Monday, March 16, 2009

இந்த வாரம் படித்தது
நிசி அகவல் – அய்யப்பமாதவன்
*
காற்றின் வண்ணத்தை ஓவியமாய் தீட்டும் குறும்புத்தனமான முயற்சிதான் கவிதை என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் மேக்ஸ்வெல்.

அமெரிக்கக் கவிஞன் வெண்டலின் வாழ்வைப் புனிதப் படுத்துவதே கவிதை என்கிறார்.

கவிதையை அறிவார்த்தம் சார்ந்து வகைப் படுத்துதல் இயலாதென்றும், அது உண்மையில் கற்பனையின் எரிமலைப் பிழம்பு என்றும், அந்தப் பிழம்பு கொந்தளித்து வெளிபடுதல் ஒரு பூமியதிர்வையே தடுக்கிறது என்று விரிவாகக் கவிதை குறித்துச் சொல்கிறான் பைரன்.

கவிதை என்பது, உணர்வுகளைக் கட்டவிழ்த்தல் மட்டுமல்ல அது உணர்வுகளிலிருந்து தப்பித்தல். அது கவிஞன் தன்னை வெளிப்படுத்துதல் மட்டுமல்ல கவிஞன் தன்னிலிருந்து தப்பித்தல் என்று கவிதை பற்றி அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் சொல்கிறார்.

நிசி அகவல் இந்த சட்டங்களுக்குள் இருக்கும் ஓவியம் போலத் தெரிந்தாலும், நிஜத்தில் அது எந்த சட்டகத்திற்குள்ளும் சிக்கி விடாது நழுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஓரிடத்தில் நிலைகொள்ளாது நகரும் அய்யப்பனின் உணர்வுகள் தம்மைத் தாமே கவிதையாக்கிக் கொண்டிருக்கின்றன என்றுகூடச் சொல்லலாம்.

இரவின் மொழிக்கு ஒரு குரல் இருந்தால் எப்படி இருக்கும்?

இரவின் விளித்தல் ஒரு பறவையில் குரலாக கேட்டிருகிறது அய்யப்ப மாதவனுக்கு.
அதுவும் மயிலின் குரலில் அழைக்கும் இரவு.

அதனால் தான் ”நிசி அகவல்” என்ற அற்புதமான தலைப்பை அவர் தனது தொகுதிக்கு கொடுத்திருக்கிறார் போலும்.

பொதுவாகவே கவிஞர்கள் அனைவருமே இரவுப் பறவைகள் தான்.

நவீன பெண் கவிஞர் ஒருவர் இரவை மிருகமெனப் பார்க்கிறார். ஆனால் அய்யப்ப மாதவனோ அழகியல் சார்ந்து இரவை மயிலாகவும், மயிலின் குரலாகவும் பார்க்கிறார்.
அப்படிப் பார்த்தலோடு நிற்காமல் தானும் ஓர் இரவுப் பறவையாகித் திரிகிறார் இத்தொகுதி நெடுக.

தலைப்பில் மட்டுமல்ல – தொகுப்பு முழுவதிலும் இரவு ஆதிக்கம் செய்கிறது.

இரவு கவிஞரை கிளறுகிறது, அலைக்கழிக்கிறது, போதைகொள்ள வைக்கிறது, பிதற்ற வைக்கிறது, இயலாமையின்.... இருப்பின் வலியுணர்த்துகிறது, மொழியின் போதையேற்றுகிறது, கிளர்த்துகிறது, மோஹிக்க வைக்கிறது, இறுதியில் பித்தாக்குகிறது.

இப்படி, இரவின் படிமங்களாலானதாகவே இருக்கிறது நிசி அகவல். தலைப்புக்கும் தொகுப்புக்குமான இழையோட்டமாக இருக்கின்ற நிசி, கவிஞனின் தொப்புள் கொடி போல அவரை பிணைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட நிசியின் கசிவற்ற கவிதையே இல்லையென்று சொல்லும் அளவுக்கு இந்தத் தொகுப்பெங்கிலும் படர்ந்து கிடக்கிறது இரவு.

இரவோடு இரவாக உறைந்திருக்கிறது காலம்.

நினைவுகள் உரசிக்கொள்கின்றன சிக்கிமுக்கிக் கற்களைப் போல

சிதைந்து போன கவிஞனின் சதைத் துகள்கள் இறந்த காலத்திலிருந்து எழும்பி வருகின்றன மரணப் புழுதியாக.

தேய்ந்து இற்றுப்போன ஒரு புராதன ஓவியம் போல் தன்னுள் படிந்துகிடக்கும் பல காட்சிகளை மீள் பார்த்திருக்கிறார் அய்யப்ப மாதவன்.

இருத்தலுக்கும் பறத்தலுக்குமான போராட்டங்கள், விடியலைப் பற்றி கவலைப்படாத காதலிக்கான நெடுநாளைய ஏக்கம், இழப்பின் வலி, ஏமாற்றங்களின் நெருப்பெரிக்கும் சுடலை மணம், எல்லாமும் விரிகிறது நிசியில் அறுந்து போன, திரைப்படச் சுருள்களாய்.

வண்ணங்களை இசையாய் கேட்கவும், இசையினை வண்ணமாகப் பார்க்கவும் முடிந்திருக்கிற்து அய்யப்ப மாதவனுக்கு.

இரவு எப்படியெல்லாம் விரிகிறது இவரது பார்வையில் என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். யாமத்தில் ராமகிருஷ்ணன் இரவு குறித்து பல்வேறு படிமங்களைத் தந்திருப்பது போலவே, அய்யப்ப மாதவன் - சும்மா போய்க்கொண்டிருக்கும் இரவு, கயிறாய் தொங்கும் இரவு, விடியலில் முறிந்து விடுமோ என அச்சமூட்டும் இரவு, சிகரெட் தீர்ந்து போகும் தருணத்தில் உறைந்து போகின்ற இரவு, கதறி ஓடுகின்ற இரவு, வாடிக்கையாய் இவரைப் புணரும் இரவு, ஆடை கலைக்க வைக்கும் ஓயாத இரவு, மழையில் சிறு சொர்க்கமான அதி நவீன இரவு, போதைச் செடியாய் முளைத்து அட்ர்ந்த வனமான இரவு, இப்படி விதவிதமான இரவுகளை சுயஅனுபவத்தின் இழைகளாக நமக்குக் காணத்தருகிறார்.

இருப்பின் பாரத்தால் கனக்கும் மாலை நேரங்கள், மெல்ல மெல்ல, பசித்தலையும் இருளாகவே மாறிவிடுகின்றன. அந்தச் சிறுபொழுதுத் தனிமையில், சங்கீதம் பெருக்கெடுத்தோட இவரோ புகைவளையங்களுக்குள் சிக்கியபடி இசையில் மூழ்குகிறார். அப்படி சிக்கிக் கிடக்கையில் இவரது புலம்பல்களின் வழியே நீள்கின்ற ஜாமம் புலன்களுக்குள் பிரவேசித்து மூளைக்குள் திறக்கும் கதவின் வழியே வெளியேறிவிட, உறக்கத்தில் உறக்கத்தை அறியாதவனின் தலமாட்டில் அடுத்த நாள் புலர்கிறது.

இரவின் அலைக்கழித்தல்களில் கவிஞனின் மனம் மரணம் பற்றிய உணர்வுகளில் அழுந்துகின்றது. அந்த அழுத்தலின் திணறலானது, ஒளிகசிகின்ற சவப்பெட்டிகளின் மீதான பயணமாகவும், அபினின் தலைசுற்றல்களாகவும் இருக்கிறது. மரணம், இரவு, வாழ்க்கை, காதல், விலைமகள், கடற்கரை, ஒளி, வண்ணம் மது, அபின், போதை, இப்படி எல்லாமும் சேர்ந்து இவரது உணர்வுகளை பித்தக்கொடிகளாய் பிணைத்திருக்கின்றன. அதிலிருந்து இதுவரை கண்டிராத விநோத மலர்களைப் போல உதிர்ந்து கொண்டிருக்கின்றன அய்யப்பனின் கவிதைகள்.

இத்தொகுதியைப் பொறுத்தவரை மூன்று கவிதைகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஒன்றே ஒன்று என்ற தலைப்பில் அமைந்த கவிதை

“இது எந்த இரவு
எத்தனையோ இரவுகளில்
இரவு ஒன்றுதான்
அந்த இரவில் அப்படி இருந்தேன்
இந்த இரவில் இப்படி இருந்தேன்
எந்த இரவிலும் அப்படியும் இப்படியும்
இருக்கவில்லை
ஒரு நொடி
ஒரு மணி
ஒரு பிறப்பு
ஒரு மரணம்
ஒரு இரவு
ஒரு மாயை

வாழ்க்கையே இரவாகப் பார்க்கப் படுகிறது இந்தக் கவிதையில். தத்துவம் இரவின் வலை போல பின்னப்பட்டிருக்கிறது. தன்னை வாட்டி வருத்தி இம்சிக்கும் இரவொன்றில் அலுப்படையும் இவர், அலுப்பின் உச்சத்தில் எத்தனையோ இரவுகளில் நீயும் ஒன்று என இரவுடனேயே தத்துவம் பேசத் தொடங்குகிறார். நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளையில்லை என்பது போல.... ”அந்த இரவில் அப்படி இருந்தேன், இந்த இரவில் இப்படி இருந்தேன், எந்த இரவிலும் அப்படியும் இப்படியும்
இருக்கவில்லை என்று ஆதங்கம் கொள்கிறார்.

