Thursday, July 2, 2009

நிலைக்கண்ணாடி


கமலா தாஸ் கவிதைகள்.

மொழிபெயர்ப்பு : தாரா கணேசன்

நிலைக்கண்ணாடி

உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம்
எனினும், உனது தேவைகளில் மட்டும் நேர்மையாயிரு
ஒரு பெண்ணாக. நிலைக்கண்ணாடியின் முன் நின்றுபார் அவனுடன்
தன்னை அவன் வலியவனாய் நம்புவதற்கும், அவனைவிடவும்
மென்மையான, இளமையான, அழகானவளாய் உன்னை அறிவதற்கும்.
உனது உவகையின் விம்முதலை ஒப்புக்கொள்.
அவனது ஆணுடலின் நேர்த்தியை கவனி, குளிக்கும் போது
அவன் விழிகள் சிவப்பை, குளியலறைத் தரையில் வெட்கிய
நடையினை, துண்டினை அவிழ்த்தெறிந்து, சற்றே நடுக்கமுடன்
அவன் சிறுநீர் கழிப்பதை. அவனை ஆணென்றும்
உனக்கான ஒரே ஆணென்றும் விவரிக்கும் உனக்கு விருப்பமான
எல்லா நுணுக்கங்களையும். எல்லாவற்றையும் அவனுக்கு வழங்கு.
எது உன்னைப் பெண்மையாக்குகிறதோ அதனை பரிசாய்க் கொடு அவனுக்கு.
உன் நீண்ட கூந்தலின் வாசனையை, முலைகளிடையே துளிர்க்கும்
வியர்வையின் கஸ்தூரி மணத்தை, தூமையின் அதிர்வூட்டும் இளஞ்சூட்டை,
இன்னும் உனது முடிவற்ற பெண்மையின் மிகுபசியை. ஓ, ஆமாம்,
உன்னை விரும்பிட ஒரு ஆணை அடைவது சுலபம், ஆனால், பின்பு
அவனின்றி வாழ்தலையும் சந்திக்கும் துணிச்சலும் வேண்டும்.
நீ பல இடங்களுக்குச் செல்லும் போதும், அறிமுகமற்றோரைச்
சந்திக்கும் போதும், தீராத தேடலை அவர்களில் முடித்து வைக்கும்
உனது கண்களோடும், அவனது கடைசிக் குரல்
உனது பெயர் சொல்லியழைத்ததை மட்டும்
கேட்ட செவிகளோடும், அவனது ஸ்பரிஸத்தின் கீழே
மெருகூட்டிய பித்தளையென ஒளிர்ந்து
தற்போது பழுப்பேறி அநாதரவான உடலோடும்.

1 comment: