இந்த வாரம் படித்த புத்தகம்
அகம் புறம் (வண்ணதாசன் / விகடன் பிரசுரம்)
அகம் புறம் (வண்ணதாசன் / விகடன் பிரசுரம்)
தூரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது ஒரு நெருப்பு. வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, சிவப்பு நிறங்களுடன். அந்த நெருப்பு நெருங்கி வருகிறது. அருகில் நெருங்க நெருங்க பெரும் நெருப்பாகிறது. கடலில், காற்றில், நிலத்தில், வெளியில் எங்கிலும் அந்தத் தீ. பஞ்ச பூதமெரிக்கும் ஓர் பெரும் பூதம். எரிகிறது எல்லாமும் அத்தீயில். அப்படி ஓர் தீ “அகம் புறத்தின்” ஓர் அத்யாயத்திலும் எரிந்தது. எழும்பிய ஜ்வாலையின் சிதறலில் இருந்து புழுக்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. பெயர் தெரியாத விதவிதமான புழுக்கள். கடலில் பாதி மூழ்கியிருந்தது நெருப்பின் கோளம். அதிலிருந்து ஊர்ந்து கடல் பரப்பிலெங்கும் நெளிந்த்தன புழுக்கள். கடற்கரையில் காலிடருகிறது.. குனிந்து பார்த்தால் எங்கும் சிதறிக்கிடக்கின்றன மண்டையோடுகள். சில கால் பட்டு உருண்டோடுகின்றன. அவற்றின் கண் குழிகளிலிருந்து நெளிந்து நகரும் புழுக்கள். கடலின் பரப்பிலிருந்து பெருஞ்சிறகு விரித்து வருகிறதொரு கடற்பறவை. அது மனங்கொத்தி. புழு பொறுக்க வருகிறது. புழுக்களின் பெயர் அபிதா. . . கருப்பட்டி . . . கரியன் . . . இன்னும் என்னென்னவோ.
அகத்திலிருந்து புறத்திற்கும் புறத்திலிருந்து அகத்திற்கும் இடையே ஒரு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது. வளைய வளையாமாய் புகைச்சங்கிலியில் ஆடுகிறது அந்த ஊஞ்சல். கீழிருந்து எரியும் தீ நாக்குகள் காளிங்கன் தலைபோலெழும்பி ஊஞ்சலைத் தீண்டுகின்றன. அதில் அமர்ந்து ஆடியபடியிருக்கிறேன்.
சிதைந்த மனவெளிகளிலிருந்து மீள்வது சுலபமல்ல. நிகழ்ந்த நிகழ்வுகளும், நிகழ்த்திக்கொண்ட நிகழ்வுகளும் வாழ்வின் நெரிசலான இடிபாடுகளுக்கிடையிலான படிமங்களாகிப்போகின்றன. எப்போதவை அகத்திலிருந்து புறத்தில் வந்து விழும் என்று தெரிவதேயில்லை. தானாகவே இயல்பாய் வெளிப்படுமோ அன்றி ஏதேனும் தாக்கம் உருவாக்கும் அதிர்வுகள் வெளிக்கொணருமோ தெரியாது. ஆனால் என்றாவது எப்போதாவது எப்படியாவது வெளிப்படும்; அக அடுக்குகளின் சிதிலங்கள் சில்லுச் சில்லாகவோ, தூள் தூளாகவோ அல்லது தூசு மண்டலமாகவோ. அப்படிச் சில துகள்களை என்னுள்ளிருந்து வெளித்தள்ளியிருக்கிறாள் அபி.
துயில் நீங்காத அந்தக் காலை ஓசைகளற்று விஷநீலத்தில் விடிகிறது. போக்குவரத்து தொடங்குதற்கு முன்னால் வெறிச்சிட்டிருக்கிறது அந்தச் சாலை. முக்குப்பிள்ளையார் கோவிலில் சவுண்டு ஸ்பீக்கர் கட்டியிருக்கிறார்கள். விடிந்தால் விநாயகர் சதுர்த்தி. கோல்கேட் பல்பொடியின் நுரை கடைவாயில் வழிய அதன் அசட்டு இனிப்புச்சுவையை அனுபவித்து, துப்ப மனமின்றி பராக்கு பார்த்தபடி நிற்கிறேன். நான்கு வயசு இருக்கும் எனக்கு அப்போது. ”துப்புடீ” என்று சுளீரென்று முதுகில் அறை விழ நான் வீறிட்டழுத கணம் இன்னோர் அலறலும் கேட்கிறது
தெருவின் முக்கில் நின்றுகொண்டு பதற்றமுடன் பார்க்கிறாள் பாட்டி. ”கரியன் எரிஞ்சு போயிட்டான்”. ....... யாரோ சொல்கிறார்கள். பல்ப்பொடிச் சாற்றை விழுங்காது துப்பிய வருத்தமும் முதுகில் விழுந்த அடியையும் தாண்டி கரியன் எரிஞ்சு போய்ட்டான் என்ற வாக்கியம் உறைக்கிறது. அவசரமாய் வாய் அலம்பிவிட்டு என்னையும் தூக்கிக்கொண்டு விரைகிறாள் பாட்டியம்மா. திண்ணையில், வெளியில், வாசலில் எல்லாம் கூட்டம். வாசலில் பூம்பாடை கட்டத் தயாராய் இருக்கிறது. பாட்டி விசாரிக்கிறாள் தெருவில். திரும்பி வந்து என்னை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போகிறாள். என் நினைப்பு மறுபடியும் பல்பொடியின் சுவைக்குச் செல்கிறது. அப்புறம் யார் யாரோ பேசுகிறார்கள். எதுவும் ஞாபகமில்லை ”எரிஞ்சு போய்ட்டான் கரியன்” என்பதைத் தவிர.
கரியன் . . . காலில் சங்கிலி கட்டியிருக்கும். மனநிலை சரியில்லாத கரியன். ஏன் அவனுக்கு அந்தப் பெயர் என்றும் தெரியாது. பிள்ளையார் கோயிலுக்கு காலை இழுத்து இழுத்து அவனை பெரிய மீசை வெச்ச ஒருவர் கூட்டி வந்தது தெரியும். சாமியைப் பார்க்காமல் என் கண்ணும் மனசும் அந்த சூம்பிய காலின் சங்கிலியிலேயே கோர்த்துக்கிடந்தது ஞாபகமிருக்கிறது. “ஏன் பாட்டி கரியனை கட்டியிருக்காங்க”ன்னு கேட்டதற்கு ”பாவமூட்டை”ன்னு பாட்டி பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது. அவன் மண்ணெண்ணை ஊத்தி பத்த வச்சுக்கிட்டான்னு பின்னாடி பாட்டி சொல்லித் தெரிந்தது என் பதினைந்தாவது வயதில். மூள சரியில்லாத பிள்ளை, எப்படித்தான் பத்தவெச்சுக்கிட்டானோன்னு பாட்டி புலம்பினாள். நினைவு தெரிஞ்ச பின்னாளில் நினைவு தெரியா வயதில் நடந்த அந்த சோகம் தொடர்ந்தது.
ஆமாம் சோகம் தான் அது. உள்ளுக்குள் பிழியும் உணர்வு தானே சோகம். அதற்கு உறவு தேவையில்லை. இப்போது இரண்டு வருஷத்துக்கு முன்பு பாட்டிக்கு நினைவு தவற ஆரம்பித்த போது (டிம்னீஷியா) அடிக்கடி வெளியே போக ஆரம்பித்தார். ஒருமுறை தெருவை விட்டு விலகிப்போய் வீட்டுக்கு எப்படி வருவதெனத் தெரியாமல் சுற்றியலைந்து, நாங்கள் ஆயிரம் சாமியை வேண்டிக்கொண்டு கடைசியில் கண்டு பிடித்தோம். பிறகு அவர்கள் வெளியில் போகாதிருக்க வாசற்கதவைப் பூட்டி வைத்தோம். . திடீரென்று பூட்டிய கேட்டை உலுக்கி மாரில் அறைந்து கொண்டு கத்தினாள் பாட்டி “கரியன் மாதிரி சங்கிலி போட்டு பூட்டுடீ. நானும் பத்த வச்சுண்டு எரிஞ்சு போறேன்”ன்னு. அப்போது வந்தான் கரியன் மறுபடியும். முகம் ஞாபகமற்ற கரியன். ஆனால் கருகிப்போன முகம் இருந்தது இப்போதென் ஞாபகத்தில் அவனுக்கு. கருகிய விறகுக்கட்டையாய் கை கால்கள். ஆனால் சங்கிலி மட்டும் அப்படியே அதில் பிணைந்தபடி நிழலாடினான். அன்றிலிருந்து பூட்ட முடியாது போனது பாட்டியை என்னால். இன்றைக்கும் இந்தப் புத்தகத்தின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கிறான். அபியின் கையில் இன்னொரு பூவாக. அவளின் கைச்செம்புக்குள் தளும்பும் பாலாக.
பிறகு, 10ம் கிளாஸ் படிக்கிறப்போ சுகன்யா. கன்யாகுமரியின் சூர்யோதயம் மாதிரி முகம். பூத்துக்குலுங்கும் மஞ்சரி மாதிரி அடர்ந்த கண் இரப்பை. கண்ணதாசனின் ”சின்னக்குடை போல் விரியும் இமையும்” என்ற வரி இவளைப் பார்த்துத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். சுருள் சுருளான கேச அடர்த்தியில் நேர் வகிட்டு வெண்மை பளீரிடும். சோழியை குலுக்கிப் போட்ட மாதிரி சிரிப்பு. சிரித்து முடிக்கும் போது தொண்டைக்குள்ளிருந்து ஒரு கீச்சு இழை பிரிந்து மறுபடி தொடர் சிரிப்பாய் விரியும். காப்பர் சல்பேட் நீலத்தில் தீபாவளிக்கு தாவணி வாங்கி என்னையும் அதே வண்ணத்தில் வாங்கச்சொல்ல, நான் துணிக்கடையே தலைகீழாய்ப் புரட்ட அம்மாவின் முகம் இறுகிப் போக, அப்பாவோ பல்லைக் கடிக்க, ஒருவழியாய் கிடைத்தது அந்த நீலம். அந்த வண்ணத்தை அவள் உடுத்தியிருந்த போது மீன் கொத்தி போலிருந்தாள். இரட்டை முந்தானை இடுப்பில் சொருகி கருப்பு சீட்டியில் அதே வண்ணப் பூ போட்ட பாவாடையை லோஹிப் கட்டி “பின்னே... பரையு” என்று மூக்கால் பேசிய மலையாளம், ஒரு கவிதை. பள்ளிகூடத்தில் எதிர்சாரி வீட்டில் துரை. அவன் கற்றது தமிழ் எம் ஏ. அவன் அவளுக்குக் கொடுத்த முதல் கடிதம் தான், நான் வாசித்த முதல் கவிதை. ஒரே வர்ணனை. நான் அவளுக்குப் படித்துக்காட்ட அவளது கன்னமெல்லாம் பிளந்த மாதுளை. கலகலத்த சிரிப்பு. வெட்கம் கலந்த சிரிப்பு. மறுபடி மறுபடி படிக்கப்பட்ட கடிதம் அது.
(எனக்கும் கூட பக்கத்து வீட்டு கராத்தே பையன் [ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான்] மாடியிலிருந்து எட்டாய் மடித்து நடுவிரல் நுனியால் விட்டெறிந்த கடிதம், முற்றத்தில் வீழ அம்மா பியர்ஸ் சோப்பால் முகம் அலம்பும் போது தோய்க்கிற கல் பக்கத்தில் அது விழுந்தது. அதில் சினிமாவுக்கு போகலாமா என்று மட்டும் இருக்க சீ என்று இருந்தது வேறு விஷயம்). இப்படி கவிதை சொட்ட எனக்கும் கடிதம் வந்திருந்தால் நானும் சுகன்யாவாகியிருபேனோ என்னவோ?
சுகன்யாவுக்கு கரைந்து கரைந்து கடிதம் வந்தது. மறைந்து மறைத்து படிக்கப்பட்டது. அடிக்கடி ராமஜெயம் மாதிரி .... மதுரை, Madurai என்று எழுதுவாள் அவள் கிளாஸில் இருக்கும் போது. அதில் துரை இருப்பது அப்புறம் தான் தெரிய வந்தது. ”என்னடி சும்மா கடிதம். படிக்கற வழியைப் பாரு. பரீட்சை வந்தாச்சு” என்று நான் கண்டித்த போது கூட adolescenceஐ மீறி எனக்கு அக்கரை இருந்தது அவளிடம். பரீட்சைக்கு நாலு நாள் முன்னாடி பிரேயர் முடிந்ததும் வனிதா என் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள் - ”சுகன்யா மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்திக்கிட்டாளாம்” என்று.. அவ்வளவுதான் உருவிக்கொண்டது நிலம். மத்யானம் அவள் வீட்டுக்குப் போனோம். யாரும் இல்லை வாசலில். அவள் அக்கா மட்டும் உள் கூடத்தில் இருந்தாள். உள்ளே போகவே பயமாயிருந்தது. மடப்பிறை விளக்கு கூட அவளை எரித்த மிச்ச நெருப்பாய் தெரிந்தது. “சுகன்யாவுக்கு என்னாச்சு” என்று கேட்ட போது வார்த்தையே வரவில்லை. தேவர் மகனில் ரேவதிக்கு வந்தது போல் “வெறும் காத்து தான் வந்தது”. “வாங்கடீ வாங்க. என்னாச்சுன்னு கேக்க வந்துட்டீங்களா. உங்களுக்குத் தெரியாதா அந்த நாயி லவ் பண்ணினது...” என்று அக்கா ஆத்திரமாய் பேச மறுபடி பயம் தொற்றிக்கொண்டது அவளுக்கு என்னவானது என்று. முந்தய நாள் மாலை அவள் என்னிடம் கடைசியாய் சிரித்தபடி கையசைத்துப்போன நினைவு வர உள்ளுக்குள் புழு குடைந்தது. அப்புறம் தெரிந்தது அவள் கொளுத்திக் கொள்ளவில்லை மண்ணெண்ணையைக் குடித்து விட்டாள் என்று. உடல் முழுக்க பொறுபொறுவென அக்கி கிளம்பி வலி பொறுக்க முடியாமல் ஜி.ஹெச். கொண்டு போன பின் அடுத்த நாள் அவளை பாலக்காடு கொண்டு போய் விட்டார்களாம். “சனியன பாலக்காடு கொண்டு போவானேன். அவ எரிஞ்சு தொலச்சிருந்தா ஒரேடியாய் தலமுழுகியிருக்கலாம். இப்போ எத்தன அவமானம் அவளால................” - அக்கா சொல்லிக்கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவேயில்லை. மறுபடியும் மண்ணெண்ணை வேறு ரூபத்தில் எனைத் தொடர்ந்தது சுகன்யா மூலமாக.
இன்னும் அப்பாவின் நண்பர் மகனது மனைவி கல்யாணமான ஆறாம் மாதம் வீணாக கணவனின் மீதான சந்தேகத்தில் ஒரு விடியல் பொழுதில் ஊற்றிக்கொண்ட மண்ணெண்ணை..... ஆஸ்பத்ரியில் துடிக்கத் துடிக்க கருகிக்கிடந்த போது அத்தான்... அத்தான்.... தப்பு பண்ணிட்டேனே... காப்பாத்துங்க அத்தான். உங்கள விட்டுட்டுப் போய்டுவேனா அத்தான் ... என்று கதறியது. எவ்வளவு முயன்றும் அவளைக் காப்பாற்ற முடியாது போனது. ஜான்ஸியின் குரலின் வழியே அந்த நெருப்பும் துரத்திக் கொண்டேயிருக்கிறது.
முன்பு வேலை செய்த அலுவலகத்தில் எனது நண்பர் பத்தரைக்கு வருகிறார். பாஸ் திட்டப் போகிறார் என்று ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிக்கொண்டே கையெழுத்திடுகிறார். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அவளுக்கு. “அப்பா இருக்காங்களா ஆன்டீ. . . அம்மா செத்து போய்ட்டாங்க” - மறுமுனையின் குரல் கேட்டு அதிர்கிறாள் அவள். என்ன சொல்லப்படுகிறதென்று விளங்கியும் விளங்காமலும் பதட்டமும் குழப்பமுமாய் “சார் உங்களுக்குத் தான் போன். உங்க வீட்லேந்து. உங்க சின்னப் பொண்ணு பேசறாள்”. கொடுக்கப் படுகிறது ரிசீவர். பதற்றம் இடம் மாறுகிறது. ஓட்டமும் நடையுமாய் அவர் விரைய, .... புடவையில் தொங்கி..... போனது ஒரு உயிர்.
இப்படி மனோதளத்தில் அதிர்வேற்படுத்திய நெருப்புகள் எத்தனை? மரணங்கள் எத்தனை? அப்படி தீக்குளித்த அல்லது குரள்வளை உடைத்து தொங்கிய அல்லது ஆஸிட் குடித்த அல்லது தண்டவாளத்தில் சிதைந்த எல்லா முகங்களின் மரணக்குறியீடாய் விகடனில் வெள்ளை விழிப்படலம் பிதுங்கி உதட்டில் மரணச்சிரிப்பு வழிய தலைசாய்த்திருந்தது அந்த பொம்மை. தொடரும் வலிகளின், அல்லது வலி உணர்தல்களின் பிரதிபலிப்பாய். கண் முன்னே நிழலாடிய பிம்பம் மறைய வெறும் வெய்யிலில் இன்னும் கண்ணுக்குத் தெரியாத அவர்களின் நிழல் துரத்துகிறது என்னை. அந்த முகங்களின் பிரதிமையை வைத்து குடைந்து கொண்டிருக்கிறது அகம் புறத்தின் எழுத்துப் புழு.
மலை முகட்டில் எதிரொலிக்கும் குரலாக இருக்கிறது அந்த புத்தகத்தின் வாக்கியம்.
“பின் எதற்காக இப்படியெல்லாம் தீக்குளிக்கிறோம்?
அடைந்ததாலா அடைய முடியாததாலா”?
ஐயோ... என்ன செய்து விட்டார்கள் இவர்கள் நமக்கு. நாம் தான் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு. பிறகு ஏன் தொடர்கிறார்கள் இவர்கள் நம்மை, மறதிகளின் பச்சைக்குதிரை தாண்டி.
நேபாளின் தட்சிண்காளி கோவிலில் தரிசன வரிசையில் நான் நின்ற போது கழுத்தறுபட்ட வெள்ளாட்டுக்குட்டியிலிருந்து பீச்சியடித்த அடர்கரும் உதிரம் உதரவிதானத்தில் திடுக்கிட்ட பதற்றத்தை உருவாக்க, குமட்டியது அக்குருதி வாசம். அதுவரை உள்ளங்காலில் பிசுபிசுத்த சிவப்புப் பொட்டுகள் நான் நினைத்தது போல் குங்குமக் கரைசல் அல்ல எனத் தெரிந்த போது மரணம் கருப்பாகத் துள்ளிக்கொண்டுதான் இருந்தது. ருத்திரமாய், உருவம் கூட இல்லாத கல்லில் வடிவமழிந்து போன தட்சிண்காளியின் கற்பிரதிமையில், அந்த விகடன் படத்தின் மண்சுதைச் மரணச்சிரிப்பு தெரிகிறது கண்முன் இப்போது
இதே மரண அவஸ்தையை மறக்க முடியாமல் அடிக்கடி என்னுள் கொண்டுவரும் இன்னோர் ஓவியம் மனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ கவிதைத் தொகுதியின் அட்டைப்படத்திலிருந்தது. ஒரு கரம் அழுத்திய அந்த முகத்தின் ‘மரண விகாரம்’ என்றுமே மறக்க இயலாததாயிருக்கிறாது.
புத்தனை எரித்துக் குளிர் காய்ந்த ஜென் துறவியைப் போல் மரணத்தில் எரிந்த் குளிர்காய்கிறார்களோ இவர்கள்.? எரிதலின் நெருப்பும் எரித்தலின் நெருப்பும் ஒன்றே தானே? அவர்களைக் காவு கொண்ட எரிதலின் நெருப்பு தான் நம் உணர்வுகளை எரித்தலின் நெருப்பா? விலக்கி விரட்டிய பின்னும் திரும்பத் திரும்ப சுற்றிச் சுற்றிக் கண்களை வட்டமிடும் சாக்கடை ‘ஙொய்’ மாதிரி – அல்பாயுசுத் துகள்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன என்னை. கூடவே அந்தப் பெயர் தெரியாப் புழுக்களும் கர்ணன் தொடை மாதிரி என்னைத் துளையிட்டுக்கொண்டேயிருக்கிறது.
”எவருக்கும் பிரியமற்ற
எருக்கம் பூவின் அடுக்காக
அவிழ்கிறது ஞாபகச்சுருள்”
(ஒளிரும் நீரூற்று, தாரா கணேசன்)
அப்படித்தான் அவிழ்கின்றன எனது ஞாபகச் சுருள்களும் அபியைப் பற்றி அகம் புறத்தில் படித்த பிறகு.
சேரனின் ”இப்பொழுது நீ இறங்கும் ஆறு” போல் இறங்கிக்கொண்டிருக்கிறேன். இறங்கும் நதி தானே அருவி. நதிகளெல்லாம் அமைதியாய் ஓடுகின்றன. அருவிகளெல்லாம் தடதடவெனப் பொழிகின்றன. எல்லாம் சென்று ஒரு கடலில் கலக்கின்றன. நனைவர்களைப் போகவிடாமல் இறுத்தி வைக்கின்றன தமது ஈரத்தினுள். மலைகளில் எரிகிறது தீ. வேள்விகளில் எரிகிறது நெருப்பு. விளக்குகளில் குறுஞ்சுடர். விரும்பி நெருங்குபவர்களை எரிக்கிறது நெருப்பு. விழி சிவக்க அசையாமல் சிலையாகி நிற்கிறேன். ஞாபகங்கள் என்னைத் தன்னுள் கரைத்துக்கொள்கின்றன.
No comments:
Post a Comment