அப்பாஸ் –க்கு அஞ்சலி
‘வரைபடம் மீறி’, ‘வயலெட் நிற பூமி’, ‘ஆறாவது பகல்’,’ முதலில் இறந்தவனின் கவிதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை நமக்குத் தந்த கவிஞர் அப்பாஸ் அவர்கள் மஞ்சள் காமாலை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு 20-3-2009 அன்று கோயில்பட்டியில் மரணமடைந்தார்.
ஏதாவது
ஒன்றில்தான் மிதக்க வேண்டியிருக்கிறது
தேநீர்க் கோப்பையில்
மாலை சாய்மானத்தில்
குழந்தையின் சிரிப்பில்
புகைப்பின் தனிமையில்
நீ
மிதக்க முடியாதபகல் ஒன்று
துணைக்கு அழைக்கிறது
தன்
தனிமையின் ஜன்னலுக்கு.
...... அப்பாஸ்
...... அப்பாஸ்
கவிஞர் அப்பாஸின் இந்தக் கவிதை ஏனோ அழிக்கவே முடியாமல் மனதில் பதிந்து போன ஒன்று. கவிஞனின் தனிமை, மிதப்பு, வெளி அனைத்தும் ஓவியமாய் தீட்டப்பட்ட கவிதைகளுள் ஒன்று இது. அப்பாஸை 'வரைபடம் மீறி ', 'வயலட்நிற பூமி ' ஆகிய இரண்டு தொகுதிகளும் அவரது உணர்வின் மின்னல்களை எனக்கு அறிமுகம் செய்திருந்தாலும் அவரை நான் சந்தித்தது ‘உயிரெழுத்து’ இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அவரது ”முதலில் இறந்தவன்” புத்தக வெளியீட்டில் தான். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரது தொகுப்பை வாங்கிய பின் சுதீர் செந்திலுடன் உரையாடிய போது அவரை அறிமுகம் செய்துவைத்தார். முதலில் இறந்தவன் என்ற தலைப்பு மிகவும் பிடித்துப் போயிருந்தது. மரணம் சார்ந்த அந்தத் தலைப்பில் இன்னதென்று சொல்லவியலாத ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அந்தத் தொகுப்பின் முதல் பக்கத்தில் தனது கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஒருவித மயக்க நிலை சார்ந்த கவிதைகள் அவை. தனது 49வது வயதில் அவரை மரணம் தனது ஜன்னலிலிருந்து துணைக்கழைத்து தனது வெளியில் அவரை மிதக்க விட்டிருக்கிறது. அவரது மரணம் குறித்த குறுஞ்செய்தி கிடைத்த போது திகைத்து விட்டேன். அவரது “முதலில் இறந்தவன்” தொகுதியின் முதல் பகுதியில் அவரது கையெழுத்து உயிரோட்டமாய் நெளிந்தது. மௌனமாய் அவரது கவிதைகளை வாசிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
No comments:
Post a Comment