Monday, March 23, 2009

அகோர கோரம்




மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது
அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள்
குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது
அந்த இருளின் நிறம்

ரத்த மயமான
அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து
அலைகளுக்கு பதிலாய்
பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து
கொடும்மரணத் தடம் பதிக்கின்றன

காலூன்ற இடமின்றி நிலமெங்கும்
உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு
தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால்
அகோர கோலம் இட்டிருக்கும்
துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள்

உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து
ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க
அக்கினியில் ஆகுதியாயின
மரித்த சடலங்கள்

யுத்தச் சரித்திரங்களின்
சிதிலக் குவியல்களிலிருந்து
மரணத்தின் மஹாகுரூர முகம்
தனது ஆட்காட்டி விரலால்
உதட்டை அகட்டி நாக்கை நீட்டி
அதி பயங்கரமாய் நகைக்கிறது
என் ஈரக்குலை நடுங்கிப் பதற.

உதிரப் புனலில் மிதக்கும்
பிண்டச் சடலங்களின் உயிர்கள்
எழும்பிக் கதறுகின்றன கரங்கூப்பி

நொதித்த சதைக் குவியல்களூடே
மனிதத்துவமற்ற மூர்க்கத்துடன்
அலட்சியமாய் உயர்த்தப்படும்
துப்பாக்கிகளின் விசையழுத்தலில்
ரத்தச் சேற்றின் அடர்ந்த கவிச்சையும்
நிணம் கருகி என்புருகும் நாற்றமும்
எங்கும் படர்ந்திருக்க
பாதாளப் புதைகுழிக்குள்
மரணம் தோய்ந்து கிடக்கின்றது
வெளியேற வழியின்றி
மூச்சுதிணறும் மனித நேயம்

No comments:

Post a Comment