அந்தக் நிலைகொள்ளாத தவிப்பின் கணத்தில், இரவின் பக்கங்கள் கவிதைக்குள் புரளத் தொடங்குகின்றன. கடைசியில் இரவை அளக்கத் தொடங்குகிறது இவரது பார்வை. இரவு மறைந்துவிடும் ஒரு நொடிபோல் தோன்றுகிறது. ஆனாலும் அந்த நொடி அவரைக் கடந்து, பிறகு நீள்கிறது விடியலில் மரணமடைய. அப்போது விடியலில் பிறக்கிறது. அந்த ஒரு ஆகச்சிறந்த நொடிக்குள் பிறப்பும் இறப்புமாய் விரிகின்ற இந்த இரவை ஒரு மாயை என முடிவு செய்கிறார். இக்கவிதையில் இரவு என்பது கவிஞனாகவே இருக்கிறது. கவிஞன் தன்னிலை இழத்தலை மரணத்திற்கு ஒப்பாகவும் அம்மரணத்தின் பின்னாக தானே ஆன்மாவாகிவிடும் கணத்தில் அது பிறப்பாகவும் தோன்ற, தனது மரணமும் பிறப்புமான உணர்வையும் அவ்வுணர்வை உருவாக்கிய இரவை மாயை எனவும் சொல்வது போன்றதொரு கவிதை இது. இந்தத் தொகுதியின் மிக அற்புதமான கவிதையாகத் தோன்றுகிறது எனக்கு.

அடுத்தபடியாக, கடலின் நெடும் பரப்பு இவருக்குள் பல அலைகளை உருவக்குகின்றது.
முக்கியமாக இந்த நூலின் இரண்டாவது கவிதை.
கடற்கரை அருகாமையில்
குடியிருப்பைக் கண்டுபிடித்திருக்கிறாள்
மற்றும் ஆண்களிடம் தப்பிப்பதற்கு

இக்கவிதையில் எதோ தொடர்பறுந்தது போல் சட்டெனப் படிமம் மாறுகிறது. பின் அடுத்துத் தொடரும் வரியில்....

கடற்கரையோரக் குடிலொன்றை
கற்பனை செய்துகொண்டேன்

என்று விரிகிறது கவிதை. இப்படிக் காட்சி மாறுகையில் நுணுக்கமான பார்வை விரிய, இக்கவிதை சொல்லும் ஒடுக்கமான ஜன்னல் துளைகளின் வழியாகத் தெரிந்த குட்டிக் கடலும், குட்டி வானமும் காரணமாக இருந்திருக்கலாம். இந்தக் கவிதையின் கடைசி வரிகளில்.... “கடலே ஓர் பெண்ணாகித் அவரிடத்தில் வருகிறது. அந்தப் பெண், கவிதையின் ஆரம்பத்தில் ஆண்களிடமிருந்து தப்ப கடற்கரைக் குடிலை கண்டுபிடித்த பெண்ணா அல்லது வேறொருத்தியா என்ற தீர்மானம் வாசகனிடம் விடப்படுகிறது. இந்தக் காட்சிமாற்றக் கணபொழுதில், மிகச் சாதாரணமான வார்த்தைகளால் புனையப்பட்ட அக்கவிதை ஒர் அற்புதமான இடத்தைச் சென்றடைகிறது.

கடல் போலவே மீனையும் முக்கிய படிமமாய் கையாண்டிருக்கிறார் இவர். அடிக்கடி மச்சகன்னிகள் மீது சவாரி செய்கிறார். சுட்ட மீனும் பச்சை மீனும் சேர்ந்து மிதக்கின்றன இவரது இரவின் நதியில்.

“செதில் வழி” என்ற தலைப்பில் ஒரு மற்றுமோர் கவிதை.
புரண்டோடும் நீரின் ஊடே
அவளும் ஒரு மீன்
ஆழ் நீரில் அலையுமவள்
விருப்பமாய் துடிக்கும் விரல்களிடையே
நழுவிச் செல்கிறாள்
அவள் நுழைய
திறந்துவிட்டேன் என் நதிப்பாதையை
நீந்தும் சூட்சுமத்தில்
சூசகமாய் செதில்கள்
என் பாறைகளை உரசிக்கொள்ளும் விதத்தில்
புரிந்து கொள்கிறேன்,
கொஞ்சமாவது காதலை

பலமுறை வாசித்து அனுபவித்த கவிதையிது. தனக்கு மிகவும் விருப்பமான பெண் தன்னை விட்டு நழுவும்போது உடனே அவளை மீனாக்குகிறது அவரது கவிதையின் மந்திரக்கோல்., அவளது சுதந்திர நீந்தலுக்காகத் தனது நதிப்பரப்பைத் திறக்கிறார். தனது நதியின் பாறைகளில் செதில் உரசிச் செல்லும் அவளின் சுக உணர்வில் தன்னிலை இழக்கிறார். இந்த வரிகள் நெருடாவின் Unity என்ற கவிதையின் சில வரிகளை நினைவூட்டுகின்றன.

How clear is that the stones have touched time
In their fine substance there is a smell of age
And the water that the sea brings from salt and sleep

காலத்தைத் தொட்டுச் சென்ற கற்களின் நுண்ணிய திண்மையில் படிந்திருக்கும் புராதனத்தின் வாடையும், கடலின் உப்பும் உறக்கமும் நிரம்பிய நீரும் இருகிறதென்று சொல்கின்ற இந்தக் கவிதையைப் போல மீனின் செதிலுரசும் பாறை அவளின் காதலை உணர்த்துவது மிகவும் அழகானதோர் கற்பனை. இழப்புகளின் இடையிலும், துயரமிகு வாழ்வின் ஓட்டத்திலும், ஒரு பெண்ணின் தொடலை விடவும், தொடல் குறித்த நினைவில், ம்னசுக்குள் பெருகிக் கட்டவிழும் உணர்வும், உருகுதலும் காதலின் அதீதமாய் இருக்கிறது. இவ்வளவு நுட்பமான, புலன்சார்ந்த கற்பனை ஆச்சர்யத்திற்குரியதாகவும் இருக்கிறது.

அய்யப்ப மாதவனின் ஐந்தாம் கவிதை தொகுதி இது. ஒவ்வோர் தொகுதியிலும் தன் கவித்துவ நோக்கிலும், மொழியின் ஆளுமையிலும், வெளிப்பாட்டு முறையிலும் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார் இவ்ர் என்றே தோன்றுகிறது.

பெண் மொழி குறித்தும் உடல் அரசியல் குறித்தும் பரவலான அலைகள் எழும்பியபடியிருக்கும் நவீனக் கவிதை உலகில் ஒரு ஆணின் கவிதைகள் சிக்கலான உணர்வுகளையும்,முரண்பாடுகளையும் அவலங்களையும் சிதிலங்களையும் வெவ்வேறு தளங்களில் பதிவு செய்கிறது.

இந்தக் கவிதைகளைப் போலவே அய்யப்ப மாதவனைக் தனது புகைப்படக் கவிதையாக்கியிருக்கும் செழியனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. உண்மையில் இந்த அட்டைப் படத்தைப் பார்த்த போது ஆழியில் ரஜனீஷ் புத்தகங்களை தமிழில் போடுகிறார்கள் போலிருக்கிறது என நினைக்கும் அளவுக்கு மாதவனை ஓஷோ-வாக்கியிருக்கிறார் செழியன். அவருக்குப் பிரத்யேகப் பாராட்டுகள்.

பின் அட்டையில் அய்யப்ப மாதவன் இந்தப் நூலில் தேவையற்ற வார்த்தைகளை நீக்கிய விதம் குறித்து இவ்வளவு விலாவாரியாக எழுதியிருக்க எவ்வித அவசியமும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் பின் அட்டையில் “முழுமையாகும் கவிதைகள் பெண்ணில் வீழ்கின்ற நொடிகளாய் ஆவதில் தான் ஆழ்ந்த கிறக்கம்” எனும் கடைசி வரிகளை வாசிக்கின்ற போது பாரசீக கவிஞனான ரூமியின் Thief of Sleep என்ற தொகுப்பின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன

Love is from the infinite, and will remain until eternity.
The seeker of love escapes the chains of birth and death...

உண்மைதான். கவிதை தான் காதல். கவிதை தான் முடிவற்றது. கவிதை தான் நிரந்தரமானது. தேடுபவனே கவிஞன். தப்பித்தலே அவனது கவிதை.

அய்யப்பமாதவனுக்கு கவிதைகளின் மீதிருக்கும் கிறக்கமும் ரூமியின் காதலை போன்றே முடிவற்றது.

Thief of Sleep என்ற ரூமியின் கவிதைத் தொகுப்பின் பின்புற அட்டையும் கூட இதே கருத்தைத்தான் சொல்கிறது.

When you find yourself with the beloved, embracing for one breath
In that moment you will find your true destiny
Moments like this are very very rare

அப்படியோர் அரிதான கணத்தை கண்டடைந்திருக்கும் அய்யப்ப மாதவனுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment