான். சமகாலக் கவிஞர்களுள் மிக முக்கியமானவராக அறியப்படும் டஃபி அற்புதமான கவிஞர் மட்டுமின்றி பல உயரிய விருதுகளையும் தனக்குரித்தாக்கிக் கொண்டவர்.
1983ல் தொடங்கி இன்றுவரை ஒவ்வோர் வருடமும் ஒவ்வோரு விருதினை வாங்கிக்குவித்த பெருமைமிக்கவர் டஃபி என்பது பெரிதும் வியப்புக்குரியது. எரிக் கிரிகோரி விருது, Standing Female Nude எனும் படைப்பிற்கான ஸ்காட்லாண்டின் ஆர்ட் கவுன்ஸில் விருது, Selling Manhattan எனும் படைப்பிற்காக சாமர்செட் மாம் விருது, கவிதைகளுக்காக டைலன் தாமஸ் ப்ரிசு, The Other Country படைப்புக்காக இரண்டாம் முறையாக ஸ்காட்லாண்ட் ஆர்ட் கவுன்ஸில் விருது, கோல்மாண்டெலே விருது, Mean Time படைப்பிற்காக விட்பிரட் விருது, லானென் விருது, சிறுவர்களுக்கான கவிதை விருது, விஞ்ஞான, பொறியியல் மற்றும் கலைக்காக வழங்கப்படும் நேஷனல் எண்டோவ்மெண்ட் விருது, Rapture படைப்பிற்காக டி.எஸ் எலியட் பரிசு என்று விருதுகளும் பரிசுகளுமாக வாங்கிக் குவித்தவர்.
கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளாக தனக்கென இலக்கியத்தில் ஓர் இடத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ள சமகாலக் கவிஞரான டஃபி கல்லூரி மணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர்கள், சாதாரண வாசகர்கள், என்று பல்வேறு தளங்களிலிருதும் பெரும் வரவேற்பு பெற்றவராகவும் திகழ்கிறார்.
டஃபிக்குள் இருக்கும் கவிஞரைப் புரிந்து கொள்வது சுலபமல்ல. சிக்கலான உள்மனம் அவருடையது. சில சமயங்களில் அதீதமான காதல் வயப்பட்ட கவிதைகளாகவும், சில சமயங்களில் செறிவான அரசியல் கவிதைகளையும் எழுதும் இவரது படைப்புகள் உற்சாகமூட்டக்கூடியதாகவும் இறை உணர்வை மறுப்பவையாகவும் அதே நேரத்தில் நகைச்சுவையானதாகவும் அமைந்துள்ளன.
திருமதி. லாஸரஸ்
மூலம் : கரோல் ஆன் டஃபி
மொழிபெயர்ப்பு: தாரா கணேசன்
நான் துக்கித்திருந்தேன் ஒரு முழு இரவும் பகலும்
இழப்பைக் குறித்து அழுது கிழித்தெறிந்தேன்
மணப்பெண் உடையை எனது மார்பிலிருந்து
கதறி விழுந்தழுது ஓலமிட்டு இரத்தம் பெருகும் வ்ரை
எனது கரங்களால் கல்லரை கற்களைப் பிராண்டி
ஓங்கரித்தேன் அவன் பெயரை திரும்பத் திரும்ப
மரித்தான் மரித்தானென்று
வீடு திரும்பி, வெறுமையில் மனமுடைந்து
ஒற்றைக்கட்டிலில் உறங்கினேன் விதவையாய்
ஒரு வெற்று கையுறை, துசுகள் படிந்த
வெண்தொடையெலும்பு, ஒரு கருப்புப் பையில்
பாதி திணிக்கப்பட்ட ஆழ்வண்ணக் காற்சட்டை
ஒரு இறந்த மனிதனின் காலணியுடன் இடம் பெயர்ந்து
என் வெற்றுக் கழுத்தை இறுக்கினேன்
‘டை’யினால் இரு-சுருக்கிட்டு
நிலைக்கண்ணாடியில் தன்னைத் தானே தொட்டுணரும்
நோயுற்று மெலிந்த கன்யாஸ்த்ரீயின்
ஆழ்துயர் நிலைகளை நான் கற்றுணர்ந்துவிட்டேன்
எவ்வித பிடிமானமுமற்ற சட்டங்களில்
குறியீடாயிருக்கிறது எனது முகம்
ஆனால் இதற்குள் அவன் என்னை விட்டு விலகிப்போகிறான்
ஒரு சிறிய புகைப்படம் போன்று குறுகிச் சிறுத்து
சிறிது சிறிதாய்த் தேய்ந்தழிந்து போவதுபோல்
போகிறான், அவன் பெயர் அவன் முகத்தை நினைவூட்டும்
மந்திரச்சொல் என்பது மரந்து போகும் வரைக்கும்.
அவனுது சிகையின் கடைசிக் கற்றை
புத்தகத்தில் இருந்து பறந்து போனது
அவன் வாசனை வெளியேறியது வீட்டை விட்டு.
வாசிக்கப்பட்டது உயில். என் தங்க மோதிரத்தின்
சிறிய பூஜ்யத்திற்குள்ளாக அவன் கரைந்து போகிறான்
பிறகவன் போய்விட்டிருந்தான்
பிறகவன் நிலையான காவியமானான், அழியா மொழியானான்
இருபுறமும் வேலிச்செடிகள் அடர்ந்திருந்த பாதையில்
அந்தப் பள்ளிக்கூட ஆசிரியரின் தோள் மீது கரம் வைத்த போது
ஒரு ஆணின் வலிமை திடுக்கிட்டு அதிரவைத்தது
அவனது மேல்கோட்டுச் சட்டைக்கையின் அடியில் இருந்து
ஆனால் நான் இயன்றவரை
உண்மையாய்த்தானிருந்தேன்
அவன் வெறும் நினைவாகிப்போகும் வரை
ஆக, கம்பளிப்போர்வை போல்
அருமையான காற்று வீசிய அம்மாலையில்
வயல்வெளியில் நிற்க முடிந்தது
நான் குணமாகி விட்டிருந்ததால்
வானில் நிலவின் விளிம்பைக் காண இயன்றது
ஒரு புதரிலிருந்து ஒரு முயல் குதித்தோடியதையும்
அந்த கிராமத்து மனிதர்கள் என்னை நோக்கி
உரக்கக் கத்தியவாறு வந்து கொண்டிருந்ததையும் கூட
கவனிக்க முடிந்தது
அவர்களுக்கு பின்னாலிருந்த அந்தப் பெண்களை,
குழந்தைகளை, குரைக்கும் நாய்களை எனக்குத் தெரியும்,
அந்த ஏமாற்றும் விளக்கொளியில்
அந்த இரும்படிப்பவனின் முக பாவனையிலும்
அந்தக் கேளிக்கை அரங்கிலிருந்த பெண்ணின்
நடுங்கும் விழியிலும்,
என்முனனே கலைந்து போன கூட்டத்திலிருந்து
என்னைக் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்ட கரங்களிலும்
எனக்குத் தெரிந்துவிட்டது
அவன் உயிரோடிருப்பது, அவனது முகத்தில் கண்டேன் அந்த பயங்கரத்தை
அவனது அம்மாவின் கிறுக்குத்தனமான பாடலைக் கேட்டேன்
அவனது துர்நாற்றத்தை சுவாசிக்க முடிந்தது
என் மணமகன் தனது அழுகிய மரணஅங்கியில்
கல்லரையிலிருந்து சரியும் மணலின் ஈரத்துடன்
அவனது பெயரை தவளையின் குரலில் உச்சரித்தபடி
காலத்தினுள்ளிருந்து வெளிவந்தான், தன்னுரிமையிழந்து,
*
இங்கிலாந்து அரசவைக் கவிஞர்களின் காலக்கோவை
1617: பென் ஜான்ஸன்
1638: சர் வில்லியம் டேவனண்ட்
1668: ஜான் ட்ரைடென்
1689: தாமஸ் ஷாட்வெல்
1715: நிகோலஸ் ரோவ்
1718: லாரன்ஸ் இயூஸ்டென்
1730: கோலே சைபர்
1757: வில்லியம் வொயிட்ஹெட்
1785: தாமஸ் வார்ட்டன்
1790: ஹென்றி ஜேம்ஸ் பை
1813: ராபர்ட் சௌத்தே
1843: வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
1850: ஆல்பிரட் லார்ட் டென்னிஸன்
1896: ஆல்பிரட் ஆஸ்டின்
1913: ராபர்ட் பிரிட்ஜ்
1930: ஜான் மேஸ்பீல்ட்1967: செசில் டே லூயிஸ்
1972: சர் ஜான் பெஞ்சமன்
1984: டெட் ஹக்ஸ்
1999: ஆண்ட்ரூ மோஷன்
2009: கரோல் ஆன் டஃபி
No comments:
Post a Comment