Tuesday, May 12, 2009

யவனிகாவின் கவிதை உலகு

யவனிகாவின் மிகை உலகு

ஒரே வரிக்குள் ப்ரபஞ்சத்தையே அடக்கிவிடக்கூடியது எதுவென்றும் புதிரான இருப்பையும் சராசரி வாழ்வையும் ஒரு நொடிக்குள் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிவிடக் கூடியது எதுவெனவும் என்னிடமிருந்த ஒரு மாயக்கண்ணாடியிடம் வினவ, அது எனக்கு ரகசியமாய்ச் சொன்ன பதில் “கவிதை” .

நோபல் பரிசு பெற்ற ஸ்பெயின் நாட்டுக் கவிஞனான ஹுவான் ரேமென் ஹிமேனெஸ் தனது வாழ்நாளில் இவர் 20 கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் நானே எழுதியது போன்ற உணர்வைத் தருகின்ற இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான் நானல்ல
நானே பார்க்க இயலாமல் என்னருகில் நடப்பவனும்
எப்போதாவது நான் சென்று சந்திப்பவனும்
சில சமயங்களில் நான் மறந்து விடுபவனும்
நான் உரையாடும் தருணங்களில்
அமைதியாக இருப்பவனும்
நான் வெறுத்து ஒதுக்கும் போது
இனிமையுடன் மன்னிப்பவனும்
நான் அறைக்குள்ளிருக்கையில்
வெளியே உலவிக்கொண்டிருப்பவனும்
நான் இறந்துவிடுகையில்
உயிரோடு நின்றுகொண்டிருப்பவனுமே
நானாயிருக்கிறேன்


மொழியின் மீதான தீராப்பசிதான் கவிதை உலகிற்குள் வாசகியாய் என்னை வழிநடத்திச் செல்கிறது. இப்படி நான் உலகக் கவிதைகளை தேடித் தேடிப் படித்துக்கொண்டிருந்தாலும் உலகத் தரத்திற்கு சற்றும் குறைவற்ற எழுத்துத் திறமையும் மொழி ஆளுமையும் உள்ள தமிழ்க் கவிதைகளை வாசிக்கும் போது மிகுந்த வியப்படைகிறேன்.

உலகமயமாக்கலில் கரைந்து கொண்டிருக்கும் நமது இருப்பும், இருப்பின் போராட்டங்களின் துன்புறுதலுக்கும் இடையே ஏறி ஏறிச் சருக்கிவிழும் வாழ்விலிருந்து கனவு வரிகளால் நம்மைக் கட்டியிழுத்து வேறோர் உலகிற்கு கொண்டு செல்வது மாதிரியான கவிதைகளைத் தருவதில் யவனிகா ஸ்ரீராமின் பங்களிப்பு அதிமுக்கியமானது. உணர்வுகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தக்கூடிய திறன் உள்ள யவனிகாவின் கடவுளின் நிறுவனமும், சொற்கள் உறங்கும் நூலகமும், திருடர்களின் சந்தையும் இதுவரையில் கண்டிராத வித்யாசமான கவிதை உலகினை அறிமுகம் செய்கின்றன.

பரந்த உலக நோக்குடனான கவிதை செய்யும் இவர் மானுடப் பிரக்ஞையை மறக்கடிக்கக்கூடிய மயக்கந்தரும் சொற்றொடர்களை வைத்து கலகத்தை உண்டுபண்ணக்கூடிய தீவிரமான அரசியல் கவிதைகளை மொழிப்படுத்துகிறார். கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாக இல்லாமல் ஒவ்வோர் வரியிலும் வாசகனை இறுத்தி வைக்கும் வலிமையான சொற்பதங்களையும் காட்சிப் படிமங்களையும் உருவாக்கும் தந்திரம் இவருக்கு கைவந்த கலையாய் இருக்கிறது.

கவிதைக்கான தீவிர மனோநிலையில் செயல்படும் இவர், வழக்கமான சூழல்களையும் உணர்வுகளையும் மட்டுமே கவிதையாக்காது, முற்றிலும் புதுமையான பார்வையுடன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் ஒவ்வொரு அசைவினையும் நுட்பமான பதிவுகளாக்கி அதனை மொழிக்குள் எளிதாய் வசப்படுத்தி விடுகிறார். புலன்களை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாய் தனக்குள் உதிக்கும் காட்சிகளை அல்லது தான் கண்டிருந்த காட்சிகளையோ தொன்ம வேர்களுடனான நவீன விருட்சமாக்கி சீறிப்பாயும் இவரது மொழி ஆற்றல் வியப்பையும் பேரதிர்ச்சியையும் தருவதாய் இருக்கிறது.

கடல் வாணிபமும், கடற்பறவைகளும், கடற்கரை உணவகமும், சுட்ட மீனும், பரவலாய் காணப்படுகின்ற இவரது கவிதகளை நெய்தலின் நவீனம் என்றுகூடச் சொல்லலாம். ஆயினும் எந்த ஒரு சட்டத்திற்குள்ளும் அடைத்து விட முடியாத பிரம்மாண்ட ஓவியமாய் வானுக்கும் பூமிக்குமாய் விரிந்துகிடக்கிறது இவரது கவிதை தீட்டிய கித்தான்.

ஒரே கவிதைக்குள் பலவிதமான மனிதர்களை, அசைவுகளை, நிகழ்வுகளை, விநோதங்களை, அடுக்கிக்காட்டியும் ஒரு குறும்படத்தினைப் போல காட்சிகளை அடுத்தடுத்து வேகமாய் நகர்த்தியும் வெவ்வேறு கோணங்களில் காட்சியின் விரிதல்களையும், ஒரு 3Dயின் வடிவம் போன்று கண்முன் நிறுத்துகிறார் தனது விந்தைக் கவிதைகளின் வழியே.. பொதுவாகவே நீண்ட, இடைவெளியற்ற, கவிதைகள் ஒருவகையான சலிப்பையும், தொடர்வாசிப்பிற்கான இடைஞ்சலையும் உருவாக்கக்கூடுமெனினும் இவரது காட்சிப்படிமங்களில் நாம் உணர்கின்ற அதிர்வலைகளும் ஆச்சர்யங்களும் இவரது கவிதையின் ஒரு மாயச்சுழலுக்குள் அனாயாசமாய் நம்மைச் சிக்கவைத்து அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

பறவைகள் முட்டையிலிருந்து வருவதைப் போல நம்பிக்கைகள் நிலத்திலிருந்து எழுகின்றன (திருடர்களின் சந்தை) என்ற முதல் கவிதையின் வரியில் இருந்து தொடங்குகிறது இவரது கவிதை மீதான நமது நம்பிக்கையும். வாசகனுக்குத் தன் நிலத்தின் அருமையினைக் காட்டுகின்றது காலக் கண்ணாடியில் இவரது மாய வரிகள் உருவாக்கும் பிம்பம். எனது நிலம் எப்போதும் சூரிய பார்வையில் இருக்கிறது - என்ற வரியில் தனது நிலம் குறித்த பெருமையினை கம்பீரமாய் ஒரு அரசனைப் போலச் சொல்ல முடிகிறது இவரால்.

இவரது காயங்களிலிருந்து பெருகும் குருதியை மாந்தி தேனீக்கள் குரூரமாய் ரீங்கரிக்கின்றன.. தன் கனவுகளின் நிலம் வழியே பெயரற்ற யாத்ரீகனாய் பயணிக்கும் இவர் அக்கனவுகளின் கருமசியை கவிதைகளில் துடைக்க, வாசகனின் விழிகளுக்குள் நீள்கிறது அறுந்து போன அவரது கனவின் வேறோர் அடர்ந்த பாதை. இவரது கனா நிலத்தின் இளம் பெண்கள் இரவெல்லாம் இயந்திரங்கள் ஆடைகளுக்குள் துழாவுவதாக முறையிடுவதாய் வருந்தும் இவர் நவீன உலக பெண்களின் வெளிப்படையான காம உணர்வுகளை முகத்தில் அறையும் வண்ணம் நம் முன் வைக்கிறார். வடிவமற்ற கனவுகளுக்கு உடலும் உணர்வும் உயிரும் தருகின்ற இவரது கற்பனை விநோதங்கள், கனவுகளை நுகர்ந்து பார்த்து அவற்றுக்குப் பழங்களின் மெல்லிய மணமிருப்பதாய்ச் சொல்கையில் வாசகனின் நுகர்வுச்செல்களைத் தூண்டி அத்தகைய வாசனை தேடி அலையுமாறு மறைமுகக் கட்டளையிடுகிறார்.

சின்னாளம்பட்டியின் சிறிய தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கும் இவரை, இவரது மாயக் கனவுநிலம் எந்தத் தருணத்தில் உள்வாங்கியிருக்குமென்பது குறித்தே பேராராய்ச்சியொன்று செய்தல் அவசியம். நில அதிர்வினைப்போன்ற விரிசல்களை வாசகனுக்குள் உருவாக்கும் இவர், தம் கவிதைகள் வழியே புதிர் உலகினுள் நுழைந்து வடிவம் மாறி மாறித் திகைக்கும் ஆலிஸ் போலத் தனது உணர்விழைகளை நீட்டியும் குறுக்கியும் அலைகிறார், தனது கனவு நிலமெங்கும் ஒரு மென்னுடல் நத்தையென.

உயரமான கட்டிடமொன்றில் தொங்குமொருவன் விளிம்பில் எச்சமிட வந்த பறவையுடன் உரையாடி மகிழ்வதை எப்படிக் கவிதைக்குள் சிந்தித்திருக்க இயலுமென வியந்து ரோமங்கள் குத்திட்டு நிற்கையில் அந்தப் பறவை தனது காலொட்டியிருக்கும் மகரந்தங்களை அவனது முகத்தில் மஞ்சள் கோடுகளாய் வரைகின்ற நுட்பமான கற்பனை அதீதமான பனியின் சில்லிப்பை நரம்புக்குள் செலுத்துகிறது சப்தமின்றி.

இவர் காட்சிப் படுத்தும் வகை வகையான படிமங்கள் அதிர்வைக் கொடுத்து கலகத்தை விளைவிக்கின்றன. ஒருவிதமான அச்சமூட்டக்கூடிய காட்சிப் படுத்தலும் நம் முன் விரிகின்றன.

கிழிபட்ட காயத்தை தக்கிறவன், சொற்களை புதுப்புது நூல்களாகத் தொகுப்பவன், இறந்தவனின் எச்சங்களைச் சேகரிப்பவன், முதிர்ந்த மூங்கிலைத் துளையிட்டு இசைப்பவன், தொப்பிக்குள் மறைந்திருக்கும் ஓநாய்த் தலையன், என்று இப்படிப் பலவிதமான மனிதர்கள் உலவும் உலகமாய் இருக்கிறது அவரது திருடர்களின் சந்தை. வீடற்றவர்களின் உலகம் என்ற கவிதையில் இவர் காட்டியிருக்கின்ற கவிதைக் கோணங்கள் விஞ்ஞானத்தின் குளோனிங் விந்தைகளையும் விலங்குகளின் உலகத்தையும் மூன்றாம் உலக யுத்தத்தையும் கடைசி மனிதனின் வாழ்வுக்கான தவிப்பையும் உரத்த நியாயங்களாய் பதிவு செய்திருக்கிறது. இன்றுவரை நான் வாசித்துணர்ந்த கவிதைக்ளில் இல்லாத உணர்வுகளின் புகைமப் பிரபஞ்சத்தை என்னுள் நிரப்பியிருக்கின்றன இவ்ரது கவிதைகளின் படிமங்களும், காட்சிப் படுத்தல்களும், கனவின் மாயைகளும்.

இவரது கவிதைகளில் நகரும் கழிவறைகளும், புதுப்பிக்கப்பட்ட ஆலயக் கழிவறையும் நவீனமாக்க வேண்டிய பழங்கழிவறையும் சால்வடோர் டாலியின் நவீன ஓவியங்களை நினைவூட்டுகின்றன.

கடவுளின் நிறுவனத்தின் ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் விதமான உணர்வுகளை உருவாக்க அடுத்தடுத்து நிகழும் பருவ மாற்றத்தினுள் சிக்கித் தவிப்பது போலொரு உணர்வெழுகின்றது. கரும் ரேகை படர்ந்த கூழாங்கற்களையொத்த கண்களின் வெடிப்பிற்குள் அரவங்கள் நெளியக் காணும் இவரது பார்வை மிகவும் விநோதமாய் இருக்கிறது. ஒரு அடர்ந்த வனத்தினூடே நெருப்பென ஊர்ந்து சொல்கிற்து இவரது மொழி. உயிர்வளி மண்டலத்தில் பருவங்களின் காலமாற்றத்தை நத்தைக்கூடுகள் இவரது கனவுலகில் நகர்த்த கானல் தகடுகளில் நீர்ச்சலனமாய் எழுகிற உடலுடன் தனது கவிதையின் மாயநிலத்தை சித்தரிக்கிறார் பிரபஞ்சத்தின் விளிம்புகளைத் தீட்டமுடியா தூரிகையில் மீந்த வர்ணத்தில்.

உடைந்த பற்கள் கொண்ட வேசியினை இவர் எந்த நிலத்தில் கண்டிருக்கக்கூடுமென யோசித்த போது, சாஸரின் “Canterbury Tales”ன் ஒரு கதாபாத்திரமான ஐந்து முறை மணம் செய்து கொண்டபின்னும் பலருக்கு ஆசை நாயகியாயிருந்த, முன்னிரண்டு பற்களின் இடையே அகன்ற இடைவெளிகொண்டவளும், ஒற்றைக் காது செவிடான, தன்னை சீமாட்டி போல் அலங்கரித்துக் கொள்வதில் அளவற்ற விருப்பமுடனும், எல்லோரையும் வாதுக்கு அழைப்பவளாகவும், காமலீலைகளில் கைதேர்தவளுமான Bath நகர ஆசைநாயகியை ஏனோ அவள் நினைவூட்டுகிறாள்.

மொழியை தீராத காமத்துடன் சலிப்பின்றி புணர்கிறது இவரது கவிதை. தூய காமம் முற்றிலும் ஆவியுலகு சேர்ந்தது என்றெழுதப்பட்ட வரிகள் ஆதியுலகின ஏவாளின் கனிந்த புன்னகைக் கீற்றைப் பிரகடனம் செய்கிறது. இவரது காதலியின் சரேலென்ற ஆடைவிலகலில் உலகம் இற்று வீழ்கிறது பிடிமானமின்றி. ஆதாமுக்கும் ஏவாளுக்குமாய் கடவுள் படைத்திருந்த ஏடனும் சாத்தானின் தூண்டுதலில் உண்ட அறிவுக் கனி சரேலென விலக்கிக் காட்டிய நிர்வாணத் துகிலும் ஆதி மனுஷிக்குள் சங்கமித்த முதற்காமமும் அதன் பின்னாக இறைவனின் சபித்தலில் இற்று வீழ்ந்த உலகும் டாவின்ஸியின் இடமிருந்து வலமாய் எழுதப்பட்டுள்ள விளங்கிக்கொள்ள இயலாத விநோதப் புதிராய் யவனிகாவின் கரம்வழியே நம்முன் அவிழ்கின்றன.

உலகம் ஒரு விஷத்துளியைப் போல் அழகானதென்றும் ஆழ்கனவுகளால் பைத்தியம் பிடித்தலைகிறது இப்பூமியென்றும் தனது கூரிய வரிகளால் எழுதிச் செல்கிறார். நிலத்தைப் பாளம் பாளமாக உரித்தெடுத்து மடித்து வைக்கின்ற ஒருவனை உருவாக்கி அவன் மதுசீசாக்களுடன், சில துப்பாக்கி ரவைகளையும், பழஞ்சொற்ச்சுவடியையும் சேகரித்துக் குவிப்பவனாக்கிக் கலகம் விளைவித்து அமைதியாய் தூண்டிலோடு அமர்ந்து கொள்கிறார். சூரியக் கோளம் நுழைவாயிலென அவரது வருகைக்கென தரையில் விழுந்து திறந்து கிடக்க, எழுதப்படாத காகிதம் போல் படபடக்கிறது கடல் இந்தக் கவிஞனின் முன்னே.

கீழ்த்திசையும் மேல்த்திசையும் கடற்பயணம் செய்த யவனனின் அனுபவ முதிர்ச்சி தொனிக்கிறது இவரது கவிதைகளில். கவிதைகளுக்குள் இத்தனை கனவுலகும், விநோதங்களின் அதீதங்களும், காணாத தேசங்களின் மனிதர்களும், செதில்கள் நிறைந்த விசித்திரப் பிராணிகளும் மூழ்கிக் கிடக்க இவர் கிரகங்களை மேருவாக்கி கற்பனைக் கயிறுகட்டிக் கடைந்து நிற்க ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் மேலெழுந்து வருகின்றன கவிதையின் அமிர்தகலசமாய்.

காமத்தின் பரவச்ங்களை இழக்கத் தொடங்கும் போது ஒருவன் ஞானியென நடிக்கத் தொடங்குகிறான் என்று தத்துவார்த்தங்களும் நிறைந்து ந்மமை பிரமிக்க வைக்கின்றன இவரின் கவிதைத் தொகுதிகள்.

கடவுளின் முகத்திற்குக் கூட திடுக்கிடும் வடிவம் கொடுத்திருக்கிறது இவரது தொகுப்பு. காலங்களின் உள்ளோடு மண் அள்ளி வீசுகின்ற துயரத்தின் அழகில் கவிதைகள் ஒலித்தபடி இருக்க கடவுளின் முகத்தை வரைவதாகச் சொல்கிறது அந்த ஓவியம் போன்ற கவிதை

கனவுகளின் புனைவும் மொழியின் செரிவுமாய் அமைந்திருக்கும் இவரது கவிதைகள் காலத்தால் அழியாதவை.


”ஆனால்
அவனுக்கு எப்படித் தெரியும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுதும் இதே முடிவை எடுத்திருப்பது பற்றி”

- சொற்கள் உறங்கும் நூலகம்

1 comment:

  1. ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும், லயித்தும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிற இக்கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete